Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

அமலா முதல் அமேசான் வரை: அவகோடாவுக்கு அதிகரிக்கும் தேவை! பூனைக்காலியுடன் லாபம் தரும் புதிய சாகுபடி வாய்ப்பு!

அவகோடா சாகுபடி மற்றும் பூனைக்காலி சாகுபடி – IIHR கருத்தரங்கு

ஒரு காலத்தில் வெளிநாட்டுப் பழம் என்று பார்க்கப்பட்ட அவகோடா, இன்று இந்தியாவின் நகர்ப்புற சந்தைகளில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, ஆரோக்கிய உணவு, அழகு பராமரிப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என பல துறைகளில் பயன்படுத்தப்படுவதால், இதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், அவகோடா மற்றும் பூனைக்காலி எனப்படும் வெல்வெட் பீன் (Mucuna) சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குகிறது பெங்களூருவில் நடைபெற உள்ள சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கு.

Thank you for reading this post, don't forget to subscribe!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) மற்றும் Society for Promotion of High Value Exotic Horticulture Crops (SPHEHC) இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. “அள்ள அள்ள லாபம் தரும் அவகோடா & பூனைக்காலி சாகுபடி” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, வரும் 28 ஆகஸ்ட் 2026 வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை IIHR வளாகத்தில் நடைபெறுகிறது.

நடிகை அமலாவுக்கும் அவகோடாவுக்கும் என்ன தொடர்பு?

அவகோடாவின் பிரபலத்தைப் பேசும்போது, திரைப்பட நடிகை அமலா முதல் அவகோடா பவுடர் அமேசானில் என்ன விலைக்கு விற்பனையாகிறது…. குறித்த தகவல்களையும் தவிர்க்க முடியாது. இந்தக் காணொளியில் IIHR முதன்மை விஞ்ஞானியும் தலைவர் (விரிவாக்கம்)மான முனைவர் இர. செந்தில்குமார், அவகோடாவை உணவு மற்றும் உடல் நலத்துடன் தொடர்புபடுத்தி நடிகை அமலா குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.

அவகோடா ஆரோக்கிய உணவாக மட்டுமல்லாமல், அழகு பராமரிப்பு தொடர்பான பயன்பாடுகளாலும் கவனம் பெற்றுள்ளது. இதனால், திரைப்படப் பிரபலங்கள் முதல் நகர்ப்புற நுகர்வோர் வரை பலரிடமும் இந்தப் பழம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, உணவு, ஊட்டச்சத்து, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என அவகோடாவுக்கான பயன்பாட்டுத் தளம் விரிவடைந்து வருகிறது.

இதன் காரணமாகவே, சந்தையில் அவகோடாவுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், தரமான உற்பத்தியை அதிகரிப்பதும் முக்கியமாகிறது.

ஏக்கருக்கு அதிக வருமானம்?

அவகோடா சாகுபடியில் சரியான ரகம், தரமான கன்றுகள், பொருத்தமான மண், நீர் மேலாண்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை முக்கியமானவை. கருத்தரங்கில், ஏக்கருக்கு ₹4 லட்சத்திற்கும் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், விவசாயத்தில் வருமானம் என்பது நிலம், முதலீடு, மகசூல், சந்தை விலை மற்றும் பராமரிப்பு செலவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், “ஒரே பயிர்; உடனடி லாபம்” என்ற அணுகுமுறையை விட, அறிவியல் சாகுபடியுடன் சந்தையையும் புரிந்துகொள்வதே முக்கியம்.

அவகோடா சாகுபடி மற்றும் NHB மானியம் குறித்து IIHR கருத்தரங்கு
அவகோடா சாகுபடி NHB மானியம் IIHR கருத்தரங்கு

ரகம் முதல் சந்தைப்படுத்தல் வரை!

அவகோடாவின் பல்வேறு ரகங்கள், இயற்கை சாகுபடி தொழில்நுட்பம், நடவு முதல் அறுவடை வரையிலான நடைமுறைகள், நோய் மேலாண்மை மற்றும் ஊடுபயிர் சாகுபடி ஆகியவை கருத்தரங்கில் இடம்பெறுகின்றன.

குறிப்பாக, அசத்தல் விளைச்சல் தரும் அவகோடா ரகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அறுவடைக்குப் பிறகு பழத்தை எப்படி கையாள்வது என்பதும் முக்கியமானது. ஏனெனில், நல்ல மகசூல் கிடைத்தாலும் சந்தைப்படுத்தல் சரியாக இல்லாவிட்டால் விவசாயியின் வருமானம் பாதிக்கப்படலாம்.

அவகோடாவை பழமாக மட்டும் விற்க வேண்டுமா?

இங்கேதான் மதிப்புக்கூட்டல் முக்கியத்துவம் பெறுகிறது. அவகோடாவை நேரடியாக விற்பனை செய்வதுடன், பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் வாய்ப்புகளும் கருத்தரங்கில் பேசப்பட உள்ளன.

விவசாய உற்பத்தியில் “உற்பத்தி செய் – விற்றுவிடு” என்ற முறையைத் தாண்டி, “உற்பத்தி செய் – பதப்படுத்து – மதிப்பு கூட்டு – சந்தைப்படுத்து” என்ற அணுகுமுறை அதிக வருமான வாய்ப்பை உருவாக்கக்கூடும்.

இதற்கு அரசு சார்ந்த திட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. National Horticulture Board (NHB)-ன் திட்டங்களில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் உள்ளன. குறிப்பாக, NHB-ன் Cluster Development Programme, உற்பத்தியில் தொடங்கி post-harvest management, value addition, logistics, marketing மற்றும் branding வரை முழுமையான மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பூனைக்காலி – மண்ணுக்கும் பயனுள்ள பயிர்!

அவகோடாவுடன் பூனைக்காலி ( Mucuna) குறித்தும் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாகப் பேசப்படுகிறது. மண் வளத்தை மேம்படுத்துதல், இயற்கை வேளாண்மையில் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் இது “மேஜிக் பீன்ஸ்” என்று அழைக்கப்படும் அளவுக்கு விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒருபுறம் சந்தைத் தேவை கொண்ட அவகோடா. மறுபுறம் மண் வள மேலாண்மைக்கு உதவும் பூனைக்காலி. இந்த இரண்டையும் அறிவியல் அடிப்படையில் அணுகுவது விவசாயிகளுக்கு புதிய அனுபவமாக அமையலாம்.

விஞ்ஞானிகளுடன் நேரடி கலந்துரையாடல்

இந்தக் கருத்தரங்கின் மற்றொரு சிறப்பு, IIHR விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் நேரடியாகக் கலந்துரையாட முடிவதாகும். மேலும், அவகோடா சாகுபடியில் வெற்றிக் கதையும், முனைவர் செந்தில்குமாரின் பங்களிப்பும் பகிரப்பட உள்ளன.

பயிற்சிக் கட்டணம் ₹2,000. (இதில் ரூ.1,000 மதிப்புள்ள அவகோடா கன்றுகள், இயற்கை இடுபொருள்கள்), மதிய உணவு மற்றும் Conference Kit வழங்கப்படுகின்றன.

பதிவு செய்ய:
https://forms.gle/AjkH9J8HiZDLyyNQA

மேலும் விவரங்களுக்கு 63632 45518, 89046 61146, ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இன்றைய விவசாயத்தில் புதிய பயிரைத் தேர்வு செய்வது மட்டும் போதாது. சந்தைத் தேவை, அறிவியல் சாகுபடி, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்தல் மற்றும் அரசு திட்டங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் புரிந்துகொள்வதே வெற்றிக்கான பாதை. அந்த வகையில், அவகோடா மற்றும் பூனைக்காலி குறித்த இந்த ஒரு நாள் கருத்தரங்கு, புதிய வாய்ப்புகளைத் தேடும் விவசாயிகளுக்கு பயனுள்ள வழிகாட்டியாக அமையலாம்.

குறிப்பாக கருத்தரங்கு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு IIHR முதன்மை விஞ்ஞானியும் தலைவர் (விரிவாக்கமான முனைவர் இர. செந்தில்குமாரை 96637 96473 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube