Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி வரவேற்கத்தக்கது; ஆனால், விவசாயிகளே பேராசிரியர்களாக இருக்க வேண்டும்!

நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைக் கல்லூரி அறிவிப்பு குறித்து கருத்து – தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27, வல்லுநர் பேராசிரியர்கள், இயற்கை விவசாயிகள் மற்றும் வயல்வெளி கல்வி முறை.

“வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்.”

Thank you for reading this post, don't forget to subscribe!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அடிக்கடி கூறிய இந்த ஒரு வரி, வெறும் முழக்கம் அல்ல. அது ஒரு கல்விக் கொள்கை. ஒரு சமூகத் தத்துவம். இன்னும் ஆழமாகச் சொன்னால், உழவரின் அறிவை மீட்டெடுக்கும் விடுதலைப் பிரகடனம்.

அப்படிப்பட்ட நம்மாழ்வாரின் பெயரில், தமிழக அரசு உயிர்ம வேளாண்மைக் கல்லூரி ஒன்றை அறிவித்திருக்கிறது.

முதலில், இந்த அறிவிப்பை மனதார வரவேற்க வேண்டும்.

ஏனெனில், இயற்கை வேளாண்மை என்பது இனி சிலரின் மாற்றுச் சிந்தனையாக இல்லை; அரசின் கொள்கை விவாதத்திற்குள் நுழைந்திருக்கும் ஒரு முக்கியமான வளர்ச்சி பாதையாக மாறியுள்ளது. அந்த வகையில், நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படுவது, இயற்கை வேளாண்மைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதலாம்.

ஆனால், ஒரு கேள்வியை மட்டும் நாம் தவிர்க்க முடியாது.

நம்மாழ்வாரின் பெயரை ஒரு கல்வி நிறுவனத்துக்கு வைப்பது போதுமா? அல்லது, அவர் வாழ்நாள் முழுவதும் பேசிய கல்விச் சிந்தனையும் அந்தக் கல்லூரிக்குள் உயிருடன் இருக்க வேண்டுமா?

ரூ.47,248 கோடி வேளாண் பட்ஜெட்…

2026–27ஆம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளார். வேளாண் துறைக்காக ரூ.47,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) செயலி, மண் வளப் பாதுகாப்புத் திட்டங்கள், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் சுயசார்பு மிஷன், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் தமிழ்நாடு தினை இயக்கம், இயற்கை விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, உழவர் சந்தைகளில் இயற்கை விளைபொருட்களுக்கு தனி விற்பனை வாய்ப்பு என பல திட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.

இவை அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்க முயலும் ஒரு வேளாண் பார்வையை இந்தப் பட்ஜெட் வெளிப்படுத்துகிறது.

அவற்றில் அதிகம் பேசப்படும் அறிவிப்பு, தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் ரூ.15 கோடி மதிப்பில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண் பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும் என்பதுதான்.

வரவேற்போடு சேர்த்து ஒரு கேள்வியும் எழுகிறது…

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘அறச்சலூர்’ ரா. செல்வம் பதிவு செய்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அவரது வாதம் மிகவும் எளிமையானது.

நம்மாழ்வார் மையப்படுத்தப்பட்ட கல்வி அமைப்புகளை விமர்சித்தவர். வேளாண்மை என்பது புத்தகத்தில் கற்றுக்கொள்ளும் பாடம் அல்ல; நிலத்தில் அனுபவித்து அறியும் வாழ்க்கை என்ற நம்பிக்கையில்தான் அவர் இயங்கினார்.

அவரது பார்வையில், வெளியில் இருந்து வரும் அறிவு— அது இயற்கை வேளாண் அறிவாக இருந்தாலும்—விவசாயியை மற்றொருவரைச் சார்ந்தவராக மாற்றக் கூடாது. ஒவ்வொரு உழவரும் தன் மண்ணையும், தன் அனுபவத்தையும், தன் கிராமத்தின் அறிவையும் நம்பி நிற்க வேண்டும்.

அதனால்தான் அவர், “வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்” என்று கூறினார்.

இந்தக் கருத்தை நாம் எளிதாகக் கடந்து செல்ல முடியாது.

ஆனால், இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.

நான் பார்த்த கல்வியும்… நான் அனுபவித்த மாற்றமும்…

இந்த இடத்தில் எனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். இந்தியாவிலேயே முன்னோடியாக முனைவர் கீதாலட்சமி துணைவேந்தராக இருந்த போது, 2024-ம் ஆண்டு, வல்லுநர் பேராசியர் முறையை அறிமுகப்படுத்தினார். இன்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் இந்த நடைமுறை தொடர்கிறது. முன்னோடி விவசாயிகள், துறைசார்ந்த வல்லுநர்கள் பேராசிரியர்களாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள்.

நானும் கூட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வல்லுநர் பேராசிரியராக (Professor of Practice) உள்ளேன்.

இந்தப் பொறுப்பு எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்தியது.

வகுப்பறையில் கற்பிக்கப்படும் அறிவுக்கும், வயல்வெளியில் வாழப்படும் அறிவுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியை புத்தகங்கள் மட்டும் நிரப்ப முடியாது.

அதை நிரப்புவது அனுபவம்.

அதை நிரப்புவது களப்பணி.

அதை நிரப்புவது விவசாயிகளோடு வாழ்ந்த மனிதர்களின் அறிவு.

வல்லுநர் பேராசிரியர் முறையின் மிகப் பெரிய பலன் இதுதான்.

நாங்கள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை மட்டும் கற்பிப்பதில்லை. ஒரு விவசாயி ஏன் ஒரு முடிவை எடுத்தார், ஒரு தொழில்நுட்பம் ஏன் வெற்றி பெற்றது, இன்னொன்று ஏன் தோல்வியடைந்தது, சந்தை எப்படி மாறுகிறது, காலநிலை எப்படி சவால்களை உருவாக்குகிறது என்பதை நேரடியாகப் பகிர்கிறோம்.

அதே நேரத்தில், மாணவர்களின் புதிய சிந்தனைகளும் மீண்டும் களத்திற்குச் செல்கின்றன.

இதனால் கல்வி நிறுவனத்துக்கும் விவசாயத் துறைக்கும் இடையிலான தூரம் குறைகிறது.

இது வெறும் கோட்பாடு அல்ல.

நான் வகுப்பறையில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு உண்மை.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27, நம்மாழ்வார் உயிர்ம வேளாண்மைக் கல்லூரி, Professor of Practice முறை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நேச்சர் சிறப்புக் கட்டுரை.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் Professor of Practice ஆக ஓர் இனிய நிகழ்வில்..

அப்படியானால், நம்மாழ்வார் கல்லூரியிலும் இதை ஏன் செய்யக்கூடாது?

இதுதான் இப்போது நான் முன்வைக்கும் கேள்வி.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் Professor of Practice முறையை, நம்மாழ்வார் பெயரில் உருவாகும் உயிர்ம வேளாண்மைக் கல்லூரியிலும் ஏன் செயல்படுத்தக்கூடாது?

தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான முன்னோடி இயற்கை விவசாயிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் புத்தகங்கள் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், அவர்கள் மண்ணைப் படித்திருக்கிறார்கள்.

அவர்கள் காலநிலையை வாசித்திருக்கிறார்கள்.

அவர்கள் தோல்விகளை வெற்றியாக மாற்றியிருக்கிறார்கள்.

அவர்களிடம் இருக்கும் அறிவு எந்தப் பாடநூலிலும் முழுமையாக எழுதப்படவில்லை.

அப்படிப்பட்டவர்களை வல்லுநர் பேராசிரியர்களாக நியமித்தால் என்ன ஆகும்?

மாணவர்கள் புத்தக அறிவையும் கற்றுக்கொள்வார்கள்.

அதே நேரத்தில், மண்ணின் அறிவையும் கற்றுக்கொள்வார்கள்.

அதுவே நம்மாழ்வார் விரும்பிய கல்வி அல்லவா?

ஒரு வகையில் பார்த்தால், ரா. செல்வம் முன்வைக்கும் சிந்தனையும், நான் முன்வைக்கும் யோசனையும் எதிரெதிரானவை அல்ல.

இரண்டின் இலக்கும் ஒன்றே.

விவசாயியின் அறிவை உயர்த்துவது.

வித்தியாசம் அணுகுமுறையில் மட்டுமே உள்ளது.

பெயரை விட பெரியது… சிந்தனை

ஒரு கட்டடத்துக்கு நம்மாழ்வார் பெயரை வைப்பது எளிது.

ஆனால், அந்தக் கட்டடத்துக்குள் நம்மாழ்வாரின் சிந்தனையை உயிருடன் வைத்திருப்பது சவாலானது.

அது பாடத்திட்டத்தில் தெரிய வேண்டும்.

களப்பயிற்சியில் தெரிய வேண்டும்.

மாணவர்களின் கைகளில் தெரியும் மண்ணில் தெரிய வேண்டும்.

அதிலும் முக்கியமாக, ஆசிரியர் மேசையில் அமர்ந்திருப்பவர்களின் அனுபவத்தில் தெரிய வேண்டும்.

நம்மாழ்வாருக்கு உண்மையான மரியாதை எது?

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி கட்டுவது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.

ஆனால், அதுவே போதுமானதல்ல.

தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த முன்னோடி விவசாயிகளை வல்லுநர் பேராசிரியர்களாக நியமித்து, வயல்வெளியை வகுப்பறையாக மாற்றினால் மட்டுமே, இந்தக் கல்லூரி நம்மாழ்வாரின் பெயரைச் சுமப்பதல்ல; அவரது சிந்தனையையும் சுமக்கும்.

அப்போது மாணவர்கள் பட்டம் மட்டும் பெறமாட்டார்கள்.

மண்ணைப் புரிந்துகொள்வார்கள்.

விவசாயியை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள்.

அறிவைத் தேடுவதற்கு முன், அனுபவத்தை மதிக்கத் தொடங்குவார்கள்.

அன்றுதான், நம்மாழ்வார் ஒருகாலத்தில் கனவு கண்ட “வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்” என்ற கனவு, ஒரு முழக்கமாக அல்ல, ஒரு கல்வி முறையாக தமிழ்நாட்டில் உயிர் பெறும்.

2 responses to “நம்மாழ்வார் பெயரில் கல்லூரி வரவேற்கத்தக்கது; ஆனால், விவசாயிகளே பேராசிரியர்களாக இருக்க வேண்டும்!”

  1. செல்வம். இரா Avatar
    செல்வம். இரா

    தங்களது கோரிக்கையான உழவர்களே பேராசிரியர்கள் என்பது சரிதான். ஆனால் படிக்குமிடம் தான் சிக்கல்.

    எந்தவொன்றையும் இப்போதுள்ள அரசு நிர்வாகக் கட்டமைப்பு எல்லாவற்றையும் மையப்படுத்தி இயங்கும் ஒன்று.

    வேளாண்மை ஒரே விவசாயியின் நிலத்தில் குறைந்ததது இருவகை மண் வகை இருக்கிறது.

    ஒரே விவசாயி தன் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர்களைப் பயிரிடுகிறார். இவரது பக்கத்து உழவர் வேறு வகைப் பயிர்களைப் பயிரிடுகிறார், அவரது தேவைகளையொட்டி.

    இப்படி மிக நுட்பமாக உள்ளது நம் வேளாண்மை முறைகள். இப்படியான தன்மையில் எல்லா வகை நிலத்திற்குமான பாடங்கேஆகவே மையப்படுத்திய பட்டயப்படிப்பு இருக்கும்.

    அப்போது தான் நிர்வாகம் செய்ய இயலும். தணிக்கை செய்ய இயலும். Dash board ல் சென்னை அலுவலகத்தில் இல்லது கோவை. பல்கலை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க இயலும்.

    அடுத்து, பல்கலையும் வேளாண் துறையும் எதை இய. வேளாண்மை என்கிறார்கள்?

    இரசாயன தழை மணி, சாம்பல் சத்துகளுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்களாக இடுவதையே இய. வேளாண்மை என்கிறார்கள்.

    செடிக்கு சாப்பாடு போடுவது மனித வேலையாக்கியுள்ளது இவர்கள் முறை.

    நம்மாழ்வாரின் அணுகுமுறை வேறானது. செடி தனக்கானதைத் தானே தயாரித்துக் கொள்ளும். செடிகளே மனிதர்களுக்கு உணவளிக்கிறது.

    பாடம் இதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் பல்கலை இதை ஏற்காது.

    மையப்படுத்திய பாடத்திட்டம் இது நாள் வரை உருவாக்கிய அனைத்தையும் மறுதலிக்கும்.

    இய. விவசாய அதிகார மையமாகும்.

    அரசு வேறு வகையில் யோசிக்க வேண்டும். De centralised முறையை யோசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

2 comments
செல்வம். இரா

தங்களது கோரிக்கையான உழவர்களே பேராசிரியர்கள் என்பது சரிதான். ஆனால் படிக்குமிடம் தான் சிக்கல்.

எந்தவொன்றையும் இப்போதுள்ள அரசு நிர்வாகக் கட்டமைப்பு எல்லாவற்றையும் மையப்படுத்தி இயங்கும் ஒன்று.

வேளாண்மை ஒரே விவசாயியின் நிலத்தில் குறைந்ததது இருவகை மண் வகை இருக்கிறது.

ஒரே விவசாயி தன் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர்களைப் பயிரிடுகிறார். இவரது பக்கத்து உழவர் வேறு வகைப் பயிர்களைப் பயிரிடுகிறார், அவரது தேவைகளையொட்டி.

இப்படி மிக நுட்பமாக உள்ளது நம் வேளாண்மை முறைகள். இப்படியான தன்மையில் எல்லா வகை நிலத்திற்குமான பாடங்கேஆகவே மையப்படுத்திய பட்டயப்படிப்பு இருக்கும்.

அப்போது தான் நிர்வாகம் செய்ய இயலும். தணிக்கை செய்ய இயலும். Dash board ல் சென்னை அலுவலகத்தில் இல்லது கோவை. பல்கலை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க இயலும்.

அடுத்து, பல்கலையும் வேளாண் துறையும் எதை இய. வேளாண்மை என்கிறார்கள்?

இரசாயன தழை மணி, சாம்பல் சத்துகளுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்களாக இடுவதையே இய. வேளாண்மை என்கிறார்கள்.

செடிக்கு சாப்பாடு போடுவது மனித வேலையாக்கியுள்ளது இவர்கள் முறை.

நம்மாழ்வாரின் அணுகுமுறை வேறானது. செடி தனக்கானதைத் தானே தயாரித்துக் கொள்ளும். செடிகளே மனிதர்களுக்கு உணவளிக்கிறது.

பாடம் இதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் பல்கலை இதை ஏற்காது.

மையப்படுத்திய பாடத்திட்டம் இது நாள் வரை உருவாக்கிய அனைத்தையும் மறுதலிக்கும்.

இய. விவசாய அதிகார மையமாகும்.

அரசு வேறு வகையில் யோசிக்க வேண்டும். De centralised முறையை யோசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube