Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

1 கிலோ விதை; 1 டன் உரத்துக்கு சமம்! லாபத்தை 2 மடங்காக மாற்றும் அதிசய செடி!

ICAR-IIHR Bengaluru organized Khet Bachao Abhiyan

ஒரு கிலோ விதை போட்டால் ஒரு டன் உரம் கிடைக்கும். பார்க்கின்சன் நோய்க்கு மருந்தாகும். களைகளை அழிக்கும். நூற்புழுக்களை விரட்டும். இவ்வளவு சக்தி படைத்த ஒரு செடி இயற்கை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது. அதுதான் பூனைக்காலி, அறிவியல் பெயரில் Mucuna pruriens!

Thank you for reading this post, don't forget to subscribe!

கர்நாடகா மாநிலம் ,பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (ICAR-IIHR) முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார் இந்த அற்புத செடியின் பயன்களையும், IIHR நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்த விவசாய வாய்ப்பையும் தமிழ் நேச்சர்  தளத்துக்காக விரிவாக விவரித்தார்.

மண் வளம்; IIHR முன்வைக்கும் முக்கிய ஆயுதமே பூனைக்காலி!

”இன்று இந்தியா முழுவதும் மண்ணின் அங்கக கார்பன் அளவு ஆபத்தான நிலையை எட்டிவிட்டது. ரசாயன உரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிகின்றன, அங்கக தன்மை முற்றிலும் மறைகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு தொடங்கிய கேத் பச்சாவோ அபியான் இயக்கம் நாடு முழுவதும் செயல்படுகிறது. நாடு தழுவிய ‘கேத் பச்சாவ் அபியான்’ திட்டம் 2026 ஜூன் 1 அன்று தொடங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த ஒரு மாத கால பிரச்சாரம், மண் வளப் பாதுகாப்பு மற்றும் வளம் குன்றா வேளாண்மையை  ஊக்குவிப்பதற்காக 2026 ஜூன் 30 வரை நடைபெறும்.

2026 ஜூன் 4 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்த இயக்கத்தின் கீழ் 9.42 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இணைக்கப்பட்டு 17,834 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 3,698 பயிற்சி கூட்டங்களில் 1.57 லட்சம் விவசாயிகளுக்கு அறிவியல் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. வயல்வெளியில் நேரடியாக 8,850 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சமூக வலைதளங்கள் உட்பட அனைத்து ஊடகங்கள் வழியாகவும் சேர்த்து 3.5 கோடி மக்களை இந்த இயக்கம் எட்டியிருக்கிறது. இந்த இயக்கத்தில் IIHR முன்வைக்கும் முக்கிய ஆயுதமே பூனைக்காலி!

2026 ஜூன் 6 -ம் தேதி கர்நாடகாவின் டொட்டபெலவங்களாவில் ICAR-IIHR நடத்திய கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சியில் தொட்டபெலவங்களா, ராமேஸ்வரா, ராம்புரா, ஹத்ரிபுரா, சிக்கஹெஜ்ஜாஜி, தொட்டெஹெஜ்ஜாஜி, நாரணஹள்ளி மற்றும் மதரனஹோசஹள்ளி உட்பட பல கிராமங்களிலிருந்து சுமார் 235 விவசாயிகள் கலந்துகொண்டனர். கர்நாடக மாநில வேளாண்மைத் துறை துணை இயக்குநர் டாக்டர் பங்கஜா மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அர்கா விதை கிட்டுகள், AMC நுண்ணுயிர் கலவை, பூனைக்காலி விதைகள் மற்றும் மாங்கன்று ஆகியவை பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

ICAR-IIHR கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சியில்
ICAR-IIHR கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சியில்

ஒரு கிலோ விதை, ஒரு டன் உரம்!

இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கும், ஆனால் இது உண்மை. பூனைக்காலி விதையை வயலில் தூவி, வளர விடலாம். இதன் காய்களை அறுவடை செய்தும் லாபம் பார்க்கலாம். இந்த செடியை எக்காரணம் கொண்டும் உழுது விடக்கூடாது. அப்படியே மண்ணில் மட்க வைக்க வேண்டும். ஒரு கிலோ விதையிலிருந்து ஒரு டன் தொழுவுரத்திற்கு சமனான சத்தை மண்ணுக்கு கொடுக்கலாம் என்று முனைவர் செந்தில்குமார் தெளிவாக விளக்கினார். இதனை பசுந்தாள் உரம் என்று அழைக்கிறார்கள். இந்த கொடி வளரும்போதே காற்றிலிருக்கும் நைட்ரஜனை பிடித்து வேரில் சேகரிக்கும். மண்ணில் உழுதவுடன் அந்த நைட்ரஜன் நேரடியாக மண்ணுக்கு கிடைக்கிறது.

ICAR-IIHR கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சியின் தொகுப்பு படங்கள்
ICAR-IIHR கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு

களையா? நூற்புழுவா? பூனைக்காலி போதும்!

வயலில் களைகள் வளராமல் தடுக்க வேண்டுமா? பூனைக்காலி போதும். இந்த கொடி மிகவும் அடர்த்தியாக படர்வதால் சூரிய ஒளியே களைகளை எட்டாமல் போகிறது. களை தானாகவே ஒழிகிறது. அது மட்டுமில்லை, மண்ணிலுள்ள நூற்புழுக்கள் என்னும் நிமட்டோட்கள் பயிர்களை அரித்துச் சாப்பிடும். இந்த நூற்புழுக்களை பூனைக்காலியின் வேர்கள் இயற்கையாகவே விரட்டுகின்றன. ரசாயன பூச்சிக்கொல்லிகளே தேவையில்லை!

பார்க்கின்சன் நோய்க்கு மருந்தாகும் விதை!

இங்கே ஒரு வியப்பான உண்மை இருக்கிறது. பூனைக்காலி விதையில் L-DOPA என்ற இயற்கை வேதிப்பொருள் அதிக அளவில் இருக்கிறது. இந்த L-DOPA என்பது பார்க்கின்சன் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் முக்கிய மருந்தின் மூலப்பொருள். அதாவது வயலில் உரமாக பயன்படும் அதே செடியின் விதை மருத்துவத் தொழிலுக்கும் மூலப்பொருளாகிறது. இதனால் IIHR இந்த விதைகளை கொள்முதல் செய்கிறது. விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

எந்த நிலத்தில் வளரும்?

பூனைக்காலி வளர நன்றாக வடிகால் வசதியுள்ள மணல் கலந்த களிமண் நிலம் தேவை. வெப்பநிலை 19 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால் போதும். மழைக்காலத்தில் நடவு செய்யப்படும் இந்த கொடி 120 முதல் 150 நாட்களில் முதிர்ச்சி அடைகிறது. வெப்பமண்டல பகுதிகளில் நன்றாக வளரும் இந்த செடி தமிழ்நாட்டு சூழலுக்கும் மிகவும் ஏற்றது.  கோவை உட்பட பல மாவட்டங்களில் ஒரே நிலத்தில் மூன்று முறை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள். இந்த அதிக சாகுபடி தீவிரம் மண்ணை மேலும் வலிமையிழக்கச் செய்கிறது. அந்த மண்ணுக்கு பூனைக்காலி மிகச் சரியான மருந்து. ஒரு சீசனில் பூனைக்காலி போட்டு, அடுத்த சீசனில் வழக்கமான பயிர் சாகுபடி செய்தால் மண்வளம் குறிப்பிடத்தக்க அளவில் மீளும் என்று IIHR ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.

பூனைக்காலி செடியுடன் முனைவர் இர செந்தில்குமார்
பூனைக்காலி செடியுடன் முனைவர் இர செந்தில்குமார்

IIHR ஒப்பந்த விவசாயம்: விவசாயிகளுக்கு பொன்னான வாய்ப்பு!

IIHR நிறுவனம் விவசாயிகளுக்கு ஒரு அற்புதமான திட்டம் வழங்குகிறது. விதை கொடுக்கிறார்கள், தொழில்நுட்ப ஆலோசனை கொடுக்கிறார்கள், விளைந்த விதைகளை திரும்ப கொள்முதல் செய்கிறார்கள். இதை Seed Buyback Program என்று சொல்கிறார்கள். இதில் சேர விரும்பும் விவசாயிகள் Expression of Interest, சுருக்கமாக EOI, மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முறை மிகவும் எளிமையானது. IIHR விரிவாக்கப் பிரிவை நேரடியாக தொடர்பு கொண்டாலே போதும். விரிவாக்க பிரிவு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறது ”என்று உறுதியாக தெரிவித்தவர் மேலும், தொடர்ந்தார் .

தமிழ்நாடு விவசாயிகளே, இது உங்களுக்கான வாய்ப்பு!

” தமிழ்நாட்டிலும் கேத் பச்சாவோ அபியான்  குறித்து பேச உள்ளேன். ஆம், Isha Foundation – காவேரி கூக்குரல் அமைப்பு ஏற்பாட்டில் வரும் ஜூன் 14-ம் தேதி, திருச்சியில் நடைபெற  உள்ள தென்னிந்திய பழங்கள் திருவிழா மற்றும் உணவுக்காடு வளர்ப்பு மாபெரும் கருத்தரங்கம் & கண்காட்சியிலும் IIHR செயல்பாடுகள் , அவகோடா, கேத் பச்சாவோ அபியான் … உள்ளிட்டவை பற்றி பேச உள்ளேன். வாய்ப்புள்ளோர் வருக.

தென்னிந்திய பழங்கள் திருவிழா& உணவுக்காடு வளர்ப்பு- மாபெரும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி South Indian Fruit Festival and Food Forest Cultivation- Mega Seminar and Exhibition
தென்னிந்திய பழங்கள் திருவிழா& உணவுக்காடு வளர்ப்பு- மாபெரும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

இறுதியாக ஒரு வார்த்தை

354 மில்லியன் மெட்ரிக் டன் வேளாண் உற்பத்தி இருந்தும் ஏற்றுமதி சந்தையில் தரமின்மை காரணமாக ஏராளமான விளைபொருட்கள் நிராகரிக்கப்படுகின்றன. அளவு அதிகமாக இருக்கிறது, ஆனால் தரம் இல்லை. பூனைக்காலி போன்ற இயற்கை இடுபொருட்கள், சமச்சீரான ஊட்டச்சத்து மேலாண்மை, மண்ணில் நுண்ணுயிரிகளை வளர்ப்பது இவற்றை சேர்த்து கையாண்டால் தமிழகத்து மாம்பழம் உலக சந்தையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று முனைவர் இர. செந்தில்குமார் தெரிவித்தார்.

மண்ணை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. பூனைக்காலி அந்த கடமையை மிக எளிதாக்குகிறது!

கேத் பச்சாவோ அபியான் இயக்கம் , பூனைக்காலி… குறித்து முனைவர் இர. செந்தில்குமார் விரிவாக பேசியுள்ள காணொளி இங்கே…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube