சிலுசிலுவெனக் குளிர் காற்று வீசும் கோயம்புத்தூரில், நவம்பர் 19, 20 ஆகிய இரண்டு நாள்களும் கார்பன் விவசாயம் குறித்த சிந்தனைகள் நிறைந்திருந்தன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றபோது, கொங்கு மண்ணின் அன்பான வரவேற்பும் விருந்தோம்பலும் மனதுக்கு நெருக்கமாக இருந்தன. கருத்தரங்கில் நான் ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போஸ்டர் வடிவில் சமர்ப்பித்து, அதுகுறித்து விளக்கியும் பேசினேன்.
Thank you for reading this post, don't forget to subscribe!‘கார்பன் விவசாயம் மற்றும் வேளாண்மையில் கார்பன் வர்த்தகம்’ National Symposium on “Carbon Farming and CarbonTrading in Agriculture”என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தத் தேசியக் கருத்தரங்கை, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
‘எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இரண்டு துறைகள்!’
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR), மண் மற்றும் நீர் மேலாண்மைப் பிரிவின் உதவி தலைமை இயக்குநர் டாக்டர் ஏ. வேல்முருகன் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் (AI), கார்பனும் உலகின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கியத் துறைகளாக இருக்கும் என்றும், இவ்விரண்டிலும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு
இந்தக் கருத்து வேளாண்மைக்கும் பொருந்தும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மண்ணில் கரிமத்தைச் சேமிப்பதும், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதும் விவசாயத்தின் எதிர்காலத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை. அதே நேரத்தில், இத்தகைய மாற்றங்கள் விவசாயிகளின் வருமானத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

போஸ்டர் விளக்கத்திலும் சுற்றுச்சூழல் அக்கறை
பொதுவாக ஆய்வுக் கருத்தரங்குகளில் போஸ்டர் சமர்ப்பிப்பவர்கள் தங்கள் ஆய்வை அச்சிட்டு, பதாகையாகக் கொண்டு வந்து காட்சிப்படுத்துவார்கள். அதன் அருகில் நின்று ஆய்வின் நோக்கம், முடிவுகள், பரிந்துரைகளைப் பார்வையாளர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்தக் கருத்தரங்கில் ஏற்பாட்டாளர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் மின்னணு போஸ்டர் (E-poster) முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர்.
நானும் எனது ஆய்வுக் கட்டுரையை மின்னணு போஸ்டர் வடிவில் சமர்ப்பித்து, அதன் கருத்துகளைப் பங்கேற்பாளர்களிடம் விளக்கிப் பேசினேன். ஒரு சுற்றுச்சூழல் கருத்தரங்கின் ஏற்பாட்டிலேயே காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சி இடம்பெற்றது பாராட்டத்தக்கது. நிலைத்தன்மை என்பது மேடையில் பேசப்படும் கருத்தாக மட்டும் இல்லாமல், நிகழ்ச்சி நடத்தும் முறையிலும் வெளிப்பட வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இந்த நல்ல முயற்சிக்கு காரணம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், இயக்குநர், இயற்கை வள மேலாண்மை இயக்குநரகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் என்பதை அறிவேன். இவர் இப்பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மையத்தின் தலைவராக இருந்த போது, நான் பசுமை விகடன் இதழாசிரியராக பொறுப்பு வகித்த போது இவரின் பல பயனுள்ள தொழில்நுட்ப வழிகாட்டல்கள் பசுமை விகடன் இதழில் இடம் பெற்றன.

கார்பன் விவசாயம்: மண்ணுக்கும் விவசாயிக்கும் என்ன பயன்?
கார்பன் விவசாயம் என்பது மண்ணில் கரிமச் சேமிப்பை அதிகரிக்கும் வேளாண் நடைமுறைகளையும், பண்ணைகளிலிருந்து வெளியாகும் பசுமைக்குடில் வாயுக்களைக் குறைக்கும் முறைகளையும் உள்ளடக்கியது. பயிர் சுழற்சி, மூடாக்குப் பயிர்கள், குறைந்த உழவு, பயிர்க் கழிவுகளை மண்ணுக்குத் திருப்புதல், மரம் சார்ந்த வேளாண்மை, மண் வளத்தைப் பாதுகாக்கும் நடைமுறைகள் ஆகியவை இதற்கு உதவக்கூடும்.
மண்ணில் கரிமப் பொருள் அதிகரிப்பது மண் கட்டமைப்பு, நீர் பிடிப்புத்திறன், நுண்ணுயிர் செயல்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவாக அமையும். இதனால் நீண்டகாலத்தில் மண் வளத்தையும் வேளாண்மையின் காலநிலைத் தாங்குதிறனையும் மேம்படுத்த முடியும். ஆனால், எந்த ஒரு நடைமுறையையும் எல்லா நிலங்களுக்கும் ஒரே மாதிரியாகப் பரிந்துரைக்க முடியாது. மண் வகை, பயிர், நீர் கிடைப்புத் தன்மை, உள்ளூர் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்நுட்ப ஆலோசனை அவசியம்.
மாமரத் தோட்டங்களில் கார்பன் சேமிப்பு குறித்த ஆய்வுகளும் இந்த விவாதத்துக்கு வலுசேர்க்கின்றன. மாமரங்களில் பழங்களுடன் கார்பன் கிரெடிட் வாய்ப்புகளும் உருவாகுமா? என்ற கோணத்தில் இதுகுறித்து ஏற்கெனவே தமிழ்நேச்சரில் விரிவாக எழுதியுள்ளோம்.
கார்பன் கிரெடிட்: சிறு விவசாயிகளுக்கு வாய்ப்பும் சவாலும்
கார்பன் கிரெடிட் திட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன. ஒரு திட்டத்தின் மூலம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டதோ அல்லது கார்பன் சேமிப்பு அதிகரிக்கப்பட்டதோ அறிவியல் முறையில் அளவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டால் அதற்கான கார்பன் கிரெடிட்கள் உருவாகலாம். அவற்றைச் சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இதில் பல தடைகள் உள்ளன. அளவீடு, அறிக்கை தயாரித்தல், மூன்றாம் தரப்புச் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கான செலவு அதிகமாக இருக்கலாம். நடைமுறைகள் சிக்கலாக இருக்கலாம். கார்பன் கிரெடிட்களின் விலையும் சந்தையைப் பொறுத்து மாறக்கூடும். எனவே, இயற்கை வேளாண்மை செய்தாலோ, மரங்களை வளர்த்தாலோ தானாகவே கார்பன் கிரெடிட் கிடைத்துவிடும் என்று கருதக் கூடாது. அறிவியல் அடிப்படையிலான அளவீடும் வெளிப்படையான சரிபார்ப்பும் அவசியம்.
இந்தியாவில் வேளாண்மையையும் கார்பன் வர்த்தக அமைப்பையும் இணைப்பதற்கான கொள்கை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசின் விளக்கத்தை வேளாண் துறைக்கான கார்பன் வர்த்தகக் கட்டமைப்பு என்ற அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம். சிறு விவசாயிகளுக்கான கார்பன் கிரெடிட் வாய்ப்புகள் குறித்தும் ICAR வெளியிட்டுள்ள தகவல்கள் பயனுள்ள பின்னணியை வழங்குகின்றன.
தமிழ்நாடு விவசாயிகளுக்காக ‘Farmer Carbon Credit Mission’
இந்தச் சவால்களையும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, ‘தமிழ்நாடு விவசாயிகள் கார்பன் கிரெடிட் இயக்கம்’ (Tamil Nadu Farmer Carbon Credit Mission) ஒன்றைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இது வெறும் கார்பன் கிரெடிட் விற்பனைத் திட்டமாக இல்லாமல், மண் வளப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கேற்ற வேளாண்மை, விவசாயிகளின் கூடுதல் வருமானம் ஆகிய மூன்றையும் இணைக்கும் மாநில அளவிலான முயற்சியாக அமைய வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மண், பயிர், நீர் மற்றும் காலநிலைச் சூழலுக்கு ஏற்ற செயல்விளக்கக் கிராமங்களை உருவாக்க வேண்டும்.
- சிறு விவசாயிகளும் பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவிலான மின்னணு அளவீடு மற்றும் கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ICAR நிறுவனங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் (KVK) ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
- தனித்தனி விவசாயிகளாகச் செயல்படுவதற்குப் பதிலாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO), கூட்டுறவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் குழுக்கள் வழியாகக் கூட்டுக் கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- கார்பன் அளவீடு, சரிபார்ப்பு, சந்தை விலை, ஒப்பந்த நிபந்தனைகள் ஆகியவற்றில் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக, கார்பன் கிரெடிட் வருவாயில் இடைத்தரகர்களின் பங்கு, அளவீட்டுச் செலவு, விவசாயிகளுக்குக் கிடைக்கும் நிகரத் தொகை ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலத்தில் மேற்கொள்ளும் மாற்றங்களுக்கான தரவுகளையும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும். கார்பன் திட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய கடன் சுமையையோ தேவையற்ற ஒப்பந்தப் பிணைப்பையோ உருவாக்கக் கூடாது.

ஆராய்ச்சியிலிருந்து விவசாய நிலம் வரை
கார்பன் விவசாயம் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு புதிய சொல் மட்டுமல்ல. அது மண்ணின் எதிர்காலம், விவசாயத்தின் பொருளாதாரம், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. உலகளவில் மண் கரிமத்தை அதிகரிக்கும் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) RECSOIL திட்டம் முன்னெடுத்து வருகிறது.
கோவையில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் கருத்தரங்கு, அறிவியல் ஆய்வுகள், அரசின் கொள்கைகள், விவசாயிகளின் நடைமுறைத் தேவைகள் ஆகியவற்றை ஒரே மேடையில் விவாதிக்க உதவியது. இத்தகைய கருத்தரங்குகளின் உண்மையான வெற்றி, அங்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் விவசாய நிலங்களைச் சென்றடைவதில்தான் இருக்கிறது.
தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.
எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.
♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க
Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.
அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚
மண்ணைக் காப்பாற்றும் வேளாண்மை, விவசாயியையும் காப்பாற்றும் பொருளாதாரமாக மாற வேண்டும். கார்பன் விவசாயத்தின் எதிர்காலம், சிறு விவசாயிகளையும் உள்ளடக்கிய நியாயமான திட்டங்களை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/













Leave a Reply