Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம்! Arka Savi சாகுபடி ரகசியம் சொல்லும் கர்நாடகா விவசாயி!

கர்நாடகா பெங்களூரு அருகே சிவகோடே பகுதியில் அர்க்கா சவி ரோஜா சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி சந்திரபாபு.

ஒரு ஏக்கர் நிலத்தில் ரோஜா சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம் ஈட்ட முடியுமா? கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சந்திரபாபுவின் அனுபவம் இந்தக் கேள்வியை எழுப்புகிறது.

Thank you for reading this post, don't forget to subscribe!

பெங்களூரு அருகே ஹெசரகட்டா அடுத்த சிவகோடே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவர், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR) உருவாக்கிய அர்க்கா சவி (Arka Savi) ரோஜா ரகத்தைச் சாகுபடி செய்து வருகிறார்.

தனது தோட்டத்தில் கிடைக்கும் மகசூல், பூக்களின் தரம், சந்தை வாய்ப்பு, வருமானம் உள்ளிட்ட அனுபவங்களைத் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இந்தச் சந்திப்பில் ICAR-IIHR முதன்மை விஞ்ஞானியும் மலரியல் துறைத் தலைவருமான முனைவர் பாஸ்கரன், அவரது அனுபவங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்.

👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு

அர்க்கா சவி ரோஜா ரகத்தின் சிறப்புகள் என்ன?

சாதாரண ரோஜா சாகுபடிக்கும், வணிக நோக்கிலான மலர் சாகுபடிக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, பூக்களின் எண்ணிக்கை, நிறம், தரம், அறுவடைக்குப் பிறகு புத்துணர்ச்சியைத் தக்கவைக்கும் காலம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தைத் தீர்மானிக்கின்றன.

இந்தப் பின்னணியில் ICAR-IIHR உருவாக்கியுள்ள அர்க்கா சவி ரோஜா ரகம் கவனம் பெறுகிறது.

இது Floribunda வகையைச் சேர்ந்த ரோஜா கலப்பின ரகம். ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும். திறந்தவெளியில் தளர்மலர் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட ரகம்.

ICAR-IIHR வெளியிட்டுள்ள தகவலின்படி, அர்க்கா சவி ரகத்தின் எதிர்பார்க்கப்படும் ஆண்டு மகசூல் ஏக்கருக்கு 25–30 டன். மேலும், பூக்கள் 5–6 நாட்கள் வரை புத்துணர்ச்சியைத் தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

இதனால், உள்ளூர் மலர் சந்தைகளுக்கு மட்டுமின்றி, தரமான பூக்களைத் தொடர்ந்து தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

அர்க்கா சவி ரோஜா குறித்த கூடுதல் தகவல்களுக்கு ICAR-IIHR அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

ஏக்கருக்கு ரூ.20 லட்சம் வருமானம் எப்படி?

சந்திரபாபுவின் அனுபவத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மலர் உற்பத்தியுடன் சந்தைப்படுத்தலுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவம்.

ரோஜா சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பது மட்டுமே போதாது. பூக்களைச் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். தரத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்ய வேண்டும்.

குறிப்பாக, இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நேரடி விற்பனை வாய்ப்புகளை உருவாக்கினால் விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கலாம்.

சந்திரபாபு தனது சாகுபடி அனுபவத்தின் அடிப்படையில் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம் கிடைப்பதாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இருப்பினும், இந்த வருமானத்தை எல்லா விவசாயிகளுக்கும் உறுதியான லாபமாகக் கருத முடியாது. சாகுபடிச் செலவு, தொழிலாளர் கூலி, நீர்ப்பாசனம், உரம், பயிர்ப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் அன்றாடச் சந்தை விலை ஆகியவற்றைப் பொறுத்து நிகர லாபம் மாறுபடும்.

எனவே, புதியதாக ரோஜா சாகுபடியில் இறங்க விரும்புவோர் தங்கள் பகுதியின் சந்தை வாய்ப்புகளை முதலில் ஆராய வேண்டும்.

விஞ்ஞானிகளின் தொழில்நுட்பமும் விவசாயியின் அனுபவமும்!

ஒரு புதிய ரகத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியம்.

ICAR-IIHR உருவாக்கியுள்ள மலர் ரகங்கள், அவற்றின் சாகுபடித் தொழில்நுட்பங்கள், பயிர்ப் பாதுகாப்பு முறைகள் ஆகியவை விவசாயிகளுக்குப் பயனளிக்கின்றன.

அதேபோல், சந்திரபாபு போன்ற முன்னோடி விவசாயிகளின் கள அனுபவங்கள் மற்ற விவசாயிகளுக்கு நடைமுறைப் பாடங்களைக் கொடுக்கின்றன.

இதுபோன்ற அனுபவப் பகிர்வுகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான நல்ல வழியாகும்.

தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.

எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.

♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க

♥ UPI செயலியில் பணம் செலுத்துங்கள்

Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.

அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚

முன்னதாக, சம்பங்கி சாகுபடியில் வெற்றி பெற்ற விவசாயியின் அனுபவம் குறித்தும் தமிழ்நேச்சரில் தகவல்களைப் பகிர்ந்துள்ளோம்.

ICAR-IIHR-ல் ஒரு நாள் நேரடிப் பயிற்சி!

சம்பங்கி மற்றும் ரோஜா சாகுபடியில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மற்றொரு நல்ல வாய்ப்பை ICAR-IIHR அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் 60-வது ஆண்டு வைர விழாக் கொண்டாட்டத் தொடரின் ஒரு பகுதியாக, தமிழில் ஒருநாள் நேரடிப் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் இரண்டு முக்கிய மலர் ரகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.

1. அர்க்கா பிரஜ்வல் – சம்பங்கி சாகுபடி

  • ஏக்கருக்கு ரூ.5–8 லட்சம் வரை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள்.
  • உயர்தர மலர் உற்பத்தி.
  • விதைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனை.
  • ஊடுபயிர் சாகுபடி நுட்பங்கள்.

2. அர்க்கா சவி – ரோஜா சாகுபடி

  • ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.15–20 லட்சம் வரை லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள்.
  • பூக்கள் உற்பத்தி மற்றும் தரம் பிரித்தல்.
  • சந்தைப்படுத்துதல்.
  • மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்கள்.

பயிற்சி விவரங்கள்:

  • நாள்: 27 நவம்பர் 2026 (வெள்ளிக்கிழமை)
  • நேரம்: காலை 9.30 – மாலை 5.00 மணி
  • பயிற்று மொழி: தமிழ்
  • இடம்: ICAR-IIHR, ஹெசரகட்டா, பெங்களூரு.
  • கட்டணம்: ரூ.999.

கட்டணத்தில் மதிய உணவு, பயிற்சிச் சான்றிதழ், கான்ஃபரன்ஸ் கிட் மற்றும் மாதிரி விதைக்கிழங்குகள், மலர்ச் செடிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய: https://bit.ly/4BygVzB

தொடர்புக்கு: 96637 96473 / 821-7496656

குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளதால் முன்பதிவு அவசியம்.

மலர் சாகுபடியில் லாபம் பெற அறிவியல் அணுகுமுறை தேவை!

நெல், கரும்பு போன்ற பாரம்பரியப் பயிர்களில் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், மலர் சாகுபடி மாற்றுத் தொழிலாக உருவெடுக்கிறது.

ஆனால், உடனே,விவசாயிகள் புதிய பயிரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. தங்கள் நிலத்தின் தன்மை, நீர் வசதி, முதலீட்டுத் திறன், தொழிலாளர் கிடைப்பது, சந்தைத் தேவை ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும்.

மிக முக்கியமாக, IIHR விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலையும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களையும் இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.

சரியான ரகம், அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் , தரமான உற்பத்தி, நேரடி சந்தைப்படுத்துதல் ஆகியவை ஒன்றிணைந்தால்தான் மலர் சாகுபடி விவசாயிகளுக்கு நிலையான வருமானம் தரும் தொழிலாக மாறும்.

விரிவான தகவலுக்கு… இந்த காணொளிப் பேட்டியைக் காணவும்…

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்
Website | + posts

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/