Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

“சாமிநாதனைப் பார்க்கப் போறீங்களாய்யா… இப்படிக் கேளுங்கள்!” – நம்மாழ்வார் முதல் எம்.எஸ்.சுவாமிநாதன் வரை!

நம்மாழ்வார் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த நினைவுகளுடன் 26 ஆண்டுகால வேளாண் பத்திரிகைப் பயணம்

எம்.எஸ்.சுவாமிநாதனை முதல்முறையாகச் சந்தித்த அந்த மழை நாளிலிருந்து… நம்மாழ்வாரின் கேள்விகள் வரை!

2000-ம் ஆண்டு.

Thank you for reading this post, don't forget to subscribe!

ஒரு மழை நாளில், முதல்முறையாக எம்.எஸ்.சுவாமிநாதனைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். உலகம் அறிந்த வேளாண் விஞ்ஞானி; பணி ஓய்வுக்கு பிறகு 1988-ல் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியிருந்தார். அங்குதான் பேட்டி நடந்தது. அப்போது நான் ‘தமிழக விவசாயி உலகம்’ என்ற இதழில் பணியில் இருந்தேன்.

அப்போதுதான் எனக்கு அரும்புமீசை முளைத்திருந்தது.

பத்திரிகையாளராகப் பெரிய அனுபவம் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. ஆனால், கேள்விகள் மட்டும் நிறைய இருந்தன.

அந்தக் கேள்விகளைத் தயக்கமில்லாமல் அவரிடம் கேட்க அனுமதித்தார் அவர். அதை சிறிய ஒலிநாடா (Audio Cassette / Tape)வில் பதிவு செய்தேன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தவர்கள் அவரை அன்புடன் ‘புரபஸர்’ (Professor) என்றுதான் அழைப்பார்கள். நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன்.

அன்று தொடங்கிய அந்த உறவு, அவர் மறையும் வரை என் பத்திரிகைப் பயணத்தின் முக்கியமான பகுதியாக மாறியது.

எத்தனையோ கட்டுரைகளில் அவருடைய கருத்துகளை விமர்சித்திருக்கிறேன். பல நேரங்களில் கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.

ஆனால், ஒருபோதும் என்னிடம் அவர் கடுமையான வார்த்தைகளைப் பேசியதில்லை.

ஒரே ஒரு முறை மட்டும்…

அவருடைய நிறுவனத்தின் போர்ட்டிகோவில் வைத்து, மிகவும் கடினமான ஒரு கேள்வியைக் கேட்டேன். அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவரது முகம் கோபத்தில் சிவந்தது.

நான் அப்போது பணியாற்றிய பசுமை விகடன் பத்திரிகையில், அந்தப் பேட்டி அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது. இத்தனைக்கும் அந்த கட்டுரையை நான் எழுதவில்லை. அதை எழுதியவர் பின்நாளில் ‘சினிமாவுக்கு போன சித்தாள்’. அப்போது பசுமை விகடன் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்றினார். ‘பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்!‘ என்ற தலைப்பில் அப்போதைய தமிழ்நாடு வேளாண்துறை செயலாளர் சுர்ஜித் கே.சௌத்ரி ஐ.ஏ.எஸ். அவர்களிடம் பேட்டி எடுத்து வந்திருந்தார். அதில் எம்.எஸ்.சுவாமிதானையும், பசுமைப் புரட்சியினையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஊடக தர்மத்தின்படி , சட்டத்தின்படி ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தால், அவரிடம் விளக்கம் கேட்டு அதையும் எழுத வேண்டும்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த, 95-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டம் குறித்து 2008-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதியன்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பு முடிந்த பிறகு, எம்.எஸ்.சுவாமிநாதனை தனியே சந்தித்தேன். கலகலப்பாக வரவேற்றவரிடம், ”வேளாண்துறை செயலர் சுர்ஜித் கே சௌத்ரி பசுமைப் புரட்சியைக் குறை கூறியிருக்கிறாரே?..” என்று அந்த பேட்டியின் சுருக்கத்தை விவவரித்தோம். சட்டென்று முகம் சிவந்த எம்.எஸ்.சுவாமிநாதன், ”அவர் எவ்வளவு நாள்களாக விவசாயத்தில் இருக்கிறார்..? அவருடைய கருத்துக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என்று சீறினார். இவை அனைத்தும் Pasumai Vikatan – பசுமை விகடன்- Issue date – 10-March-2008 இதழில் வெளிவந்தது.

பசுமை விகடன் இதழ்
அந்த இதழ்…

இப்படியாக அவசியம் ஏற்படும்போது எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்தும், பசுமைப் புரட்சி குறித்தும் விமர்சனம் செய்வது தொடர்ந்தோம். அதே நேரத்தில் அவரின் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கொல்லிமலையில் சிறுதானியங்களை மீட்டெடுத்தது… என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அப்போது எழுதி வந்தோம். இதனால்தான்,அந்த சம்பவதுக்குப் பிறகும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

அதுதான் எம்.எஸ்.சுவாமிநாதன்.

கருத்தை எதிர்க்கலாம்.

கேள்வி கேட்கலாம்.

விமர்சிக்கலாம்.

ஆனால், உரையாடலை நிறுத்திவிடக் கூடாது.

“Sustainable Agriculture என்றால் என்ன?”

அந்த முதல் பேட்டியில்தான் ஒரு ஆங்கிலச் சொல் என்னை நிறுத்தி யோசிக்க வைத்தது.

Sustainable Agriculture.

அப்போது அந்த வார்த்தை எனக்குப் புதிது.

இன்றுபோல் ‘Sustainability’ என்ற வார்த்தை எல்லா துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படாத காலம் அது.

“சஸ்டெய்னபிள் அக்ரிகல்ச்சர் என்றால் என்ன?” என்று கேட்டேன்.

அவர் தமிழில் விளக்கினார்.

“வளம் குன்றா வேளாண்மை.” (இயற்கை வேளாண்மையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்த சொல்)

அந்த இரண்டு வார்த்தைகளும் அன்றே மனதில் பதிந்துவிட்டன.

26 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, அந்த வார்த்தையின் ஆழம் இன்னும் புரிகிறது.

வேளாண்மை என்பது இன்று விளைச்சல் எவ்வளவு என்று மட்டும் கேட்கும் தொழில் அல்ல.

மண் நாளையும் வளமாக இருக்குமா?

நீர் நாளையும் கிடைக்குமா?

விவசாயி நாளையும் விவசாயத்தில் இருப்பாரா?

அடுத்த தலைமுறைக்கும் உணவு உற்பத்தி செய்ய முடியுமா?

இந்தக் கேள்விகள் அனைத்தும் சேர்ந்துதான் ‘வளம் குன்றா வேளாண்மை’ என்ற கருத்து உருவாகிறது.

சுவாமிநாதனைச் சந்திக்கும் முன் நம்மாழ்வாரிடம் ஆலோசனை!

எம்.எஸ்.சுவாமிநாதனைப் பேட்டி எடுக்கச் செல்லும் முன்பு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் சில நேரங்களில் லோசனை கேட்பது என் வழக்கம்.

“சாமிநாதனைப் பார்க்கப் போறீங்களாய்யா… இப்படிக் கேளுங்கள்…” என்று சில கேள்விகளை எடுத்துக்கொடுப்பார். (நம்மாழ்வார் தனித்தமிழ் ஆர்வலர்; ஜெயலலிதாவைக் கூட செயலலிதா என்று எழுதுவார்)

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருடன் பொன். செந்தில்குமார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாருடன்…

அந்தக் கேள்விகளில் விவசாயியின் பார்வை இருக்கும்.

மண்ணின் பார்வை இருக்கும்.

இயற்கையின் பார்வை இருக்கும்.

சில நேரங்களில் நான் நினைத்துப் பார்க்காத கோணத்தைக்கூட அவர் திறந்து வைத்துவிடுவார்.

ஆனால், ஒருபோதும்,

“அவரை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்?”

என்று நம்மாழ்வார் தடுத்ததில்லை.

அதுதான் நம்மாழ்வாரின் ஜனநாயகம்.

கருத்து,கொள்கை வேறுபட்ட ஒருவரை எதிரியாகப் பார்க்காமல், அவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்ற ஜனநாயகம்.

சுவாமிநாதனிடம் கேள்வி கேட்க நம்மாழ்வார் ஊக்கப்படுத்தினார்.

சுவாமிநாதனோ, அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் உரையாடல் கதவை மூடவில்லை.

இந்த இரண்டு மனிதர்களின் பாதைகளும் வேறுபட்டவை.

ஆனால், இந்திய விவசாயம் குறித்த அவர்களுடைய அக்கறை ஆழமானது.

நாங்கள் வறட்சியையும் பஞ்சத்தையும் நேரில் பார்த்தவர்கள்

ஒரு முறை அவரிடம் நேரடியாகக் கேட்டேன்:

“பேராசிரியரே, ‘டைம்’ இதழ் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான 20 பேரில் ஒருவராக உங்களைத் தேர்வு செய்துள்ளது. பசுமைப்புரட்சி மூலம் இந்தியாவின் உணவு பஞ்சத்தை போக்கியவர் என்று ஒரு சாரர் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம், பசுமைப்புரட்சி மூலம் மண்ணை மலடாக்கியவர் என்று குற்றம்சாட்டுகிறார்களே…?” என்று கேட்டேன்.

அவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பதில் சொல்லவில்லை.

மாறாக, தன்னுடைய வாழ்க்கைப் பின்னணிக்குச் சென்றார்.

”என் தந்தை சாம்பசிவம் ஒரு பெரும் மருத்துவர். கும்பகோணத்தில் அவருக்கென்று சொந்த மருத்துவமனை ஒன்று இருந்தது. அவருக்குப் பின் அந்த மருத்துவமனையை நானே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பதே என் குடும்பத்தினரின் கனவாக இருந்தது. அதற்கேற்றாற்போல, நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

ஆனால் 1954-ல், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நான் சேர்ந்தேன். அப்போது என் முன்னால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உட்பட வேறு பல வாய்ப்புகளும் இருந்தன. அவை அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தேன். அப்போதைய பிரதமர் நேருவின் அழைப்பை ஏற்று நாட்டைக் கட்டமைக்கும் பணியில் இளைஞர்கள் இறங்கினோம். காரணம், உண்டு.

நாங்கள் வறட்சியையும் பஞ்சத்தையும் நேரில் பார்த்தவர்கள். உணவுக்காக ஒரு நாடு எவ்வளவு துன்பப்பட முடியும் என்பதை அறிந்தவர்கள். தேசபக்தி என்பது வெறும் உணர்ச்சியாக இருக்கக்கூடாது; நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த தலைமுறை அது” என்பதே அவரது விளக்கம்.

பசுமைப் புரட்சி; யார் பெயர் சூட்டியது….

இந்தக் கேள்விக்கு… இப்படி பதில் அளித்தார்.

அந்தக் காலத்தில் நம்முடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கான புதிய ரகங்களையும் சாகுபடி முறைகளையும் விஞ்ஞானிகள் உருவாக்கினர். நாங்கள் கண்டுபிடித்ததைப் பரிந்துரைத்தோம். அரசாங்கம் அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றது. அதன் விளைவாக உணவு உற்பத்தி உயர்ந்தது.”

கோதுமையில் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பை இந்திரா காந்தி ‘கோதுமைப் புரட்சி’ என்று குறிப்பிட்டார். பின்னர் பல்வேறு பயிர்களில் உற்பத்தி அதிகரித்ததை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் காட் “பசுமைப் புரட்சி” (Green Revolution) என்ற சொல்லை மார்ச் 8, 1968 அன்று அறிமுகப்படுத்தினார்.

வளரும் நாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வீரிய விதைகள் மூலம் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தை வன்முறையற்ற ஒரு புதிய புரட்சியாகக் குறிக்க அவர் இச் சொல்லைப் பயன்படுத்தினார். அந்தப் பெயர் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் ரசாயன உரம்,பூச்சிக்கொல்லிகளை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடம் அந்தக் காலக்கட்டத்தில் உருவாக்க முடியவில்லை. காரணம், உணவு உற்பத்தியைப் பெருக்கி பசியைப் போக்குவதுதான் எங்கள் முன்னால் இருந்த சவால். அந்த சவாலில் வென்றோம்” என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன். என் முதல் சந்திப்பின் போதே, எம்.எஸ்.சுவாமிநாதன் இயற்கையை நோக்கி அடி எடுத்து வைக்கத்தொடங்கிவிட்டார் என்று புரிந்துக்கொண்டேன். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை என்ற சொல்லை பயன்படுத்தினார். சுவாமிநாதன் வளம்குன்றா வேளாண்மை என்றார். இரண்டுமே மண் வளத்தையும் விவசாயிகள் வாழ்வையும் காக்கும் வழிகள். ஆனால், பாதைதான் வேறு.

