விவசாயிகளின் நிறுவனம் உலக அளவில் அசத்தல் சாதனை!
Thank you for reading this post, don't forget to subscribe!இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் (Amul – GCMMF), தனது பிராண்ட் விற்றுமுதலில் 2025-26 நிதியாண்டில், ₹1 லட்சம் கோடி (1 trillion) என்ற வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11% வளர்ச்சியாகும். 36 லட்சம் பால் பண்ணையாளர்களின் பங்களிப்பு மற்றும் பரவலான விநியோக நெட்வொர்க் மூலம் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு பின்னால் எத்தனை, எத்தனை மனிதர்கள், விவசாயிகள், கனவுகள், வலிகள், மகிழ்ச்சிகள் உள்ளது தெரியுமா? [mc4wp_form id=3125]
ஆம்,”வெள்ளைப் புரட்சி” என்பது வெறும் பால் மட்டுமல்ல… அது ஒரு லட்சம் விவசாயிகளின் கண்ணீரில் இருந்து பிறந்த கனவு!”
குஜராத்தில் ஆனந்த் என்று ஒரு ஊர் இருக்கிறது. பெயரே ஆனந்தம் தான். ஆனால் 1940களில் அந்த ஊரைச் சுற்றியிருந்த விவசாயிகளுக்கு ஆனந்தம் என்பது வெகு தூரத்தில் இருந்தது.
காரணம் என்ன? பால்!

amul milk women farmers
பாலை கறந்தால் என்ன ஆகும் என்று தெரியுமா? விவசாயி கறக்கிறான். தரகன் வாங்குகிறான். போல்சன் நிறுவனம் லாபம் அடிக்கிறது. விவசாயியோ… வெறும் கைகளுடன் வீடு திரும்புகிறான். இந்த கொள்ளை ஒரு நூற்றாண்டாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு நாள் மாற்றம் வந்தது!
கோபம் கொப்பளித்தது
பால் விலையை தரகர்களே தீர்மானித்தனர் — அவர்களுக்கு தோன்றியபடி, அவர்களுக்கு சரி என்று பட்டபடி. விவசாயிகள் அவர்களை நம்பி வாழ வேண்டியிருந்தது; மாற்று வழியே இல்லை.
சர்தார் வல்லபாய் படேல் இதை பார்த்தார். அவரது கண்கள் சிவந்தன. “இந்த தரகர்களை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது — விவசாயிகளே ஒன்று சேரட்டும்!” என்றார்.
சொன்னது சொன்னதுதான். 1946 டிசம்பர் 14 ஆம் தேதி, தரகர்களின் சுரண்டலுக்கு எதிர்ப்பாக ஒரு கூட்டுறவு சங்கம் பிறந்தது. அதுதான் அமுல் என்று பின்னால் உலகறிந்த அந்த அமைப்பு!

story of the amul milk
தொடக்கத்தில் வெறும் இரண்டு கிராம சங்கங்கள், 247 லிட்டர் பால் — இவ்வளவுதான் மூலதனம். ஆனால் கனவு மலையளவு இருந்தது!
ஒரு இஞ்சினியர் தவறி விழுந்த இடம்
இந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமான திருப்பம் இப்போது வருகிறது.
வெர்கீஸ் குரியன் என்ற ஒரு இளைஞன் அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு 1949ல் திரும்பினார். அரசு கொடுத்த ஸ்காலர்ஷிப்புக்கு கட்டுப்பட்டு ஆனந்த் என்ற இடத்தில் அரசு கிரீமரியில் வேலை பார்க்க வந்தார். குரியன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ் வழியில் ஆரம்ப கல்வியைக் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

verghese kurien
அவரது ஒரே நோக்கம் — கடன்படுவதிலிருந்து விடுபடுவது; கூடிய சீக்கிரம் மும்பை போவது!
ஆனால்… திரிபுவன்தாஸ் படேல் என்ற மனிதர் அவரை விடவில்லை. “இன்னும் கொஞ்ச நாள் இருங்கள், இந்த இயந்திரங்களை சரிசெய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
குரியன் “சரி, இரண்டு நாள்” என்று நின்றார்.
அந்த இரண்டு நாள்… வாழ்நாள் முழுவதும் ஆனது!
அந்த கட்டாய தங்கல் இந்திய பால் தொழிலின் விதியையே மாற்றிவிட்டது.
எருமை பால் — உலகை வென்ற சாதனை
குரியன் வந்தது ஒரு தீர்க்கதரிசனம்போல் ஆனது. ஏன் தெரியுமா?
உலகம் முழுவதும் பால் பொடி தயாரிக்க பசுமாட்டு பாலை மட்டுமே பயன்படுத்துவார்கள். இந்தியாவிலோ பெரும்பாலும் எருமை பால்தான் கிடைக்கும்.
“எருமை பாலில் பால் பொடி தயாரிக்க முடியாது” என்று நெஸ்லே நிறுவனம் கைவிரித்தது. குரியன் மறுத்தார். ஒரே ஒரு கேள்வி கேட்டார் — “ஏன் முடியாது?”
H.M. தலாயா என்ற அவரது தோழர் எருமை பாலில் இருந்து பால் பொடி தயாரிக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார் — அது இந்திய பால் தொழிலையே தலைகீழாக மாற்றிய கண்டுபிடிப்பாகியது.
நெஸ்லே “முடியாது” என்று சொன்னதை அமுல் “முடியும்” என்று செய்து காட்டியது. அதன் பிறகு அந்த இறக்குமதிக்கு அரசே தடை விதித்தது!
வெள்ளைப் புரட்சி — ஆபரேஷன் ஃப்ளட்
1964ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார். கண்ணால் பார்த்தார், மனதில் தீர்மானித்தார்.
1965ல் தேசிய பால் மேம்பாட்டு வாரியம் (NDDB) தொடங்கப்பட்டது. குரியனே அதன் தலைவர். இப்போது ஆனந்தில் நடந்தது இந்தியா முழுவதும் நடக்கணும் என்ற திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படிதான் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் உருவானது. ஆனால், ஆவின் சாதனை செய்யாமல், சோதனையில் உள்ளது என்பது தனிக்கதை.
ஆபரேஷன் ஃப்ளட்டின் முதல் கட்டத்தில் (1970–1979) நாடு முழுவதும் 18 சிறந்த பால் மையங்கள் தேர்வு செய்யப்பட்டன; கிராமத்தை நகரத்துடன் நேரடியாக இணைக்கும் சங்கிலித் தொடர் உருவாக்கப்பட்டது.

white revolution in india kurien
இடையில் தரகர்கள்? இல்லை. கமிஷன் வாங்குபவர்கள்? இல்லை. விவசாயி நேரடியாக நுகர்வோரை சந்திக்கிறார்!
மந்தன் — விவசாயிகள் செய்த படம்
இந்த கதையில் ஒரு கவிதை போன்ற திருப்பம் இருக்கிறது.
1976ல் இயக்குநர் சியாம் பெனகல் ‘மந்தன்’ என்ற திரைப்படம் எடுத்தார் — இது வெள்ளைப் புரட்சியின் தொடக்கக் கதையை திரைக்கு கொண்டுவந்தது.
பணம் எங்கிருந்து வந்தது தெரியுமா?
குஜராத்தில் இருந்த ஐந்து லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தலா இரண்டு ரூபாய் கொடுத்தனர். தங்கள் கதையை தாங்களே பணம் கொடுத்து படமாக்கினார்கள்!

5 லட்சம் விவசாயிகள் எடுத்த பால் படம்!
படம் வெளியானதும் அந்த விவசாயிகள் லாரிகளில் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர் — ‘இது நம் படம்’ என்ற பெருமையில்!
அமுல் பட்டர் கர்ல் — கால்தடம் மாறாத தூதுவி
1966ல் சில்வெஸ்டர் டிகுன்யா என்ற விளம்பர நிறுவன மேலாளர் அமுல் பட்டருக்கு ஒரு பிரசாரத்தை வடிவமைத்தார் — நாளுக்கு நாள் நடக்கும் நகர்வுகளில் நகைச்சுவையான கருத்து சொல்லும் பிஞ்சு பெண் சித்திரம். இது உலக சாதனையாக, மிக நீண்ட நாள் ஓடிய விளம்பரப் பிரசாரம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது! அந்த சிறிய பெண் இன்றும் ஓடுகிறாள். அரசியல் பேசுகிறாள். சமூகம் பேசுகிறாள். அவளை யாரும் நிறுத்த முடியவில்லை!
அமுல் கதை. அதுதான் இந்தியாவின் கதை!
இரண்டு கிராம சங்கங்களோடும் 247 லிட்டர் பாலோடும் தொடங்கிய அமுல் இன்று 40க்கும் அதிகமான நாடுகளில் தன் பாதம் பதித்திருக்கிறது.
குரியன் என்ன சொன்னார்? “விவசாயிகள் மடத்தனமானவர்கள் அல்ல. அவர்களுக்கு தொழில்நுட்பம் கொடுங்கள், நடைமுறையான அமைப்பு கொடுங்கள் — அவர்கள் உலகையே மாற்றுவார்கள்!”
ஆம்… மாற்றினார்கள்!
ஒரு நாடு பால் இறக்குமதி செய்தது. இப்போது உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடு.
அதுதான் அமுல் கதை. அதுதான் இந்தியாவின் கதை!

அமுலின் முதல் விளம்பரம்
“உத்தர்லி, பட்டர்லி, டெலிஷஸ்!” — மட்டும் ஒரு ஸ்லோகன் அல்ல; அது ஒரு லட்சம் விவசாயிகளின் வாழ்வின் சுருக்கம்!
-பொன் செந்தில்குமார்











