Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

அரசு திட்டங்களை விட… மரம் வளர்ப்பே மாற்றங்களை உருவாக்கும்! மாத்தியோசித்த Buddha!

புத்தர் போதி மரத்தடியில் தியானம் — Buddhist Economics

மரம் வளர்ப்பும், இயற்கையை காப்பதும்தான் மகத்தான செயல்; இ.எஃப். ஷுமாஸர் எழுதிய காலத்தை வென்ற நூலின் மையக் கருத்துகள்; Small Is Beautiful — E.F. Schumacher (1973)டைம்ஸ் இதழின் “உலகின் சிறந்த 100 புத்தகங்கள்” பட்டியலில் இடம்பெற்ற நூல்.

Thank you for reading this post, don't forget to subscribe!

பீகார் மாநிலம், புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவுக்கு சென்றிருந்தேன். ஊரே விழாக்கோலத்தில் இருந்தது. அன்றுதான் சித்தார்த்தன் புத்தராக பூரண ஒளி பெற்ற நன்நாள். ஆம், புத்த பூர்ணிமா. புத்த மதம் வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்று வழிகாட்டுகிறது. அதனால், புத்த துறவிகள் வாசித்துக் கொண்டே இருப்பார்கள்.

புத்த கயாவின் புல்வெளியில் அமர்ந்திருந்தேன். என் அருகில் இருந்த துறவி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அது என்ன புத்தகம் என்று கேட்டேன். புத்த துறவி சொன்ன பெயர் — Small Is Beautiful. அந்த ஒரு வாக்கியம் என் மனதில் விதை போட்டது. சென்னையில் தேடிப் பிடித்து வாங்கிய அந்நூலின் அட்டையிலேயே மகாத்மா காந்தியின் புகைப்படம். உள்ளே சென்றால் — கல்வி, வேலைவாய்ப்பு, சூழலியல் என ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் பேசுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் “பைபிள்” என்று அழைக்கப்படும் இந்நூல் 1973-ல் வெளிவந்தது. ஆனால் இன்றும் அதன் தேவை குறையவில்லை — மாறாக, அதிகரித்திருக்கிறது.

Small Is Beautiful — E.F. Schumacher தமிழ் அறிமுகம்
Small Is Beautiful — E.F. Schumacher தமிழ் அறிமுகம்

ஷுமாஸர் யார்?

ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பொருளாதாரம் படித்த இ.எஃப். ஷுமாஸர், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பிரிட்டிஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றினார். இங்கிலாந்தின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் அசோஷியேஷன் தலைவராக இருந்தார். “நஞ்சில்லா உணவு வேண்டும் என்றால் இயற்கை வேளாண்மை மட்டுமே தீர்வு” என்று தீர்க்கமாகச் சொன்னவர்.

புத்த மதப் பொருளாதாரம் — ஒரு புதிய பார்வை

1955-ல் பர்மா (மியான்மார்) அரசு ஆலோசனை கேட்டது. அங்கு சென்ற ஷுமாஸர் “புத்த மதப் பொருளாதாரம்” (Buddhist economics)  என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். நவீன பொருளாதாரம் பண மதிப்பையும் உற்பத்தி அளவையும் மட்டுமே கணக்கில் கொள்கிறது. ஆனால், புத்த மதப் பொருளாதாரம் — புதுப்பிக்கக்கூடிய வளங்களையும், புதுப்பிக்க இயலாத வளங்களையும் வேறுவேறாகப் பார்க்கிறது. இந்த காலத்துக்கு மட்டுமல்ல, எல்லா காலத்துக்கும் புத்த மதப் பொருளாதாரம் தேவை.

“புதுப்பிக்க இயலாத வளங்களை — நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றை — முரட்டுத்தனமாகவும் குருட்டுத்தனமாகவும் பயன்படுத்தி வீண்விரயம் செய்வது வன்முறையாகும். வன்முறையின்றி முழுமையான அகிம்சையை அடைதல் இயலாமல் போகலாம். ஆனாலும், அனைத்து வழிகளிலும் வன்முறையற்று வாழ்வதே நோக்கமாகும்” என்று வலியுறுத்துகிறார், இ.எஃப். ஷுமாஸர், Small Is Beautiful

காந்தியும் குமரப்பாவும் — உலக அறிஞரின் கொண்டாட்டம்

1973-ல் வாரணாசியில் நடந்த “காந்தி நினைவு உரை” நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியா வந்த ஷுமாஸர், மகாத்மா காந்தியடிகளை “மக்கள் பொருளாதார அறிஞர்” என்று புகழாரம் சூட்டினார். காந்தியின் சீடரும் கிராம பொருளாதார மேதையுமான ஜே.சி.குமரப்பாவின் “நிலையான பொருளாதாரம்” தன்னுள் புதிய சிந்தனையை விதைத்துள்ளது என மனம் திறந்து ஒப்புக்கொண்டார். ஒரு வெளிநாட்டு அறிஞர் நம் மண்ணின் சிந்தனையை இவ்வளவு ஆழமாகக் கொண்டாடுவது — நமக்கே நம்மை பற்றிய பெருமிதத்தை தரவில்லையா?

