அரக்கு காபியின் பின்னால் இருக்கும் ஒரு முன்னுதாரணம்!
ஆந்திரப் பிரதேசத்துக்குச் செல்பவர்கள் அரக்கு காபியை ஒருமுறையாவது ருசித்துப் பார்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்களுடன் அரக்கு காபியைப் பருகிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Thank you for reading this post, don't forget to subscribe!அந்தப் பதிவு என்னை மீண்டும் ஒரு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றது. அது தமிழ்நாட்டின் சின்ன கல்வராயன் (கருமந்துறை) மலை!
அரக்கு காபி என்பது ஒரு பானம் மட்டுமல்ல. பழங்குடி மக்களின் உழைப்பை உலகச் சந்தையுடன் இணைத்த ஒரு வெற்றிக் கதை.
👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு
ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடி விவசாயிகள் அரபிக்கா காபியைச் சாகுபடி செய்கின்றனர். இந்தக் காபிக்கு 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு (GI Tag) கிடைத்தது. இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகப் பதிவிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னால் நந்தி அறக்கட்டளையின் (Naandi Foundation) நீண்டகாலப் பணிகள் உள்ளன.
பழங்குடி விவசாயிகளின் உழைப்பை உலகச் சந்தைக்கு எடுத்துச் சென்ற நந்தி அறக்கட்டளை
அரக்கு பள்ளத்தாக்கில் நந்தி அறக்கட்டளை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பழங்குடி விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இயற்கை சார்ந்த வேளாண்மை, மண்ணின் வளத்தை மேம்படுத்துதல், நிழல் தரும் மரங்களுடன் காபி சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய செயலாக்கம், தரக்கட்டுப்பாடு, சந்தைப்படுத்துதல் எனப் பல நிலைகளில் இந்தப் பணி நடைபெறுகிறது.
அறக்கட்டளையின் தகவலின்படி, சுமார் ஒரு லட்சம் சிறு விவசாயிகள் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். விவசாயிகளின் கூட்டுறவு அமைப்பு மூலம் விளைபொருட்களைச் சேகரித்து, உள்ளூரிலேயே மதிப்புக்கூட்டி, உயர்தரக் காபியாகச் சந்தைப்படுத்துகின்றனர்.
இந்தப் பணிகளில் முக்கியப் பங்காற்றுபவர் டேவிட் ஹாக் (David Hogg). இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் இவர், இயற்கை சார்ந்த வேளாண்மை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டில் அனுபவம் கொண்டவர். தற்போது நந்தி அறக்கட்டளையின் தலைமை வேளாண் ஆலோசகராகச் செயல்படுகிறார்.
டேவிட் ஹாக்கை எனக்கு நேரடியாகத் தெரியும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நண்பரான அவரைச் சந்தித்தும், நேர்காணல் செய்தும் இருக்கிறேன். அரக்கு பள்ளத்தாக்கில் பழங்குடி மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வேளாண் மற்றும் மதிப்புக்கூட்டல் பணிகளை நேரில் பார்த்த அனுபவமும் எனக்கு உண்டு.
அரக்கு காபியின் வெற்றியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இதேபோன்ற வாய்ப்பை நமது கருமந்துறை உள்ளிட்ட மலைப் பழங்குடி மக்களுக்கும் உருவாக்க முடியாதா?
கல்வராயன் மலை: இன்னொரு அரக்கு பள்ளத்தாக்கு உருவாகுமா?
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன கல்வராயன் (கருமந்துறை) மலைப் பகுதியும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கம்தான். இங்கு வாழும் பழங்குடி மக்கள் விவசாயத்தையும், வனப்பொருட்கள் சேகரிப்பையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
அவகோடா, பல்வேறு பழவகைகள், மலர்கள், தேன், புளி, கடுக்காய், கிழங்குகள் எனப் பல வகையான பொருட்களை உற்பத்தி செய்யவும் சேகரிக்கவும் இவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு விவசாயிகளின் பணி முடிந்துவிடுவதில்லை. அவற்றைச் சரியான நேரத்தில் அறுவடை செய்து, தரம் பிரித்து, பதப்படுத்தி, உரிய விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் தேவை.
இந்த இடத்தில்தான் மதிப்புக்கூட்டல் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப் பகுதியில், தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் பங்களிப்புடன் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனமான ICAR-IIHR மூலம் அவகோடா மதிப்புக்கூட்டல், மலர் சாகுபடி, பப்பாளி சாகுபடி உள்ளிட்ட நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளை நேரில் பார்த்தும், விவசாயிகளின் அனுபவங்களைப் பதிவு செய்தும் வருகிறேன்.
விவசாயிகளுக்கு புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், அந்தப் பயிர்களின் விளைபொருட்களுக்கு நிலையான சந்தையை உருவாக்குவது இன்னொரு முக்கியமான பணி.
உதாரணமாக, அவகோடாவை மட்டும் விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் தரத்துக்கேற்ப சந்தைப்படுத்துதல், பழக்கூழ் தயாரித்தல், பதப்படுத்துதல், முறையான பொதியிடுதல் போன்ற வாய்ப்புகளை உருவாக்குதல்… அதேபோல், மலர்களையும் தரம் பிரித்து உரிய சந்தைகளுடன் இணைக்கவும் IIHR முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
‘முல்லை’, ‘கல்வராயன்’ – தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசின் அண்மைய அறிவிப்பு நம்பிக்கை அளிக்கிறது.
2026-27-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்கள் மற்றும் சேகரிக்கும் சிறுவனப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் அலகுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2026 நவம்பர் 6-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 25 மதிப்புக்கூட்டல் அலகுகள் அமைக்கவும், பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்களைத் தனித்த அடையாளத்துடன் சந்தைப்படுத்தவும் ரூ.3 கோடியே 99 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு முக்கியமான வணிகப் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.
எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.
♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க
Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.
அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚
- முல்லை (Mullai): கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்களின் பழங்குடியினர் விளைபொருட்களுக்கான பொதுவான வணிகப் பெயர்.
- கல்வராயன் (Kalvarayan): கள்ளக்குறிச்சி மாவட்டப் பழங்குடியினர் உற்பத்திப் பொருட்களுக்கான தனி வணிகப் பெயர்.
மேலும், மாவட்டத் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் 10 சிறு விற்பனை அங்காடிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புளி, கடுக்காய், தேன், கிழங்குகள் உள்ளிட்ட வனப்பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
மிக முக்கியமாக, ‘முல்லை’ என்ற வணிக முத்திரையைப் பயன்படுத்துவதற்குத் தரக்கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட உள்ளன. பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் அனுமதியுடன் இந்த முத்திரையைப் பயன்படுத்த முடியும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அரசுச் செய்தி: தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு – 6 நவம்பர் 2026.
அரசு மட்டும் போதாது; தன்னார்வ அமைப்புகளும் கைகோக்க வேண்டும்!
கருமந்துறை மலைப் பகுதியிலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை.
குறிப்பாக, இந்தத் திட்டத்தில் சில அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அரக்கு காபியின் வெற்றியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இதுதான். அரசு, ஆராய்ச்சி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள், சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு விளைபொருளை உலக அளவிலான அடையாளமாக மாற்ற முடியும்.
முதலாவதாக, பழங்குடி விவசாயிகளின் பாரம்பரிய அறிவையும், உள்ளூர் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும். இரண்டாவதாக, அவகோடா, தேன், மலர்கள், சிறுவனப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்குத் தரமான செயலாக்க வசதிகளை உருவாக்க வேண்டும்.
மூன்றாவதாக, விவசாயிகளே பங்குதாரர்களாக இருக்கும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். நான்காவதாக, விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான வெளிப்படையான நடைமுறைகளையும், விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், நந்தி அறக்கட்டளை போன்ற அனுபவம் வாய்ந்த தன்னார்வ அமைப்புகள் இந்தப் பகுதிகளில் பணியாற்ற முன்வர வேண்டும். இயற்கை வேளாண்மை, மதிப்புக்கூட்டல், தொழில்முனைவோர் பயிற்சி, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் அவற்றின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோல், ICAR-IIHR போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் வழங்கும் தொழில்நுட்ப உதவியும், தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
‘கல்வராயன், முல்லை’ என்பது வணிகப் பெயராக மட்டும் இருக்கக்கூடாது!
ஒரு பொருளுக்குப் பெயர் வைப்பது எளிது. ஆனால் அந்தப் பெயருக்கு நம்பகத்தன்மையை உருவாக்குவதுதான் கடினமான பணி.
அரக்கு காபிக்கு புவிசார் குறியீடு, இயற்கை சார்ந்த உற்பத்தி முறை, தரக்கட்டுப்பாடு, விவசாயிகள் கூட்டுறவு, சர்வதேசச் சந்தைத் தொடர்புகள் எனப் பல அம்சங்கள் வலுசேர்த்துள்ளன.
அதேபோல், ‘கல்வராயன்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் தரம், உற்பத்தி முறை, மூலப்பொருளின் தோற்றம், விவசாயிகளுக்குக் கிடைக்கும் நியாயமான விலை ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, மலைப்பகுதியின் இயற்கை வளங்களைப் பாதுகாத்துக்கொண்டே விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும். சந்தைத் தேவைக்காக ஒரே பயிரை அதிகமாகச் சாகுபடி செய்து, இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது.
அரக்கு பள்ளத்தாக்கும் சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலையும் ஒரே மலைத்தொடரின் பகுதிகள். இரண்டு பகுதிகளிலும் இயற்கை வளங்களையும், பழங்குடி மக்களின் உழைப்பையும் இணைத்து நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அரக்கு காபியைப் பருகும்போது அதன் சுவையை மட்டுமல்ல, அதன் பின்னால் இருக்கும் பழங்குடி விவசாயிகளின் உழைப்பையும் நாம் நினைவில் கொள்கிறோம். அதேபோல், ஒருநாள் ‘கல்வராயன், முல்லை’ என்ற பெயரைக் கேட்டாலே அங்குள்ள பழங்குடி மக்களின் உழைப்பும், இயற்கையோடு இணைந்த உற்பத்தியும், அவர்களின் பொருளாதார முன்னேற்றமும் நினைவுக்கு வர வேண்டும்.
அதற்கான தொடக்கமாக இந்த அரசின் முயற்சி அமையட்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
அவகோடா சாகுபடியில் ஆர்வமுள்ளவர்கள், ICAR-IIHR கருத்தரங்கில் பகிரப்பட்ட அவகோடா சாகுபடி அனுபவங்கள் மற்றும் அவகோடா பழங்களை மதிப்புக்கூட்டிப் பொடியாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கட்டுரைகளையும் படிக்கலாம்.
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/















