எல்நினோவை எதிர்கொள்ள விவசாயிகள் சொல்லும் வழிகள்!
காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்களை உருவாக்கி வருகிறது. ஒருபுறம் மழை குறைகிறது. மறுபுறம் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. எல்நினோ, சூப்பர் எல்நினோ போன்ற பருவநிலை நிகழ்வுகளும் விவசாயத்தைப் பாதிக்கின்றன.
Thank you for reading this post, don't forget to subscribe!இத்தகைய சூழலில் விவசாயிகள் எப்படித் தங்கள் பயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்? அவர்களிடம் இருக்கும் அனுபவ அறிவு நவீன வேளாண் அறிவியலுக்கு எவ்வாறு உதவும்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IIHR) விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு
2026 நவம்பர் 15-ம் தேதி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) தலைமை இயக்குநரும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைச் செயலருமான முனைவர் எம்.எல். ஜாட், விவசாயிகளுக்கான மேம்பட்ட பயிற்சி மையத்தை (Farmers’ Advanced Training Centre) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ICAR-ன் பழங்கள் மற்றும் நறுமணப் பயிர்கள் பிரிவுக்கான கூடுதல் தலைமை இயக்குநர் முனைவர் வி.பி. படேல், ICAR-IIHR இயக்குநர் முனைவர் டி.கே. பெஹேரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும், பெங்களூருவில் உள்ள ICAR நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், சமூக அறிவியல் மற்றும் பயிற்சிப் பிரிவின் தலைவர் முனைவர் ர. செந்தில்குமார், விஞ்ஞானிகள், முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதையடுத்து கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், இயற்கை வேளாண்மையாளர்கள், நாற்றங்கால் உரிமையாளர்கள், வேளாண் தொழில்முனைவோர் ஆகியோருடன் கலந்துரையாடினார் முனைவர் எம்.எல். ஜாட்.
அப்போது, எல்நினோ மற்றும் சூப்பர் எல்நினோ போன்ற பருவநிலை நிகழ்வுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? என்று விவசாயிகளிடம் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் தங்களது கள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இயற்கை வேளாண்மை, மூடாக்கு, தெளிப்பு நீர்ப்பாசனம், வரப்புப் பயிர்கள், ஊடுபயிர், பசுந்தாள் உரம் போன்ற முறைகளைக் கையாண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
குறிப்பாக, குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய மலர்கள், காய்கறிகளை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறுவதுடன், காலநிலைச் சவால்களையும் எதிர்கொள்வதாக விவசாயிகள் விளக்கினர்.
இந்த முறைகள் பயிர்களின் விளைச்சல், விளைபொருள்களின் தரம், விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றை மேம்படுத்த உதவியுள்ளதாக தெரிவித்தர்.
விவசாயிகளின் அனுபவங்களைக் கேட்ட முனைவர் ஜாட், இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும்,தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ் சுமார் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளதாகவும், 13 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை முறையில் சாகுபடி செய்வது மட்டுமல்லாமல், விளைபொருள்களை நுகர்வோரிடம் நம்பகத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதும் முக்கியம். இதற்கு இயற்கை வேளாண்மைச் சான்றிதழ்கள் உதவுகின்றன.
குறிப்பாக, சிறு விவசாயிகள் குழுவாக இணைந்து பெறக்கூடிய PGS-India உயிர்மச் சான்றிதழ் முறை பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து இயற்கை விவசாயிகளுக்கு இலவசமாகக் கிடைக்கும் உயிர்மச் சான்றிதழ் வாய்ப்பு என்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்துள்ளோம்.
தோட்டக்கலைப் பயிர்களுக்கு மரபணு திருத்த ஆராய்ச்சி மையம்!
விவசாயிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, தோட்டக்கலைப் பயிர்களுக்கான மரபணு திருத்தத் தொழில்நுட்பச் சிறப்பு மையத்தையும் (Centre of Excellence for Genome Editing in Horticultural Crops), உயிரிப் பாதுகாப்பு நிலை-2 ஆய்வகத்தையும் (BSL-II Laboratory) முனைவர் ஜாட் திறந்து வைத்தார்.
மரபணு திருத்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பயிர்களின் குறிப்பிட்ட மரபணுப் பகுதிகளில் மாற்றங்களைச் செய்து, நோய் எதிர்ப்புத் திறன், வறட்சியைத் தாங்கும் திறன், தரம், ஊட்டச்சத்து போன்ற பண்புகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக, பழங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் இந்தத் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
இந்தியாவுக்குத் தேவையான மரபணு வளங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என்றும், உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிக விளைச்சல் மட்டுமல்ல; அதிக ஊட்டச்சத்தும் தேவை!
இந்திய வேளாண்மையின் எதிர்காலம் குறித்து முனைவர் ஜாட் முன்வைத்த மற்றொரு முக்கியமான பார்வை, பயிர்களின் ஊட்டச்சத்துத் தரம்.
அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்குவதுடன் நின்றுவிடக் கூடாது. அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்ட பயிர் வகைகளையும் உருவாக்க வேண்டும். குறைந்த நீரில் வளரக்கூடிய, காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய ரகங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
ஒரு பயிர் அதிக மகசூல் கொடுத்தாலும், அதற்குத் தேவைப்படும் தண்ணீரும் உரமும் அதிகமாக இருந்தால் விவசாயிகளின் சாகுபடிச் செலவு அதிகரிக்கும். எனவே, குறைந்த இடுபொருள் செலவில் அதிக விளைச்சலும் ஊட்டச்சத்தும் கிடைக்கக்கூடிய பயிர் ரகங்கள் தேவை.
இதற்காக மரபணு ஆராய்ச்சி மட்டுமல்லாமல், பாரம்பர்ய விதை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
மண் வளமும் பல்லுயிர்த் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்!
இந்திய வேளாண்மை அதிக மகசூலை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படக்கூடாது. மண்ணின் உயிரியல் வளம், நுண்ணுயிர்கள், பயிர்ப் பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முனைவர் ஜாட் வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதி உரங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கும், மண்ணின் இயற்கையான வளத்தை மேம்படுத்துவதற்கும் சூழலியல் வேளாண்மை (Agroecology), மறுஉயிர்ப்புத் தன்மை கொண்ட வேளாண்மை (Regenerative Agriculture), இயற்கை வேளாண்மை ஆகியவை உதவக்கூடும்.
இயற்கை வேளாண்மை, மறுஉயிர்ப்பு வேளாண்மை ஆகியவற்றில் எது சிறந்தது என்பதைப் பொதுவாகத் தீர்மானிக்க முடியாது. எந்தப் பகுதியில் எந்த முறை பொருத்தமானது என்பதை மண்ணின் தன்மை, காலநிலை, நீர் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்பதும் அவரது கருத்து.
இந்திய வேளாண்மையின் அடுத்தகட்ட இலக்குகளாக நீர்ப் பயன்பாட்டுத் திறனை இரட்டிப்பாக்குவது, ஊட்டச்சத்துப் பயன்பாட்டுத் திறனை இரட்டிப்பாக்குவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பாதியாகக் குறைப்பது ஆகியவற்றை அவர் முன்வைத்துள்ளார்.
மண்ணின் உயிரியல் வளத்தைப் பாதுகாப்பதற்கான புதிய முயற்சிகள் குறித்தும் விவசாயிகள் அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக ICAR மற்றும் பிரம்மா குமாரிகள் இணைந்து முன்னெடுக்கும் இயற்கை வேளாண்மை முயற்சி கவனிக்கத்தக்கது.
அதேபோல், பயிர்க்கழிவுகளைப் பயன்படுத்தி கார்பன் கிரெடிட் பெறும் வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.
எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.
♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க
Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.
அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚
விவசாயிகளின் ஊட்டச்சத்துக்கும் வேளாண்மைக்கும் தொடர்பு!