எம்.எஸ்.சுவாமிநாதன்,வளம்குன்றா வேளாண்மை என்ற வழியை தேர்வு செய்திருந்தாலும், ரசாயன விவசாயத்தையும் முற்றாக தவிர்க்க சொல்லவில்லை. இதனால்தான், அவர் 98 வயத்தில் இறக்கும் வரையிலும் இறந்த பின்பும் இயற்கை ஆர்வலர்கள் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பசுமைப்புரட்சிக் காலக்கட்டத்தில் பஞ்சாப்பில் ஏற்பட்ட அனுபவம், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தது, அரசுப்பணிக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சில மாதங்கள் பணியாற்றியது… என இன்னும் பல தகவல்களை வெவ்வேறுக் காலக்கட்டங்களில் பகிர்ந்திருந்தார். எம்.எஸ்.சுவாமிநாதன். சிலவற்றை எழுதியுள்ளேன். பலவற்றை எழுதவில்லை.

ஐந்து ஆண்டு திட்டம் நடைமுறையில் இருந்தபோது, அதற்கான பரிந்துரைக்கூட்டம், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. எனக்கும் அழைப்பு வந்தது; அதில் கலந்துக்கொண்டு பேசியுள்ளேன். நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அரசு திட்டங்களை விட, வீட்டுக்கு ஒரு பால் மாடு, ஐந்து பழக்கன்றுகள் கொடுக்கலாம். இதுவே விவசாயிகளை தற்சார்பு அடைய வைக்கும் என்று பேசினேன்.

என் ஆங்கில உரையின் முடிவில் எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டினார். ஆனால், அந்த பரிந்துரை அரசு அறிவிப்பில் இடம் பெறவில்லை. இடம் பெறாது என்று தெரிந்தே ‘மாத்தியோசி’க்க வைக்கும் கருத்தைப் பகிர்ந்தேன்.

இந்த ஆலோசனையை எனக்கு யார் வழங்கியிருப்பார் ?என்று நிச்சயம் உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும். ஆம், ஆழ்வார்தான். நம்மாழ்வார்.

இன்னும், இன்னும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் குறித்து பகிர ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.நிற்க!

26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வளாகம்!

இத்தனை நினைவுகளையும் மீண்டும் கிளறியது 2026 ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் தின நிகழ்வுகளும், MSSRF Annual Conference 2026 நிகழ்வும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வளாகத்துக்குள் மீண்டும் சென்றபோது, இடங்கள் மாறியிருந்தாலும் நினைவுகள் மாறவில்லை.

அந்தப் பாதைகள்.

அந்த வளாகம்.

கருத்தரங்குகளின் நினைவுகள்.

எத்தனையோ சந்திப்புகள்.

ஒரு காலத்தில் இளம் பத்திரிகையாளனாக கேள்விகளுடன் நுழைந்த அதே இடத்துக்குள், 26 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு அனுபவங்களுடன் திரும்பி நிற்பது ஒரு வித்தியாசமான உணர்வு.

இந்த முறை மாநாட்டின் மையக் கருத்து:

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேவா விவேகானந்தன், பொன் செந்தில்குமார்
எம்.எஸ்.சுவாமிநாதனை தன் குருவாக கொண்டாடும் மதுரையைச் சேர்ந்த சேவா தொண்டு நிறுவனத்தின் பெ.விவேகானந்தனுடன்…

“Building Gender-Just Food, Land and Water Systems.”

உணவு, நிலம், நீர் ஆகிய அமைப்புகளில் பாலின நீதியை உருவாக்குவது குறித்து அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வளர்ச்சிப் பணியாளர்கள், பெண் விவசாயிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

மாநாட்டின் பதாகையில் உணவு, நிலம், நீர் அமைப்புகளின் மையத்தில் நிற்கும் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தியிருந்தனர்.

அதைப் பார்த்தபோது, 26 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த வார்த்தை மீண்டும் நினைவுக்கு வந்தது.

Sustainable Agriculture.

அன்று புரியாத வார்த்தை… இன்று புரியும் வாழ்க்கை!

2000-ம் ஆண்டில் நான் கேட்டபோது, ‘வளம் குன்றா வேளாண்மை’ என்பது எனக்கு ஒரு புதிய சொல்.

இன்று அதன் பொருள் வேறு விதமாகத் தெரிகிறது.

வேளாண்மை என்பது அதிக மகசூல் பெறுவது மட்டும் அல்ல.

மண்ணைக் காப்பது.

நீரைக் காப்பது.

விதைப் பன்மையைக் காப்பது.

விவசாயியின் வருமானத்தைக் காப்பது.

பெண் விவசாயியின் உழைப்பை அங்கீகரிப்பது.

இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வது.

அதற்கும் மேலாக, விவசாயத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு உயிருடன் எடுத்துச் செல்வது.

எம்.எஸ்.சுவாமிநாதனும் நம்மாழ்வாரும் வெவ்வேறு கோணங்களில் நின்றார்கள்.

ஒருவர் நவீன அறிவியலின் வலிமையை முன்வைத்தார்.

மற்றொருவர் இயற்கையுடன் இணைந்த விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஆனால், இருவரிடமும் இருந்த பொதுவான விஷயம் ஒன்று.

இந்திய விவசாயம் அழிந்துவிடக் கூடாது.

அந்தப் பயணத்தில் கேள்விகள் அவசியம்.

விமர்சனங்கள் அவசியம்.

மாற்றுக் கருத்துகளும் அவசியம்.

ஆனால், உரையாடல் அதைவிட அவசியம்.

நம்மாழ்வார் எனக்கு கற்றுக்கொடுத்த இயற்கையும் ஜனநாயகமும், சுவாமிநாதன் எனக்கு கற்றுக்கொடுத்த அறிவியல் உரையாடலும் இன்று ஒன்றாக நினைவுக்கு வருகின்றன.

26 ஆண்டுகளுக்கு முன்பு அரும்புமீசையுடன் ஒரு இளம் பத்திரிகையாளனாக அந்த வளாகத்துக்குள் நுழைந்தேன்.

இன்று, பல ஆண்டுகளின் அனுபவத்தோடு அதே நினைவுகளுக்குள் திரும்பிப் பார்க்கிறேன்.

அப்போது எனக்குப் புதிதாக இருந்த அந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் மாறவில்லை.

“வளம்குன்றா வேளாண்மை.”

அது ஓர் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் மட்டுமல்ல.

அது நம் மண்ணுக்கான கேள்வி.

நம் விவசாயிக்கான கேள்வி.

நம் உணவுக்கான கேள்வி.

முக்கியமாக…

அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லப் போகும் வேளாண்மை எப்படி இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கேள்வி.

3 ““சாமிநாதனைப் பார்க்கப் போறீங்களாய்யா… இப்படிக் கேளுங்கள்!” – நம்மாழ்வார் முதல் எம்.எஸ்.சுவாமிநாதன் வரை!”க்கு பதில்கள்”

  1. manuel Devasagayam அவதார்
    manuel Devasagayam

    தாங்கள் என்ன சொல்ல விரும்பினீர்கள்? வளம் குன்றா வேளாண்மைக்கு யாருடைய
    ( ஐயா நம்மாழ்வார், சாமிநாதன்) வழிகள் சரியானவை என்று அறுதியிட்டு சொல்லுங்கள்.

  2. Radhakrishnan S அவதார்
    Radhakrishnan S

    அருமை! சிறப்பான பார்வை!

    எந்த ஒரு திட்டத்தையும் அதன் முழு சுழற்சியை கவனித்து வடிவமைக்கும்போது சிறப்பான பலன் தருகிறது. ரசாயன உரப்பயன்பாடு, வீரிய விதைகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் அந்தக் காலக்கட்டத்தில் உருவாக்க முடியவில்லை – என்று அவர் ஒப்புக்கொள்வதில் இருந்து முழு சுழற்சி பார்வைக்கு வாய்ப்பிருந்திருக்கவில்லை என நாம் அறிந்துகொள்ளலாம்.

    அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறென்ன அவர் இறப்பதற்கு சில காலம் முன்னர் அவரே ஒத்துக்கொண்டார் என்று கேள்விப்படுகிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

3 comments
manuel Devasagayam

தாங்கள் என்ன சொல்ல விரும்பினீர்கள்? வளம் குன்றா வேளாண்மைக்கு யாருடைய
( ஐயா நம்மாழ்வார், சாமிநாதன்) வழிகள் சரியானவை என்று அறுதியிட்டு சொல்லுங்கள்.

Radhakrishnan S

அருமை! சிறப்பான பார்வை!

எந்த ஒரு திட்டத்தையும் அதன் முழு சுழற்சியை கவனித்து வடிவமைக்கும்போது சிறப்பான பலன் தருகிறது. ரசாயன உரப்பயன்பாடு, வீரிய விதைகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் அந்தக் காலக்கட்டத்தில் உருவாக்க முடியவில்லை – என்று அவர் ஒப்புக்கொள்வதில் இருந்து முழு சுழற்சி பார்வைக்கு வாய்ப்பிருந்திருக்கவில்லை என நாம் அறிந்துகொள்ளலாம்.

அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறென்ன அவர் இறப்பதற்கு சில காலம் முன்னர் அவரே ஒத்துக்கொண்டார் என்று கேள்விப்படுகிறோம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube