அவகோடா சாகுபடியில் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், பூனைக்காலி உள்ளிட்ட உயர் மதிப்பு பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கு ஆகஸ்ட் 28-ம் தேதி பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் (ICAR-IIHR) நடைபெற்றது.
Thank you for reading this post, don't forget to subscribe!“அள்ள அள்ள லாபம் தரும் அவகோடா & பூனைக்காலி சாகுபடி!” என்ற தலைப்பில், ICAR-IIHR மற்றும் Society for Promotion of High Value Exotic Horticulture Crops (SPHEHC) இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 230 விவசாயிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவகோடாவுக்கு அதிகரிக்கும் ஆர்வம்
இந்தியாவில் அவகோடாவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல், உணவகங்கள், பழச்சந்தைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களிலும் அவகோடாவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனால், இந்திய விவசாயிகளுக்கும் அவகோடா ஒரு புதிய வாய்ப்பாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில், அவகோடா சாகுபடி, பூனைக்காலி சாகுபடி, உயர் மதிப்பு தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக விளக்குவதற்காக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ICAR-IIHR-ன் பழப்பயிர்கள் துறைத் தலைவர் முனைவர் மு. சங்கரன், அவகோடா பழம் மற்றும் அதன் சாகுபடி வாய்ப்புகள் குறித்து முன்னுரை வழங்கினார்.

“மருத்துவப் பயிராக நினைத்தோம்; இன்று இயற்கை வேளாண்மைக்கும் முக்கியம்!”
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஹிமா பிந்து, ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி, ICAR-IIHR, பெங்களூரு, பூனைக்காலி குறித்து சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசும்போது, பூனைக்காலி ரகத்தை வெளியிட்ட காலத்தில் அதனை மருத்துவப் பயிராகவே கருதியதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், இன்று பூனைக்காலி இயற்கை வேளாண்மையிலும் முக்கியப் பங்கு வகிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம், ஒரு பயிரின் பயன்பாடு காலப்போக்கில் எவ்வாறு புதிய பரிமாணங்களைப் பெறுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“விவசாயிகள்தான் நாட்டின் உணவுப் பாதுகாவலர்கள்!”
நிகழ்ச்சியின் பிரதான விருந்தினராக எஸ். எச். ஹேமந்த் குமார், JHA, DIG (CI), CEDCO BSF, எலஹங்கா, பெங்களூரு பங்கேற்றார்.
அவர் பேசும்போது, நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் உணவு வழங்கி பாதுகாக்கும் விவசாயிகள் பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், ICAR-IIHR விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“230 விவசாயிகள்… அரங்கு நிறைந்துள்ளது!”
ICAR-IIHR இயக்குநர் பேராசிரியர் டி.கே. பெஹேரா, நிகழ்ச்சியில் விவசாயிகளின் ஆர்வத்தைப் பாராட்டினார்.
அவர் பேசும்போது, 5 மாநிலங்களைச் சேர்ந்த 230 விவசாயிகள் அவகோடா போன்ற பயிர்களுக்காக ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதை முதல்முறையாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அரங்கு முழுவதும் விவசாயிகளால் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவகோடா, பூனைக்காலி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகின்றன என்றார்.
“இந்தியாவில் உள்ள விவசாயிகள் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்திக்கொண்டு தோட்டக்கலைப் பயிர்களில் நல்ல லாபம் பெற முன்வர வேண்டும். அதற்கு நானும் எங்கள் விஞ்ஞானிகளும் வழிகாட்டத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் அவகோடா!
இந்தக் கருத்தரங்குக்கு மேலும் ஒரு சிறப்பை ஏற்படுத்தியது, ஆகஸ்ட் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 137- வது‘மனதின் குரல்’ (Mann Ki Baat) வானொலி நிகழ்ச்சியில் அவகோடா விவசாயிகளின் முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டதுதான்.
நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் குறித்து பிரதமர் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்களின் அவகோடா சாகுபடி முயற்சியையும் அவர் பாராட்டிப் பேசினார்.

அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா சாகுபடியைத் தொடங்கிய சந்திரசேகரன், சந்தையில் கிடைக்கும் நல்ல விலையைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அதேபோல், ஆந்திரப் பிரதேசம் கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 4 டன் அவகோடாவை உற்பத்தி செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இடைத்தரகர்களைத் தவிர்த்து உள்ளூர் கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவின் சிக்மகளூரு பகுதியிலும் விவசாயிகள் காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக வளர்த்து வருகின்றனர்.
இதன் மூலம் காபி மற்றும் மிளகுடன் கூடுதல் வருமானத்தையும் அவர்கள் பெறுகின்றனர்.
“நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி கேட்கிறோம். அதே அவகோடா நமது நாட்டின் விவசாயிகளுக்கும் புதிய வருமான வழியை உருவாக்கியுள்ளது” என்ற கருத்தையும் பிரதமர் முன்வைத்தார்.
இதனால், இந்திய மண்ணில் விளையும் அவகோடா, நுகர்வோரின் உணவைச் சுவையாக்குவதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும் வாய்ப்பாக மாறி வருவது கவனம் பெற்றுள்ளது.
“இந்தியாவில் அவகோடா சாகுபடி வேகமாகப் பரவும்!”
நிகழ்ச்சி குறித்து ICAR-IIHR-ன் முதன்மை விஞ்ஞானி- தலைவர் (விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார் கூறும்போது, அவகோடா மற்றும் பூனைக்காலி பயிர்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிவருவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பயிர்களை நேரில் பார்த்த விவசாயிகள், அவற்றை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டியதையடுத்து இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் அவகோடா சாகுபடிக்காக நடத்தப்பட்ட பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் இதுவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
“இதன் மூலம் அவகோடா சாகுபடி இந்தியாவில் வேகமாகப் பரவும்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
அத்துடன், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் அவகோடா விவசாயிகளையும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டது, அவகோடா தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவகோடா, பூனைக்காலி மட்டுமின்றி மிளகு, மங்குஸ்தான், கோக்கம், மலர்ப்பயிர்கள் மற்றும் மருத்துவப் பயிர்கள் போன்றவற்றிலும் விவசாயிகள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் சேவைக்கு பாராட்டு!

இந்த நிகழ்ச்சியில் ICAR-IIHR தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் Tamil Farming TV சேனல் மற்றும் தமிழ் நேச்சர் இணையதளத்தின் நிறுவனர் பொன் செந்தில்குமார், Professor of Practice, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்திணை திட்ட ஒருங்கிணைப்பாளர் பொன். வைத்தியநாதன், ஐந்திணை திட்டத்தின் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேளாண் பொறியாளர் ராகுல், Ascophyllum Nodosum Seaweed மூலம் இயற்கை வேளாண்மைக்கு உதவி வரும் K.S. கார்த்திக் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வயலுக்குள் இறங்கிய விவசாயிகள்!
கருத்தரங்கில் உரைகள் மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கமும் வழங்கப்பட்டது.
மதிய உணவுக்குப் பிறகு, ICAR-IIHR வளாகத்தில் அமைந்துள்ள பூனைக்காலி மற்றும் அவகோடா செயல் விளக்கத் திடலுக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு முதன்மை விஞ்ஞானி முனைவர் சங்கர், முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார் உள்ளிட்டோர் சாகுபடி தொழில்நுட்பங்களை நேரடியாக விளக்கினர்.
முன்னதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள National Horticulture Board-ன் துணை இயக்குநர் ராஜா, தேசிய தோட்டக்கலை வாரியத்தில் அவகோடா உள்ளிட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் குறித்து உரையாற்றினார்.
அதன்பிறகு, அறுவடை நுட்பங்கள் குறித்து முதுநிலை விஞ்ஞானி விஜய ராகேஷ் ரெட்டி விளக்கினார்.
மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து முதுநிலை விஞ்ஞானி முனைவர் பிரீத்தி உரையாற்றினார்.
இதனால், கருத்தரங்கு வெறும் மேடை நிகழ்ச்சியாக இல்லாமல், விவசாயிகள் நேரடியாகப் பார்த்து, கேட்டுத் தெரிந்துகொள்ளும் களப்பயிற்சியாகவும் அமைந்தது.
“மீண்டும் ICAR-IIHR வர வேண்டும்!”
மாலை 6.30 மணியைத் தாண்டியும் விவசாயிகளின் ஆர்வம் குறையவில்லை.
அவகோடா எப்படி வளர்கிறது? பூனைக்காலியை எப்படிப் பயன்படுத்துவது? அறுவடை எப்படி செய்வது? மதிப்புக்கூட்டல் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியுமா? எனப் பல்வேறு கேள்விகளுடன் விவசாயிகள் விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினர். முதன்மை விஞ்ஞானி முனைவர் சுமங்களா நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு அடைந்தது; அடுத்த முறையும் ICAR-IIHR-க்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர்.
அவகோடா, பூனைக்காலி போன்ற புதிய பயிர்கள் குறித்த ஆர்வம் ஒரு நாள் கருத்தரங்குடன் முடிவடையாமல், விவசாயிகளின் வயல்களுக்குச் செல்லும்போதுதான் அதன் உண்மையான வெற்றி தொடங்கும்.
அந்தப் புதிய தொடக்கத்துக்கான ஒரு முக்கியப் படியாகவே இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது.
தொடர்புக்கு
முனைவர் இர. செந்தில்குமார்
முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்)
ICAR-IIHR, பெங்களூரு
செல்போன்: 96637 96473
Pictures credit: K. Chandrashekar, ICAR-IIHR
“அள்ள அள்ள லாபம் தரும் அவகோடா & பூனைக்காலி சாகுபடி!” கருத்தரங்கின் காணொளி பதிவு
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/













Leave a Reply