Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

எல்லையில் பாதுகாப்பு; பாம்பும் முதலையும்!

இந்திய எல்லையில் பிஎஸ்எஃப் கண்காணிப்பு

வங்கதேசத்தினர் கொஞ்சம் கவலைப்படுங்க பாஸ்! எல்லையை கட்டுப்படுத்த டிரோன் வேணும், கேமரா வேணும், வேலி வேணும்னு கஷ்டப்படுற இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்)… இப்போ என்ன ஐடியா போட்டிருக்காங்க தெரியுமா? பாம்பு விடுவோம். முதலை விடுவோம். பாரு எப்படி ஊடுருவுவீங்கன்னு!

Thank you for reading this post, don't forget to subscribe!

ஆமாங்க, நீங்க படிச்சது சரிதான். அந்த காலத்தில் அரசர்களின் கோட்டையை சுற்றிலும் அகழி எடுத்து, அதில் முதலைகளை விட்டு பாதுகாத்தார்கள். நூற்றாண்டுகள் கடந்தும், அந்தப் பழைய முறை இன்று நவீன இந்தியாவின் எல்லை பாதுகாப்பு திட்டமாக திரும்பி வருகிறது என்பது ஆச்சரியமாகவும், சிந்திக்க வைக்கும் செய்தியாகவும் இருக்கிறது.

175 கிமீ சதுப்பு நிலம் — தலைவலி பிரச்சனை!

இந்தியா-வங்கதேசம் இடையே மொத்தம் 4,096.7 கிலோமீட்டர் நீண்ட எல்லை இருக்கிறது. இந்த எல்லையில் மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா என்று 5 மாநிலங்கள் பங்கு வகிக்கின்றன. இந்த மிகவும் நீண்ட எல்லையை பாதுகாப்பது பிஎஸ்எஃப்-க்கு எப்பொழுதும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த எல்லையில் 175 கிலோமீட்டர் பகுதி அடர் சதுப்பு நிலம். பருவமழை காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும். வேலி போட முயன்றால் சேற்றில் புதைந்து விடும். கேமரா வைத்தால் ஈரமும் சேறும் அதை செயலிழக்க வைத்துவிடும். நவீன டெக்னாலஜி கூட இந்தச் சதுப்பு நிலத்தில் ‘ஆப்’ ஆகிவிடுகிறது.

இந்தப் பகுதி வழியாகத்தான் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இது பிஎஸ்எஃப்-க்கு ஒரு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் கண்காணித்தாலும், இந்த சதுப்பு நிலத்தை முழுமையாக மூடுவது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது.

தீர்வு என்னன்னு யோசிச்சாங்க… பாம்பு-முதலை ‘ரெடி’!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலில், பிஎஸ்எஃப் இப்போது ஒரு புதிய மற்றும் அசாதாரண திட்டத்தை தயாரித்து வருகிறது. யோசனை என்னவென்றால் — சதுப்பு நிலம் மற்றும் நதிப் பகுதிகளில் நச்சு பாம்புகளையும் முதலைகளையும் விட்டுவிடுவது!

இதனால் யாரும் நீந்தி வர மாட்டார்கள். யாரும் படகில் கடக்க மாட்டார்கள். இயற்கையிலேயே ஒரு உயிரோட்டமான எல்லைக் காவல் படை உருவாகும் என்பது இந்த யோசனையின் அடிப்படை.

இது வெறும் கட்டுக்கதை இல்லை — பிஎஸ்எஃப்-இன் உள்நாட்டு ஆவணத்திலேயே இந்த ஆலோசனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது இந்தத் திட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

இதில் வரலாற்று ஆதாரமும் இருக்கிறது. முகலாயர் காலத்திலும், தமிழகத்தின் பல அரண்மனைகளிலும் அகழிகளில் முதலைகளை வளர்த்து பாதுகாப்பு வழங்கிய வரலாறு இருக்கிறது. வஞ்சி மண்டலத்தின் சில அரசர்கள் நதிகளில் முதலைகளை வளர்த்து அவற்றை இயற்கை காவலராக பயன்படுத்தியதாக வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன. அந்த பழைய முறையை இப்போது பிஎஸ்எஃப் நவீன பாதுகாப்பு யோசனையாக மாற்றுகிறது.

“ஆனா ஒரு சின்ன பிரச்சனை இருக்கு…”

இந்த யோசனையில் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. பாம்பும் முதலையும் ‘நண்பன் யாரு, எதிரி யாரு’ன்னு பார்க்காது. இந்த எல்லைப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், மீனவர்கள், விவசாயிகள் — இவர்களுக்கும் ஆபத்து வரலாம் என்று கவலைப்படுகிறார்கள். வெள்ள காலத்தில் இது இன்னும் சீரியஸான பிரச்சனையாக மாறும்.

பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், “இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சாத்தியக்கூறுகளை மட்டுமே ஆராய்கிறோம். இந்த உயிரினங்களை எப்படி கொண்டுவருவது, உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு வராமல் எப்படி நிர்வகிப்பது என்று ஆய்வு நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் கோணம் என்ன?

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வரலாம். சதுப்பு நிலங்கள் ஏற்கனவே பல அரிய உயிரினங்களின் வாழிடம். புதிதாக வேற்று உயிரினங்களை அங்கே கொண்டுவந்தால் சூழலியல் சமநிலை பாதிக்கப்படலாம். கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் முதலை-மனித மோதல்கள் ஏற்கனவே பெரிய பிரச்சனையாக இருக்கின்றன.

மேலும், இந்த உயிரினங்களை “படை வீரர்களாக” பயன்படுத்துவது விலங்கு நேயர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்கும். Wildlife Protection Act-இன் கீழ் இது சட்டரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்தலாம்.

கடைசியா ஒரு கேள்வி…

டிரோன், செயற்கைக்கோள் கண்காணிப்பு, எலக்ட்ரிக் வேலி, ஸ்மார்ட் ஃபென்சிங் — நவீன தொழில்நுட்பம் எல்லாம் இருந்தும், இறுதியில் பாம்பு-முதலை தான் சொல்யூஷனா? ஒருவேளை, சில இடங்களில் இயற்கைதான் மனிதனின் சிறந்த பாதுகாவலன் என்பது உண்மையாகவே இருக்கலாம்.

இந்த யோசனை நடைமுறைக்கு வருமா இல்லையா என்று காலம்தான் சொல்லும். ஆனால் ஒன்று நிச்சயம் — பிரக்டிகல் ஆச்சு! இயற்கை எப்போதும் சிறந்த பாதுகாப்பு தருகிறது!

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube