Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

வண்டல் மண் இலவசமாக பெறுவது எப்படி? | தமிழ்நாடு அரசு திட்டம் 2026

தமிழ்நாடு அரசு வண்டல் மண் எடுக்கும் திட்டம்

தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் சிறு தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தமிழ் நேச்சர் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டம் இயற்கை விவசாயத்தையும் மண் வளத்தையும் மேம்படுத்தும் ஒரு பாராட்டத்தக்க முயற்சி.

Thank you for reading this post, don't forget to subscribe!

வண்டல் மண் திட்டம் – முக்கிய அறிவிப்பு

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வழிவகை ஏற்படும் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் மேற்பார்வையில் வண்டல் மண்ணை விலை இல்லாமலும் உரிமக் கட்டணம் செலுத்தாமலும் விவசாயிகளும் மண்பாண்டத் தொழிலாளர்களும் எடுத்துச் செல்லலாம். இதற்காக tnesevai.tn.gov.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் சிறந்த முறையில் நிறைவேற்ற 2026-27-ம் ஆண்டுக்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிடக் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச்செயலர் மு. சாய்குமார், நீர்வளத்துறை செயலர் சத்யபிரத சாஹு, பொதுப்பணித் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊரக வளர்ச்சித்துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வண்டல் மண் நன்மைகள்

வண்டல் மண் ஏன் வயலுக்கு அவசியம்?

வண்டல் மண் என்பது ஆறுகள், ஏரிகள், குளங்களில் நீண்ட காலமாக படிந்து கிடக்கும் மிகவும் நுண்ணிய மண் துகள்களால் ஆனது. இது இயற்கையிலேயே பல்வேறு சத்துக்களால் நிரம்பியது. வயல்களுக்கு வண்டல் மண் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல:

  1. மண் வளம் அதிகரிக்கும் – வண்டல் மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்துக்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. இது ரசாயன உரங்களுக்கு மாற்றாக செயல்படும்.
  2. மண்ணின் அமைப்பு மேம்படும் – வண்டல் மண் மிகவும் மென்மையானது மற்றும் நீரை நன்கு தாங்கும் தன்மை கொண்டது. இதனால் வேர்கள் ஆழமாக படரவும், தாவரங்கள் நல்ல வளர்ச்சி பெறவும் உதவும்.
  3. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் – வண்டல் மண் பயன்பாடு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவையை குறைக்கும். இதனால் இயற்கை விவசாயம் எளிதாகவும் மலிவாகவும் மேற்கொள்ள முடியும்.
  4. மண் அரிப்பு தடுக்கப்படும் – வண்டல் மண்ணின் நுண்ணிய துகள்கள் வயல் மண்ணோடு இணையும்போது மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தின் உறுதிய்யை அதிகரிக்கும்.
  5. நீர் தேக்கும் திறன் உயரும் – வண்டல் மண் வயலில் சேர்க்கப்படும்போது மண்ணின் நீர் தாங்கும் திறன் அதிகரித்து, குறைவான நீரிலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். வறட்சியான காலங்களிலும் பயிர்கள் தாக்குப்பிடிக்கும்.
  6. செலவு மிச்சமாகும் – இலவசமாகக் கிடைக்கும் வண்டல் மண்ணை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உர செலவு கணிசமாகக் குறையும். இது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரட்டை நன்மை தரும் திட்டம்

இத்திட்டம் ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறது – ஒருபுறம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரித்து மழைநீரை அதிகமாகத் தேக்க உதவுகிறது; மறுபுறம் விவசாயிகளுக்கு இலவசமாக மண் வளத்தை வழங்கி விளைச்சலை மேம்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் ஒருங்கே காக்கும் முன்மாதிரியான திட்டம்.

விவசாயிகளும் மண்பாண்டத் தொழிலாளர்களும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ் நேச்சர் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube