புரட்டிப் போட்ட புதிய ஆய்வு தகவல்…
Thank you for reading this post, don't forget to subscribe!அவன் ஒரு தயிர் சாதம்… என்று சைவ உணவு உண்பவர்களை கிண்டல் செய்பவர்கள் உண்டு. ஆனால், சைவ உணவுதான் சிறந்தது என ஆய்வில் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
ஆம், அசைவ உணவை விட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கணிசமாக குறைவாக இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை சுகாதாரப் பிரிவு (Oxford Population Health) மற்றும் உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (World Cancer Research Fund) இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 18 லட்சத்துக்கும் அதிகமான (1.8 மில்லியன்) பங்கேற்பாளர்களின் தரவுகள் 16 ஆண்டுகள் வரை பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்
அசைவம் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ உணவு உண்பவர்களுக்கு பின்வரும் புற்றுநோய்களில் பாதிப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது:
| புற்றுநோய் வகை | குறைவு சதவீதம் |
| கணையப் புற்றுநோய் | 21% குறைவு |
| மார்பகப் புற்றுநோய் | 9% குறைவு |
| புரோஸ்டேட் புற்றுநோய் | 12% குறைவு |
| சிறுநீரகப் புற்றுநோய் | 28% குறைவு |
| மல்டிபிள் மைலோமா (ரத்தப் புற்றுநோய் வகை) | 31% குறைவு |
மேலும், மீன் மற்றும் கோழி மட்டும் சாப்பிடுபவர்களுக்கும் குடல் சார்ந்த புற்றுநோய்கள் ஓரளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஏன் சைவம் சிறந்தது?
சைவ உணவில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகள் அதிகம் உள்ளன. இவை உடல் வீக்கத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிவப்பு இறைச்சியின் ஆபத்து
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை தவிர்ப்பதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சைவ உணவு உண்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் (Squamous cell oesophageal carcinoma) வரும் அபாயம் இருமடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு பி-வைட்டமின் (குறிப்பாக B12) குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த தகவல் உண்மைதான். சைவ உணவு உண்பவர்களில் பலருக்கும் B12 குறைவாக இருக்கும். உடல் சோர்பு, எரிச்சல் உணர்வு… என்று பல உடல் நலக்குறைவும் ஏற்படும். ஆகையால், B12 சத்துகள் நிறைந்த வைட்டமின் பி12 (கோபாலமின்) நரம்பு மண்டலம் மற்றும் இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. இது முக்கியமாக இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் பால், தயிர், பன்னீர், மற்றும் வலுவூட்டப்பட்ட (Fortified) உணவு உண்பது அவசியம்.
இயற்கை வாழ்வியல் குறிப்பு
சைவ உணவு மட்டுமல்ல — இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் உண்பது புற்றுநோயை தடுக்கும் சக்தியை மேலும் அதிகரிக்கும் என்று இயற்கை வாழ்வியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.












