தங்கத் தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது சிலப்பதிகாரத்தின் முக்கிய முழக்கமாகும், இதன் பொருள் ஆட்சி செய்வதில் தவறு இழைப்பவர்களை அறம் (நீதி) எமனாக வந்து தண்டிக்கும் என்பதாகும். இளங்கோவடிகள் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நீதியை நிலைநாட்ட, தவறான தீர்ப்பினால் ஏற்படும் விளைவை உணர்த்த இந்த வரிகளைப் பயன்படுத்தினார். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் சிலப்பதிகாரமும் தெரியாது, அறமும் தெரியாது.
Thank you for reading this post, don't forget to subscribe!
தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற சிறந்த அரசியல்வாதியின் கை பிடித்து அரசியல் அரிசுவடி கற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.Thank you for reading this post, don’t forget to subscribe!
ஆம், அவர்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். அவரின் இயற்கை வேளாண்மை இயக்கம்தான் பெரியாருக்கு பிறகு தமிழ்நாட்டில் கடைக்கோடி ஊர் வரை சென்று சேர்ந்துள்ளது.
என்னது? நம்மாழ்வார் அரசியல்வாதியா? இயற்கை வேளாண்மை இயக்கம் அரசியலா? என்று கேட்கலாம். ஆம், நம்மாழ்வார் செய்தது அரசியல்தான். அதுவும் நுண் அரசியல். ஓட்டு பொறுக்கி, ஊழல் செய்து நாட்டை ஆள்வது மட்டும் அரசியல் அல்ல. இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஏன் பத்திரிகை நடத்துவதும், பத்திரிகையாளர் பணி கூட ஒரு வகையில் அரசியல் பணிதான். இந்திய சுதந்திர போராட்டத்தில் பத்திரிகையாளர்களின் பங்கு மகத்தானது.அதாவது, இயக்க அரசியல். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மூலம் அதைச் செய்தார்.
அதற்குப் பிறகு நம் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு அதைப் பயன்படுத்தினார். இதை நான் மேம்போக்காகச் சொல்லவில்லை. சுமார் 25 ஆண்டுகள் அந்தக் கிழவனின் கைப்பிடித்து நடந்தவன்.
‘’நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’’ என்ற அந்தத் தாடிக்காரனின் வாழ்க்கை வரலாற்று எழுத்துப் பணியை ஒருங்கிணைத்து, மீத்தேன் போராட்டத்தில் அவர் இயற்கையுடன் கலந்த பிறகு மிச்சமிருந்த வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.
நம்மாழ்வாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் கேட்டால், முக்கால்வாசி அரசியலும் கால்வாசி வேளாண் அறிவியலும்தான் பொதிந்து கிடக்கும். ‘’நம்மாழ்வார் 100 வயசு வரையிலும் இருப்பேன்’’ என்று அடிக்கடி சொல்லி வந்தவர் 75 எட்டும் முன்பே சென்றுவிட்டார். அவர் மட்டும் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், செங்கல்பட்டு அல்லது திருப்போரூர் பகுதியில் வானகம் போலக் கானகத்தை உருவாக்கியிருப்பார். காரணம் அரசியல்தான். தலைநகருக்கு அருகில் இருப்பதன் அவசியத்தை அந்தப் பெருங்கிழவன் அறிந்து வைத்திருந்தார்.
ஒரு முறை ஏன் கரூரில் ஏன் வானகம்? என்று கேட்டேன். ‘’காந்தி, வார்தாவில் ஆசிரம் அமைக்கக் காரணம், நாட்டின் மையப்பகுதியிலிருந்து அனைத்து இடதுக்கும் செல்ல வசதியாக இருந்தது. வானகமும் தமிழ்நாட்டில் மையத்தில் உள்ளது தானே. ஆழ்வாரும் மாநிலம் முழுக்கப் போகணும் தானே!’’ என்றார்.
2006-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் சில நாள் அவருடன் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. காந்தி ஆசிரம் போல இயற்கை வேளாண்மைக்கான ஆசிரம் தமிழ்நாட்டில் அமைத்தால் எப்படி இருக்கும் ஐயா? என்று காலை நடைபயிற்சியின் போது கேட்டேன். ‘’ஆம்ய்யா, ஆம்ய்யா’’ என்றார் ஆழ்வார் . உண்மையில் அவருக்கு ஏற்கனவே அப்படி ஓர் எண்ணம் இருந்தது. அதை நான் சொல் வடிவில் சொன்னேன். அதன் பிறகு எகோ ஆசிரமம் அமைக்க வேண்டு என்று பல இடங்களில் தெரிவித்தார். கடைசியில் கரூர் வந்து சேர்ந்தார் என்பது வரலாறு.
நம்மாழ்வார் இயற்கையுடன் கலந்து பல ஆண்டுகள், கடந்த பிறகும் அவருக்கு இணையான தலைவர்கள் இயற்கை வேளாண்மை தளத்தில் உருவாகமல் இருப்பதற்குக் காரணம், அவர் அறிந்த நுண் அரசியல் தெரியாமல் இருப்பதுதான்.
நகை செய்யும் செய்யும்போது சேதாரமாகும் பொன் போல, நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு தொகுக்கும் போது பல அற்புதமான தங்கத் தகவல்கள் விடுபட்டுவிட்டன. இயற்கை வாய்ப்புக் கொடுத்தால், அதைத் தமிழ்கூறும் நல்லுகத்துக்கு வழங்குவேன். பொன் எப்போதும் பொன் தானே!
இயற்கை வேளாண்மை இயக்கத்தை அரசியல் இயக்கமாகக் கொண்டு சென்று தன் வாழும் காலத்திலேயே அதன் வெற்றியைப் பார்த்த அந்தத் தலைவரின் பொற்பாதங்களில் வணங்கி மகிழ்ந்து,
‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே’
நம் நம்மாழ்வாருக்கு பிடித்து நம்மாழ்வாரின் திருவாய் மொழியில் பாமாலை சூட்டினேன்.
-பொன் செந்தில்குமார்
பி.கு: ஏப்ரல் 6-ம் தேதி ஆவணங்கள்படி தான் கோ.நம்மாழ்வார் பிறந்த தினம். இந்தப் பிறந்த தினம் பற்றி நம்மாழ்வார் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்












Leave a Reply