தாஜ்மஹாலின் கேள்வி:

”இரும்பு, சிமென்ட், மின்சாரம் இல்லாமல் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்னும் உலக அதிசயமாக நிற்கிறது — இதை நவீன மனிதன் சிந்திக்க வேண்டும் என்கிறார் ஷுமாஸர். “வளர்ச்சி” என்ற பெயரில் இயற்கையை சீரழிப்பது மட்டுமே முன்னேற்றமா?

சிமென்ட் இல்லா தாஜ்மஹால் — நவீனம் என்றால் என்ன?
சிமென்ட் இல்லா தாஜ்மஹால் — நவீனம் என்றால் என்ன?

மரமும் மனிதனும் — ஒரு நடைமுறை தீர்வு

‘ ஒவ்வொரு மனிதனும் ஒரு மரச்செடியை நட்டு ஐந்து ஆண்டுகள் பராமரிக்க வேண்டும்’ என்று புத்தர் தன் போதனைகளில் சொன்னார்” என்ற ஷுமாஸர், இதை இந்தியாவுக்கு ‘சிந்தனைப் பரிசாக’ தந்தார். ”நலமான உடல் கொண்ட ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு வளர்த்தால் — ஐந்தாண்டுகளில் பல்லாயிரம் கோடி மரங்கள் இருக்கும். உணவு, நார், கட்டுமானம், நிழல், நீர், காற்று — மரங்கள் மட்டுமே கொடுக்கும் இந்த செல்வத்திற்கு வேறு எந்த அரசுத் திட்டமும் நிகராகாது.

கிராமத்தில் வாழ்ந்தால் எதுவும் கிடைக்காது என்று திரும்பத் திரும்பச் சொல்லி நகரங்களுக்கு அனுப்புகிறது நவீன உலகம். உழவனிடம் உள்ள பொறுமை, விடாமுயற்சி, அமைதி, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் — இவை எல்லாவற்றையும் நாசம் செய்யும் வேலையில் இறங்கிவிட்டது” என்று ஷுமாஸர், Small Is Beautiful நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியும் கடமையும்

”பல்கலைக்கழக மாணவன் ஐந்தாண்டு படிப்பில் 150 உழவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிறான் — அதாவது மக்களின் வரிப்பணம். அந்த உழைப்புக்கு திருப்பிக் கொடுக்காமல், பெருநகரங்களில் தனிச் சேர்க்கைக்கு போவது நியாயமா?” ஷுமாஸர் கேட்கிறார்: “கல்வி என்பது சலுகைகளுக்கான பாஸ்போர்ட் இல்லை. தன்னை உருவாக்கிய சமுதாயத்திற்கு திரும்பிக் கொடுப்பதே உண்மையான படிப்பின் பலன்” என்று குறிப்பிட்டவர், மேலும் சொல்லியவை சிந்திக்க தக்கவை.

Small Is Beautiful — E.F. Schumacher
Small Is Beautiful — E.F. Schumacher

”மரம் நடுவது போன்ற எளிய, அவசரமான செயல்களை நாம் ஏன் தள்ளிப்போடுகிறோம்? நம்மை இப்படி செயலிழக்கச் செய்வது எந்த வகையான கல்வி? ‘நவீனம்’ என்ற பெயரில் எல்லாவற்றுக்கும் மின்சாரம், சிமென்ட், இரும்பு, டீசல்… என்று நினைக்கத் தூண்டியது எந்த மனநிலை?

உண்மையான மாற்றம் அரசு அலுவலகங்களிலிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ வராது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி மக்களிடமே இருக்கிறது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் கைகளால் உருவாக்கும் திறன் கொண்டவன் — இது இயற்கையான உண்மை. இந்த எளிய உண்மையை நாம் மறந்துவிட்டோம்; மீண்டும் நினைவுகூர வேண்டும். இந்த உணர்வு விழித்தெழும்போது, வேலையின்மையும் வறுமையும் தாமாகவே வேரறுந்துவிடும்.

இந்த மண்ணில் அனைவரும் நிறைவாக வாழ்வதற்குத் தேவையானதை இயற்கை ஏற்கெனவே நம் கையில் கொடுத்துவிட்டது. அதை சிறிது விவேகத்தோடு பயன்படுத்தினால் போதும் — வாழ்வு வளமாகும்” என்கிறார் ஷுமாஸர்.

நூலின் இறுதி வரிகள் — காலத்தை வென்றவை:

“மனிதன் சிறியவன்; ஆகையால், அவனுக்குச் சிறியதே அழகானது.” — Man is small, and, therefore, small is beautiful.

1977-ல் இயற்கையுடன் கலந்த ஷுமாஸர், தன் சிந்தனையை மரங்களிலும் மனித மனங்களிலும் விதைத்துச் சென்றார். அவரது நூல் — இன்று அமேசானில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடியவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். (இன்று புத்த பூர்ணிமா)

பொன் செந்தில்குமார், மேனாள், இதழாசிரியர், — பசுமை விகடன் | பேராசிரியர் (Professor of Practice) — தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

தமிழ் நேச்சர் | இயற்கையோடு இணைவோம்

One response to “அரசு திட்டங்களை விட… மரம் வளர்ப்பே மாற்றங்களை உருவாக்கும்! மாத்தியோசித்த Buddha!”

  1. Jayabalan J Avatar
    Jayabalan J

    Thank you very much for such a great ideas Sir!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube