Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026: வெறும் நிதி அறிக்கை அல்ல… விவசாயிகளின் எதிர்காலத்தை எழுதும் ஆவணம்!

சென்னையில் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டம்

தமிழகத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் மட்டுமல்ல, வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். காரணம், இது புதிய அரசின் முதல் வேளாண் பட்ஜெட். அதேநேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக உருவாகியுள்ள வேளாண் பட்ஜெட் மரபு தொடருமா, மேலும் வலுப்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Thank you for reading this post, don't forget to subscribe!

அந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் வகையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில அளவிலான வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை அரசிடம் நேரடியாகப் பதிவு செய்தனர்.

வேளாண் பட்ஜெட்… தமிழகம் உருவாக்கிய ஒரு புதிய அரசியல் கலாச்சாரம்!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசும்போது ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கடந்த திமுக அரசுதான் தொடங்கியது. அதேபோல், பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்கும் ஆலோசனைக் கூட்டங்களும் அந்த ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டன.

அந்த மரபை புதிய அரசு கைவிடாமல் தொடர்வது வரவேற்கத்தக்கது. ஆட்சி மாறினாலும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள் தொடர வேண்டும். அதுவே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளம்.

இந்த அணுகுமுறைக்காக தற்போதைய அரசை மனதார பாராட்ட வேண்டும்.

எனக்கு ஏன் இந்த வேளாண் பட்ஜெட் முக்கியம்?

வேளாண் பட்ஜெட் குறித்து பேசும்போது எனக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உள்ளது. தமிழ்நாட்டின் முதல் தனி வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 14, 2021 அன்று, அப்போதைய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல் வேளாண் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவம், ஒரு வேளாண் பட்ஜெட் என்பது வெறும் நிதி ஒதுக்கீட்டு ஆவணம் அல்ல என்பதை எனக்குப் புரிய வைத்தது.

ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஒரு கிராமத்தின் எதிர்காலம் இருக்கிறது. அதனால்தான், வேளாண் பட்ஜெட் என்பது அரசின் நிதி அறிக்கையைத் தாண்டி, விவசாயியின் எதிர்காலத்தை எழுதும் கொள்கை ஆவணமாக பார்க்கப்பட வேண்டும்.

கர்நாடகா செய்யாததை தமிழகம் செய்கிறது!

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நல்ல திட்டங்களுக்கு அரசியல் நிறம் பூசக்கூடாது.

அதற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவே ஒரு உதாரணம். அங்கு முந்தைய அரசு அறிமுகப்படுத்திய வேளாண் பட்ஜெட், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தொடரப்படவில்லை. அரசியல் காரணங்களே அதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டன.

ஆனால், தமிழ்நாட்டில் வேறுபட்ட அணுகுமுறை உருவாகியுள்ளது.

கடந்த அரசு தொடங்கிய வேளாண் பட்ஜெட் நடைமுறையையும், விவசாயிகளிடம் கருத்து கேட்கும் முறையையும் தற்போதைய அரசு தொடர்ந்து வருகிறது. இது பாராட்டப்பட வேண்டிய அரசியல் முதிர்ச்சியாகும். நல்ல திட்டங்கள் எந்தக் கட்சியால் தொடங்கப்பட்டாலும், அவை விவசாயிகளுக்காக என்றால் தொடர வேண்டும்.

கருத்துக் கேட்புக் கூட்டம்… சடங்கு அல்ல, செயலாக மாற வேண்டும்!

இந்த ஆண்டு மாநில அளவிலான கூட்டத்திற்கு முன்பாக, மண்டல அளவில் நான்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை தவிர மற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு நல்ல தொடக்கம்.

ஆனால், இதன் உண்மையான வெற்றி எதில் இருக்கிறது தெரியுமா?

விவசாயிகள் சொன்ன கோரிக்கைகள் எத்தனை பட்ஜெட்டில் இடம்பெறுகின்றன என்பதில்தான்.

கூட்டம் நடத்துவது எளிது. கருத்துகளை பதிவு செய்வதும் எளிது. ஆனால், அந்தக் கருத்துகளை கொள்கையாக மாற்றுவதுதான் உண்மையான சவால்.

விவசாயிகள் என்ன கேட்டார்கள்?

சென்னையில் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டம் மற்றும் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புகள்
சென்னையில் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்புக் கூட்டம் மற்றும் தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புகள்

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மிகத் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வறட்சி நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும். நெல் மற்றும் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு கூடுதல் முதலீடு செய்ய வேண்டும். மண்வளத்தைப் பாதுகாக்க புதிய திட்டங்கள் தேவை. மேலும், நேரடி சந்தை விற்பனைக்கு அரசு ஆதரவு அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இவை புதிய கோரிக்கைகள் அல்ல. பல ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அடிப்படை தேவைகளே.

பால் உற்பத்திக்கும் முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது

தமிழ்நாட்டில் சுமார் 50 சதவீத விவசாயக் குடும்பங்கள் பால் மாடு வளர்ப்பை கூடுதல் வருமானமாக நம்பியுள்ளன.

வானம் பொய்த்தாலும், பால் வருமானம் பல குடும்பங்களை காப்பாற்றுகிறது. எனவே, இந்த வேளாண் பட்ஜெட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவது, தீவன மானியத்தை விரிவுபடுத்துவது போன்ற அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்.

அதேநேரத்தில், கர்நாடகாவின் நந்தினி கூட்டுறவு மாதிரியை ஆய்வு செய்து, ஆவினை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் சீர்திருத்தங்களும் அவசியமாகின்றன.

அறிவிப்புகளை விட செயல்பாடே முக்கியம்

வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிராமங்களை எவ்வளவு விரைவாக அடைகின்றன என்பதே உண்மையான வெற்றியை தீர்மானிக்கும்.

அதேபோல், கடந்த ஐந்து வேளாண் பட்ஜெட்டுகளின் செயல்பாடுகளையும் அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். எந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றன? எவை முழுமையாக செயல்படவில்லை? எதை மாற்ற வேண்டும்? என்ற கேள்விகளுக்கான பதில்களே புதிய பட்ஜெட்டை இன்னும் வலிமையாக்கும்.

வேளாண் பட்ஜெட் என்பது அரசின் ஆவணம் மட்டுமல்ல. அது விவசாயியின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பட்ஜெட்டாக ஆகஸ்ட் 6-ம் தேதியின் அறிவிப்புகள் அமையும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

2 “தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026: வெறும் நிதி அறிக்கை அல்ல… விவசாயிகளின் எதிர்காலத்தை எழுதும் ஆவணம்!”க்கு பதில்கள்”

  1. P. Rajendran அவதார்

    வேளாண்மையில் உற்பத்தி, வருவாய்பெருக்கம் அவசியம்
    விவசாயிகள் இயற்கை இடுபொருட்களை தாயார்செய்து விளைவிக்கும் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்தாலே வேளாண் சமுகத்தில் பெரிய மாற்றம் வரும், விவசாயிகளையும், விவசாய தொழில் நுட்ப ஆர்வலர்களையும் பெருமைப்படுத்து அரசின் கடமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

2 comments
P. Rajendran

வேளாண்மையில் உற்பத்தி, வருவாய்பெருக்கம் அவசியம்
விவசாயிகள் இயற்கை இடுபொருட்களை தாயார்செய்து விளைவிக்கும் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்தாலே வேளாண் சமுகத்தில் பெரிய மாற்றம் வரும், விவசாயிகளையும், விவசாய தொழில் நுட்ப ஆர்வலர்களையும் பெருமைப்படுத்து அரசின் கடமை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube