Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

10 கோடி விவசாயிகளை அடைய வேண்டும் என்றால், ஆய்வக கதவுகள் திறக்கப்பட வேண்டும்!

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ICAR 98வது நிறுவன தின விழாவில் 10 கோடி விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை கொண்டு செல்லும் Mission ICAR-100 இலக்கை அறிவிக்கும் காட்சி

ICAR-100: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் இலக்கு… இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு தயாரா?

-தமிழ் நேச்சர் ஆசிரியர் கட்டுரை

Thank you for reading this post, don't forget to subscribe!

“10 கோடி விவசாயிகளிடம் ICAR தொழில்நுட்பங்களை கொண்டு செல்ல வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். Mission ICAR-100, Climate Smart Villages, Open Digital Knowledge Platform உள்ளிட்ட அறிவிப்புகள் இந்திய வேளாண் ஆராய்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்த இலக்குகள் விவசாயியின் வயல்வெளியை உண்மையில் சென்றடையுமா? ஆய்வகத்தில் உருவாகும் அறிவு, கிராமங்களிலும் வயல்வெளிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்? தமிழ் நேச்சரின் சிறப்பு பகுப்பாய்வு.

“விவசாயிகள் விவசாயத்தின் ஆன்மா என்றால், விஞ்ஞானிகள் அதன் மூளை.” இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 98-வது நிறுவன தின விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறிய இந்த ஒரு வரி, இந்திய வேளாண்மையின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான திசையை நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

“வளர்ந்த இந்தியா – 2047” (Viksit Bharat 2047) என்ற இலக்கு வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை. அதன் மையத்தில் “வளர்ந்த விவசாயம் – வளமான விவசாயிகள்” (Viksit Krishi, Samruddh Kisan) இருக்க வேண்டும் என்பதையே அமைச்சர் தன் உரையில் வலியுறுத்தினார்.

அந்த நோக்கத்தை அடைவதற்காக அவர் அறிவித்துள்ள ஏழு முக்கிய இலக்குகள் இந்திய வேளாண் ஆராய்ச்சியின் செயல்பாட்டு திசையையே மாற்றக்கூடியவை.

வெறும் அறிவிப்புகள் அல்ல… செயல்படுத்த வேண்டிய இலக்குகள்

அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்:

  • 100 Climate Smart Villages உருவாக்குதல்.
  • ICAR தொழில்நுட்பங்களை 10 கோடி விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல்.
  • Mission ICAR-100 என்ற தேசிய இயக்கம்.
  • ஒவ்வொரு ICAR நிறுவனத்திலும் One Institute – One Grand Innovation.
  • ICAR Open Digital Knowledge Platform உருவாக்குதல்.
  • போலி விதைகள் மற்றும் போலி பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.
  • 2029-க்குள் ICAR-க்கு ₹10,000 கோடி உள்நாட்டு வருவாய் இலக்கு.

அதே விழாவில் 43 புதிய பயிர் ரகங்கள், 17 புதிய தொழில்நுட்பங்கள், 14 வெளியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உரிம ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இவை அனைத்தும் இந்திய வேளாண் ஆராய்ச்சியின் திறனை வெளிப்படுத்துகின்றன.

ஆனால்…

ஆய்வகத்தில் கண்டுபிடித்தால் மட்டும் போதுமா?

ஒரு புதிய விதை உருவாக்கப்படலாம்.

ஒரு புதிய இயந்திரம் கண்டுபிடிக்கப்படலாம்.

ஒரு புதிய நோய் எதிர்ப்பு தொழில்நுட்பம் உருவாகலாம்.

ஆனால் அவை விவசாயியின் வயல்வெளியை சென்றடையவில்லை என்றால், அந்த ஆராய்ச்சியின் முழுப் பயன் சமூகத்திற்கு கிடைக்காது.

அதனால்தான் அமைச்சர் மிகவும் தெளிவாக “ICAR தொழில்நுட்பங்கள் 10 கோடி விவசாயிகளை சென்றடைய வேண்டும்” என்று இலக்கை நிர்ணயித்துள்ளார்.

ICAR-ன் 98வது நிறுவன தின விழாவில் 10 கோடி விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டு செல்லும் புதிய இலக்கை அறிவித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
ICAR-ன் 98வது நிறுவன தின விழாவில் 10 கோடி விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டு செல்லும் புதிய இலக்கை அறிவித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.

இதுவே இந்திய வேளாண் ஆராய்ச்சியின் உண்மையான வெற்றிக்கான அளவுகோல்.

Mission ICAR-100: KVK-க்களின் புதிய பொறுப்பு

முன்னர் KVK-க்கள் பெரும்பாலும் பயிற்சி மையங்களாக செயல்பட்டன.

ஆனால் இனி அவை:

  • Innovation Hub,
  • Climate Advisory Centre,
  • Farmer Technology Demonstration Centre,
  • Startup Support Centre

ஆக மாற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல…

ஒவ்வொரு KVK-மும் குறைந்தது 100 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, ICAR தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நிர்வாக அறிவிப்பு மட்டுமல்ல.

இந்திய வேளாண் விரிவாக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.

ஊடகங்களும் தொழில்நுட்பப் பரிமாற்றமும்: விவசாய வளர்ச்சியின் இரட்டை சக்கரங்கள்

இன்று ஒரு விவசாயி தகவலை முதலில் தேடுவது YouTube-ல்.

அடுத்ததாக WhatsApp.

பின்னர் Facebook, இணையதளங்கள், டிஜிட்டல் ஊடகங்கள்.

ஒரு நல்ல காணொளி, ஒரு தெளிவான கட்டுரை அல்லது ஒரு அறிவியல் விளக்கப் பதிவு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளை சென்றடைகிறது.

எனவே தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் ஊடகங்கள் இன்று தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக மாறிவிட்டன.

ஆய்வகத்தில் உருவாகும் அறிவுக்கும், வயல்வெளியில் உழைக்கும் விவசாயிக்கும் இடையே பாலமாக இருப்பது ஊடகங்களே.

அதனால் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், KVK-க்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஊடகங்களை ஒரு வெளிப்புற அமைப்பாக அல்ல; அறிவை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் கூட்டாளிகளாக பார்க்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

கே வி கே ஊடகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்
படம்:1, இந்தியாவின் முதல் KVK, புதுச்சேரி , படம்:2, KVK தும்கூரு, கர்நாடகா

தமிழ் நேச்சரின் நிலைப்பாடு: ஆய்வகத்தில் பிறக்கும் அறிவு, வயல்வெளியை அடைய வேண்டும்

தமிழ் நேச்சர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்து உண்டு.

அரசு நிதியில் உருவாகும் ஆராய்ச்சிகள், அரசின் ஆய்வகங்களில் உருவாகும் தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் பணத்தில் நடைபெறும் அறிவியல் முயற்சிகள் – இவை அனைத்தும் இறுதியில் விவசாயிகளின் கைகளுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்.

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் மட்டும் வாழக்கூடாது.

அது வயல்வெளியில் விளைச்சலாக மாற வேண்டும்.

விவசாயியின் வருமானமாக மாற வேண்டும்.

அதற்காகத்தான் தமிழ் நேச்சர் தொடர்ந்து ICAR, KVK, வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் உருவாகும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆய்வகத்திற்கும் வயல்வெளிக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதே எங்களின் முக்கிய நோக்கம்.

செயல்திறனே உண்மையான மதிப்பீடு

ஓர் அரசு ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றியை ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையால் மட்டும் அளவிட முடியாது.

அது எத்தனை விவசாயிகளை சென்றடைந்தது?

எத்தனை தொழில்நுட்பங்கள் வயல்வெளியில் பயன்படுத்தப்படுகின்றன?

எத்தனை விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது?

எத்தனை கிராமங்களில் மாற்றம் ஏற்பட்டது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் உண்மையான செயல்திறன் அறிக்கையாக இருக்க வேண்டும்.

அமைச்சர் அறிவித்துள்ள 10 கோடி விவசாயிகளை சென்றடையும் இலக்கு, ஒவ்வொரு ICAR நிறுவனத்திற்கும், ஒவ்வொரு KVK-க்கும், ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் செயல்திறன் குறியீடாக மாற வேண்டிய நேரம் இது.

அறிவியல் மக்களை அடைந்தால்தான் இந்தியா வளரும்

ICAR-ன் 98வது நிறுவன தினத்தில்
ICAR-ன் 98வது நிறுவன தினத்தில்…

காலநிலை மாற்றம், நீர் பற்றாக்குறை, மண் வளக் குறைவு, போலி விதைகள், போலி பூச்சிக்கொல்லிகள், சந்தை மாற்றங்கள்…

இவை அனைத்தும் இந்திய விவசாயத்தின் மிகப் பெரிய சவால்கள்.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள ஆய்வகங்களில் தீர்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்தத் தீர்வுகள் வேகமாக விவசாயிகளை சென்றடையவில்லை என்றால், அவற்றின் சமூக மதிப்பு குறைந்துவிடும்.

அதனால்தான் அமைச்சர் அறிவித்துள்ள Open Digital Knowledge Platform, Mission ICAR-100, Climate Smart Villages, 10 கோடி விவசாயிகளை சென்றடையும் இலக்கு ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளாக பார்க்கப்படுகின்றன.

தமிழ் நேச்சரின் அழைப்பு

இந்திய வேளாண்மையின் அடுத்த கட்ட வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் மட்டும் இல்லை.

அந்த தொழில்நுட்பங்களை எவ்வளவு வேகமாக, எவ்வளவு எளிமையாக, எவ்வளவு பரவலாக விவசாயிகளிடம் கொண்டு செல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

Mission ICAR-100 ஒரு அரசுத் திட்டம் மட்டுமல்ல.

அது ஆய்வகத்தையும் வயல்வெளியையும் இணைக்கும் தேசிய இயக்கம்.

அந்த இயக்கத்தில் விஞ்ஞானிகள், Krishi Vigyan Kendras, வேளாண் பல்கலைக்கழகங்கள், மாநில வேளாண் துறைகள், ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் நேச்சர் தளம் மூலமும் Tamil Farming TV யூடியூப் சேனல் மூலமும் ICAR கண்டுபிடிப்புகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறோம்.

ஆனால், சில நேரங்களில் சில ICAR விஞ்ஞானிகள் பேட்டி அளிக்கவும், தொழில்நுட்ப தகவல்களை பரிமாறவும் முன் வருவதில்லை. அமைச்சரின் இந்த அறிவிப்பு அந்த விஞ்ஞானிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும். இனியும் விஞ்ஞானிகள் அமைதியாக இருந்து அமைச்சரின் கனவுக்கு தடை கற்களாக இருக்க கூடாது. ஊடகங்களிடம் தொழில்நுட்ப தகவல்களை பேச மறுக்கும் விஞ்ஞானிகளின் விரிவான பட்டியலை ICAR மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வைக்க உள்ளோம்; அதுதான் ஊடக அறம் கூட. ஆம்,ஆய்வகத்தில் பிறக்கும் அறிவு, வயல்வெளியில் விளைச்சலாக மாற வேண்டும். அறிவியல் மக்களை அடைய வேண்டும்.

இந்தியாவில் தற்போது 731 கிருஷி விக்யான் கேந்திராக்கள் (KVK – Krishi Vigyan Kendra) செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 113 ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்) ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளன. இதில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 74 விவசாயப் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன, இது உலகின் மிகப்பெரிய தேசிய விவசாய அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துணை அமைப்புகள் விவசாய மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்து உழவர்கள் நலன் சார்ந்து ஊடகங்களுடன் இணைந்து இயங்க வேண்டும்.

அப்போதுதான் “வளர்ந்த விவசாயம் – வளமான விவசாயிகள்” என்ற இலக்கும், “வளர்ந்த இந்தியா – 2047” என்ற கனவும் நனவாகும்.

தமிழ் நேச்சர், Tamil Farming TV சேனலுடன் இணைந்து செயல்படும் ICAR-IIHR -Indian Institute of Horticultural Research, Bengaluru, Karnataka. காணொளி…



One response to “10 கோடி விவசாயிகளை அடைய வேண்டும் என்றால், ஆய்வக கதவுகள் திறக்கப்பட வேண்டும்!”

  1. PANDIARAJAN R Avatar
    PANDIARAJAN R

    Nice and useful to all the progressive farmers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube