“ஒரு கிலோ விதை… ஒரு டன் இயற்கை உரத்துக்கு சமம்!” என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? அதுமட்டுமல்ல, அந்தச் செடியின் விதையே உலகம் முழுவதும் பார்க்கின்சன் நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இவை அனைத்தும் உண்மை என்கிறார் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்படும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR)-இன் முதன்மை விஞ்ஞானியும், விரிவாக்கப் பிரிவின் தலைவருமான முனைவர் இர. செந்தில்குமார்.
Thank you for reading this post, don't forget to subscribe!அவகோடா மற்றும் பூனைக்காலி (Velvet Bean / Mucuna) சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், IIHR மற்றும் Society for Promotion of High Value Exotic Horticulture Crops (SPHEHC) இணைந்து, ஆகஸ்ட் 28-ஆம் தேதி பெங்களூருவில் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி, புதிய தொழில்நுட்பங்களை அறிய மட்டுமல்ல; IIHR ஆராய்ச்சி நிலையத்தை நேரில் பார்ப்பதற்கும், விஞ்ஞானிகளுடன் நேரடியாக உரையாடுவதற்கும் கிடைக்கும் அரிய வாய்ப்பாகும்.
அவகோடா… ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வருமானமா?
அவகோடா இன்று உலகம் முழுவதும் அதிக தேவை கொண்ட உயர்மதிப்புப் பழமாக மாறியுள்ளது. ஆரோக்கிய உணவுகள், ஹோட்டல்கள், ஜூஸ் தயாரிப்புகள், பேக்கரி பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல துறைகளில் இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சந்தைத் தேவை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இதுபற்றி முனைவர் இர. செந்தில்குமார் கூறுகையில், சரியான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால், அவகோடா சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.4 லட்சத்திற்கும் அதிக வருமானம் பெறும் வாய்ப்பு உள்ளது என்கிறார். மேலும், நடவு முதல் அறுவடை, தரமான பழ உற்பத்தி, சந்தைப்படுத்தல் வரை தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கருத்தரங்கில் IIHR விஞ்ஞானிகள் நேரடியாக விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மண்ணுக்கு உயிர் கொடுக்கும் பூனைக்காலி!
கருத்தரங்கின் மற்றொரு முக்கிய அம்சம் பூனைக்காலி (Mucuna) சாகுபடி. இதை பலர் ஒரு சாதாரண பசுந்தாள் உரப் பயிராகவே நினைக்கலாம். ஆனால், IIHR விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள் அதைவிட மிகவும் வியப்பூட்டுகின்றன.
பூனைக்காலி விதையை வயலில் தூவி வளர விட்டாலே போதும். அதன் காய்களை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். அதே நேரத்தில், செடியை உழுது அகற்றாமல் மண்ணிலேயே மட்க விட்டால், அது இயற்கை உரமாக மாறுகிறது.
ஒரு கிலோ பூனைக்காலி விதையிலிருந்து வளரும் செடி, ஒரு டன் தொழுவுரத்திற்கு இணையான ஊட்டச்சத்தை மண்ணுக்கு வழங்கும் என்று IIHR ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் இதை பசுந்தாள் உரங்களில் மிகவும் சிறந்த ஒன்றாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நைட்ரஜன் தொழிற்சாலை போல செயல்படும் செடி
பூனைக்காலி வளரும்போதே காற்றிலிருக்கும் நைட்ரஜனை தனது வேர்களில் சேமித்து வைக்கிறது. பின்னர் செடியை மண்ணில் மட்க விட்டவுடன், அந்த நைட்ரஜன் மண்ணுக்கே கிடைக்கிறது. இதன் மூலம் மண்ணின் வளம் இயற்கையாகவே அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்ல, பூனைக்காலி மிகவும் அடர்த்தியாகப் பரவி வளர்வதால் களைகள் வளர வாய்ப்பே இருக்காது. சூரிய ஒளி மண்ணை எட்டாததால் களைகள் தானாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், பயிர்களை சேதப்படுத்தும் நிமட்டோடு (Nematode) எனப்படும் நூற்புழுக்களையும் இதன் வேர்கள் இயற்கையாகக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் ரசாயன மருந்துகளின் பயன்பாடும் குறைகிறது.
மருத்துவத்துறைக்கும் பயன்படும் அதிசய விதை

பூனைக்காலியின் சிறப்பு விவசாயத்தில் மட்டுமே முடிவதில்லை. இதன் விதைகளில் L-DOPA என்ற இயற்கை வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே பார்க்கின்சன் நோய்க்கான முக்கிய மருந்துகளின் அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே IIHR, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூனைக்காலி விதைகளை கொள்முதல் செய்கிறது. அதாவது, ஒரே பயிர் மண் வளத்தையும் அதிகரிக்கிறது; மருத்துவத் துறைக்கும் மூலப்பொருள் வழங்குகிறது; விவசாயிக்கும் கூடுதல் வருமானம் தருகிறது.
விதை கொடுத்து… மீண்டும் வாங்கும் IIHR
பூனைக்காலி சாகுபடியை ஊக்குவிக்க IIHR ஒரு சிறப்பு Seed Buyback Program-ஐ செயல்படுத்தி வருகிறது. இதில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகின்றன. சாகுபடிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. பின்னர், அறுவடை செய்யப்பட்ட விதைகளை IIHR-தே மீண்டும் கொள்முதல் செய்கிறது.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் Expression of Interest (EOI) மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு வழிகாட்டுதலையும் IIHR விரிவாக்கப் பிரிவு வழங்குகிறது.
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏன் இது முக்கியம்?
கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில், ஒரே நிலத்தில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடி நடைபெறுகிறது. இதனால் மண்ணின் உயிர்ச்சத்து படிப்படியாகக் குறைகிறது. இப்படிப்பட்ட நிலங்களுக்கு பூனைக்காலி ஒரு இயற்கை தீர்வாக இருக்கும் என்று IIHR விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு சீசனில் பூனைக்காலியைப் பயிரிட்டு, அடுத்த சீசனில் வழக்கமான பயிரை சாகுபடி செய்தால், மண் வளம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அவகோடாவில் அதிக லாபம் பெறுவது எப்படி? பூனைக்காலி மூலம் மண் வளத்தை உயர்த்துவது எப்படி? IIHR-ன் Seed Buyback Program-ல் சேருவது எப்படி? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் இந்த ஒருநாள் கருத்தரங்கில் கிடைக்கவுள்ளன. அதோடு, IIHR ஆராய்ச்சி நிலையத்தை நேரில் பார்வையிட்டு, முன்னணி விஞ்ஞானிகளிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெறும் வாய்ப்பும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வருமானத்தை உயர்த்த விரும்பும் விவசாயிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம்!
பதிவு செய்து கட்டணம் செலுத்த:
https://forms.gle/AjkH9J8HiZDLyyNQA
மேலும் விவரங்களுக்கு, 63632 45518, 89046 61146,96637 96473
2 responses to “ஒரு கிலோ விதை… ஒரு டன் இயற்கை உரம்! அவகோடா & பூனைக்காலி குறித்து IIHR சொல்லும் அதிரடி தகவல்கள்!”
-
பூனைக்காலி எந்த ரகம் விதை தருகிறீர்கள்? வெள்ளை அல்லது நீலம். ஒரு கிலோ என்ன விலை?
-

வணக்கம்! இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR)-இன் முதன்மை விஞ்ஞானியும், விரிவாக்கப் பிரிவின் தலைவருமான முனைவர் இர. செந்தில்குமார், செல்போன் 96637 96473. இவரைத் தொடர்பு கொள்ளவும். வழிகாட்டுவார்!
-
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/













Leave a Reply