ஒருங்கிணைந்த வேளாண்மை முறைகளைப் பின்பற்றும் விவசாயக் குடும்பங்களின் உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் குறித்தும் ICAR ஆராய்ந்து வருவதாக முனைவர் ஜாட் தெரிவித்துள்ளார்.
ஒரே பயிரை மட்டும் நம்பியிருக்கும் விவசாய முறையில் வருமானம் மட்டுமல்லாமல், குடும்பத்தின் உணவுப் பன்முகத்தன்மையும் பாதிக்கப்படலாம்.
ஆனால், பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்டவற்றையும் இணைத்தால் விவசாயக் குடும்பங்களுக்குப் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேளாண்மை என்பது உணவு உற்பத்தியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது மனிதர்களின் ஊட்டச்சத்து, உடல்நலம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்பதை இந்த அணுகுமுறை உணர்த்துகிறது.
“விவசாயிகள் அல்ல; Practical Scientists!”
விவசாயிகளுடனான கலந்துரையாடல் மற்றும் புதிய ஆராய்ச்சி மையத் திறப்பு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ் நேச்சர் மற்றும் தமிழ் ஃபார்மிங் டிவி சார்பில் முனைவர் எம்.எல். ஜாட்டை நேர்காணல் செய்தோம்.

அப்போது IIHRல் விவசாயிகளுக்கான மேம்பட்ட பயிற்சி மையத்தில் (Farmers’ Advanced Training Centre) விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சியுடன் பேட்டியைத் தொடங்கினார்.
“நவீன அறிவியலும் பாரம்பர்ய வேளாண் அறிவும் இணைய வேண்டிய காலம் இது. இன்று கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளுடன் உரையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது. காலநிலை மாற்றத்தை வெற்றிகொள்ளும் வழிகளை கழனியில் உள்ள விவசாயிகள் சிறப்பாகக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் விவசாயிகள் அல்ல; Practical Scientists (நடைமுறை அறிவியலாளர்கள்) என்றுதான் அழைக்க வேண்டும். தினந்தோறும் வயலிருந்துக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். கற்பதன் மூலம் புதிய முறைகளையும் உருவாக்குகிறார்கள். மேலும்,ஐடி துறையிலிருந்து வந்த இளைஞர்கள் கூட விவசாயத்தில் சாதிக்கிறார்கள்.
ICAR மூலம் விவசாயிகளின் பாரம்பர்ய வேளாண் தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்தி, பிற விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பயிர் ரகங்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் எதிர்காலம் குறித்துப் பேசியவர்,
“அதிக விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து அதிக சத்துக்கள் கொண்ட பயிர் வகைகளை உருவாக்க வேண்டும். குறைந்த நீரில், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்கள்தான் இப்போது தேவை” என்று குறிப்பிட்டார்.
நவீன அறிவியலையும் விவசாயிகளின் அனுபவ அறிவையும் இணைப்பது குறித்த அவரது கருத்து கவனிக்கத்தக்கது.
ஆய்வகங்களில் உருவாகும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளின் வயல்களுக்குச் செல்ல வேண்டும். அதேபோல், விவசாயிகளின் வயல்களில் கிடைக்கும் வெற்றிகரமான அனுபவங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும். இரண்டுக்கும் இடையே வலுவான பாலம் உருவாக வேண்டும்.
விவசாயிகளின் அனுபவம் அறிவியலாகவும், அறிவியல் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் மாற வேண்டும். இதுதான் எதிர்கால வேளாண்மைக்கான சரியான பாதை; இந்தியா அந்த பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டதை உணர்த்தியது IIHR ல் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ICAR தலைவர் முனைவர் எம்.எல். ஜாட் பேட்டியும்!
அதிகாரப்பூர்வச் செய்தி: ICAR-IIHR-ல் புதிய ஆராய்ச்சி மையங்கள் மற்றும் விவசாயிகள் பயிற்சி மையம் திறப்பு – இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் (PIB)
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/
















Leave a Reply