₹827 கோடி நேரடியாக கிசான் கணக்கில்! IIHR-ல் நடந்தது என்ன? மண்ணை காக்கும் தொழில்நுட்பங்கள் இங்கு கிடைக்கின்றன… இதை தவறவிட வேண்டாம்!
Thank you for reading this post, don't forget to subscribe!கர்நாடகாவின் ஹெசரகட்டா. பெங்களூரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கும் இந்த இடத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 20, 2026) ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. அது வெறும் அரசியல் நிகழ்ச்சி இல்லை. இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் செய்தியை சொல்லிய நிகழ்ச்சி!
ICAR – இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் (ICAR-IIHR) நடந்தது PM-KISAN சம்மான் உத்சவ் திவஸ் மற்றும் கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சி. இதன் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.
₹827 கோடி! நேரடியாக கிசான் கணக்கில்!
நாடு முழுவதும் நடந்த PM-KISAN சம்மான் உத்சவ் திவஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையை நேரடியாக விவசாயிகளின் ஆதார் இணைந்த வங்கி கணக்கில் செலுத்தினார். கர்நாடகா மட்டும் பார்த்தால், 41.35 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு சுமார் ₹827 கோடி நேரடியாக கிடைத்தது. இந்த தொகை நடைவழியில் மறைந்து போகவில்லை, நேரடியாக விவசாயியின் கணக்கில் விழுந்தது என்பதுதான் இதன் சிறப்பு.
குமாரசாமி வருகை; IIHR-க்கு பெருமிதம்!

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இரும்பு மற்றும் கனரக தொழில் அமைச்சர் எச்.டி. குமாரசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். IIHR-ல் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், “இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கிறது. இங்குள்ள விஞ்ஞானிகள் புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு விவசாயிகளுக்கு லாபம் ஈட்டித் தருகிறார்கள். இந்த தொழில்நுட்பங்களை நம் விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.
கேத் பச்சாவோ அபியான் என்றால் என்ன?
இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற மற்றொரு முக்கியமான அம்சம் கேத் பச்சாவோ அபியான். வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால தேசிய இயக்கம், மண் வளம் காத்து நிலையான வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. மண் பரிசோதனை அடிப்படையிலான ஊட்டச்சத்து மேலாண்மை, இயற்கை மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு, சமச்சீரான ரசாயன உர பயன்பாடு என்பன இதன் மையக் கருத்துக்கள். IIHR விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் நேரடியாக உரையாடி, தோட்டக்கலை பயிர்களில் மண் வளத்தை மேம்படுத்தும் விஞ்ஞான வழிகளை விளக்கினர்.
IIHR முதன்மை விஞ்ஞானி சொல்வதைக் கேளுங்கள்!

இந்த நிகழ்ச்சி குறித்து நம்மிடம் பேசிய IIHR-ன் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார், “இந்த ஆராய்ச்சி நிலையம் கர்நாடகாவில் இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். நல்ல விளைச்சலுக்கு நல்ல விதை, நல்ல கன்றுகள், நல்ல உரம் அவசியம். இந்தியாவின் மிகச்சிறந்த நாற்றுப்பண்ணை எங்களிடம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் விதைகள் மற்றும் நாற்றுகளை லாப நோக்கம் இல்லாமல் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
இயற்கை இடுபொருட்கள்; இங்கு பெறலாம்!

IIHR நிலையத்தில் செலவு குறைந்த இயற்கை இடுபொருட்கள், மண் வளத்தை மேம்படுத்தும் பூனைக்காலி விதைகள், இயற்கை தொழில்நுட்பங்கள் உள்ளன என்று முனைவர் செந்தில்குமார் தெரிவித்தார். “கேத் பச்சாவோ அபியான் நிகழ்ச்சிகளில் இந்த இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய அமைச்சர் , எங்கள் ஆராய்ச்சிநிலையத்தின் இயக்குநர் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டப்படி Khet Bachao Abhiyan என்ற மண் வளம் காக்கும் தொழில்நுட்பங்களையும் , இடுபொருள்களையும்நியாமான விலையில் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம்.
இயற்கை உரங்களால் மட்டுமே நம் தாய் மண்ணை காக்க முடியும். அதற்கான எச்சரிக்கை மணியைத்தான் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி மூலம் அடித்துள்ளார். மண் வளத்தை காக்கும் அற்புதமான செடிதான் பூனைக்காலி. இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கும், ஆனால் இது உண்மை. பூனைக்காலி விதையை வயலில் தூவி, வளரவிட்டு அதிலிருந்து விதையை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மேலும், ஒரு கிலோ விதையிலிருந்து ஒரு டன் தொழுவுரத்திற்கு சமனான சத்தை மண்ணுக்கு கொடுக்கலாம். இந்த செடியை எக்காரணம் கொண்டும் உழுது விடக்கூடாது. அப்படியே மண்ணில் மட்க வைக்க வேண்டும். இது குறித்து கூடுதல் தகவல் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்”என்று அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழக விவசாயிகளே, இது உங்களுக்கும்தான்!
IIHR கர்நாடகாவில் இருந்தாலும் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில விவசாயிகளுக்கும் சேவை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக தகவல்களுக்கும், IIHR-ன் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும் விவசாயிகள் IIHR விரிவாக்கப் பிரிவை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மண்ணை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. பிரதமரே முன்நின்று அழைப்பு விடுக்கும்போது, இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்!
தொடர்புக்கு, முனைவர் இர.செந்தில்குமார் செல்போன்: 96637 96473 ICAR-Indian Institute of Horticultural Research, Hesaraghatta Lake Post, Bengaluru – 560089














Leave a Reply