இன்று மே 15. இந்நாளில் பிறந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி, தமிழ்நாட்டு விவசாயிகளின் நெஞ்சில் என்றும் அழியாத இடம் பிடித்திருக்கிறார். அவரே – சர் ஆர்தர் தாமஸ் காட்டன்.
Thank you for reading this post, don't forget to subscribe!ஆட்சி செய்த வெள்ளையர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் வளங்களை சுரண்டினர். ஆனால் காட்டன், இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்தார். நீரை பாசனமாக்கினார். தமிழரின் பண்டைய பொறியியல் அறிவை உலகுக்கு உரக்கச் சொன்னார்.
சிறு வயதிலேயே பொறியியல் காதல்
1803 மே 15, இங்கிலாந்தின் செஸ்ஷைரில் பிறந்த காட்டன், வெறும் 15 வயதிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் சேர்ந்தார். 1821-ல் சென்னை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் காலடி எடுத்துவைத்த அவர், கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் ஏரி, கண்மாய், குளங்களை பராமரிக்கும் வாய்ப்பு பெற்றார். அப்போது இந்த மண்ணோடும் இங்கின் நீரோடும் அவரது உறவு ஆழமாக பதிந்தது.
கல்லணை – ஒரு திருப்புமுனை
1829-ல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளரான காட்டன், மணல் மேடுகளால் அடைபட்டு பயனற்று கிடந்த கல்லணையை ஆய்வு செய்தார். மணல் போக்கிகள் அமைத்து நீரோட்டத்தை மீட்டெடுத்தார்.
கல்லணையின் அடித்தளத்தை கண்டு வியந்த அவர், இவ்வாறு உரக்க சொன்னார்:
“ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைப்பது எப்படி என்று பழந்தமிழர்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த மகத்தான சாதனை புரிந்த அந்நாளைய தமிழ் மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.”
கரிகாலச் சோழனின் பொறியியல் மேதமையை உலகுக்கு அறிவித்த இந்த வார்த்தைகள் இன்றும் தமிழர் நெஞ்சில் வாழ்கின்றன. கல்லணைக்கு ‘கிரான்ட் அணைக்கட்’ என்று பெயரிட்டு பெருமைப்பட்டுக் கொண்டார் காட்டன்.
முக்கொம்பு முதல் மேட்டூர் வரை

காவிரியும் கொள்ளிடமும் பிரியும் முக்கொம்பில், கடலில் வீணாகி ஓடிய நீரை தடுக்க மேலணை கட்டினார். 1840-ல் கொள்ளிடத்தில் கீழணையும் முழுமையாக கட்டியவர் காட்டன். இதன் வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி கிட்டியது. இன்று சென்னை மக்கள் குடிக்கும் காவிரி நீருக்கும் அடித்தளமிட்டவர் ஆர்தர் காட்டன்தான்.
மேட்டூரில் அணை கட்டவேண்டும் என்று 1835-லேயே முயன்றார். மைசூர் சமஸ்தானத்தின் மறுப்பால் அது தடைபட்டது. ஆனால் அவரது கனவு வீணாகவில்லை – 1934-ல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
ஆந்திரா மண்ணிலும் அவர் தடம்
விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கும், தவளேஸ்வரத்தில் கோதாவரி நதிக்கும் அணை கட்டி ஆந்திராவையும் வளமாக்கினார். விசாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை வரை நீளும் பாம்பன் திட்டம் என அவரது நீரியல் கனவுகள் தென்னிந்தியா முழுவதும் பரவி நின்றன.
வருங்காலத்துக்கான வார்த்தைகள்

“நீர் மேலாண்மைக்காக செய்யும் செலவால் என்ன பயன் என்று இப்போது சொல்ல முடியாது. வருங்கால தலைமுறையினர் அதை உணரும்போதுதான் தெரியும்.”
இதை சொன்னவர் 1899 ஜூலை 14-ல், 96 வயதில் மறைந்தார். ஆனால் அவர் அமைத்த அணைகளில் இன்றும் நீர் ஓடுகிறது. அவர் காட்டிய வழியில் இன்றும் விளைநிலங்கள் பசுமை கொள்கின்றன.
TamilNature நினைவேந்தல்
அவர் பிறந்த மே 15-ஐ நீர்ப்பாசன மேலாண்மை தினமாக அறிவிக்க வேண்டும். அவர் கட்டிய அணைப் பகுதிகளில் சிலைகள் நிறுவ வேண்டும். முக்கொம்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இவைதான் இந்த நீர்த்தேவதைக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/














மறுமொழி இடவும்