Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

5 ஆண்டுகளுக்கு இந்த உரம் வாங்க வேண்டாம்; IIHR விஞ்ஞானி விளக்கம்!

IIHR விஞ்ஞானி முனைவர் செந்தில்குமார்

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் உலகெங்கும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கும் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கலாம். இந்நிலையில் இரசாயன உரங்களின் இறக்குமதியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது இந்திய விவசாயிகளை நேரடியாக பாதிக்கும் என்று எச்சரிக்கிறார் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (ICAR-IIHR) முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் (விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார்.

Thank you for reading this post, don't forget to subscribe!

இந்தச் சூழலில் இந்திய விவசாயிகள் இயற்கை உரங்களை நோக்கி திரும்புவதே சரியான தேர்வு என்று அவர் தமிழ் ஃபார்மிங் டிவிக்கு (Tamil Farming TV) க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெளிவாக கூறுகிறார். “இயற்கையை நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. லாபம் தரும் Natural Fertilizers, Biostimulant, Biofertilizers நிறைய உள்ளன. IIHR நிலையத்தில் இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் ஏராளமாக உள்ளன. அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.

பாஸ்பேட் உரம் குறித்து ஒரு முக்கியமான தகவலையும் அவர் பகிர்கிறார். “நாம் இதுவரை மண்ணில் இட்டுள்ள இரசாயன பாஸ்பேட் உரம் ஏராளமாக தேங்கியுள்ளது. ஆகையால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஸ்பேட் உரம் இட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தினால், மண்ணில் கரையாத நிலையில் தேங்கியுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும். இப்படி நிறைய இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளன” என்கிறார் முனைவர் செந்தில்குமார்.

IIHR விஞ்ஞானிகள் இயற்கை உரம் குறித்த விளக்க கூட்டம்
விவசாயிகளிடம் இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு அளிக்கும் IIHR விஞ்ஞானிகள்

இரசாயன உரங்களின் மீதான சார்புத்தன்மையை குறைத்து மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இன்றைய தேவை என்று அவர் வலியுறுத்துகிறார். மண்ணின் இயற்கை வளத்தை மீட்டெடுக்க பயோ-பெர்டிலைசர்கள் மற்றும் பயோ-ஸ்டிமுலன்ட்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். IIHR உருவாக்கிய அர்கா நுண்ணுயிரி கூட்டமைப்பு (Arka Microbial Consortium – AMC) மற்றும் மண்புழு உரம் போன்ற இயற்கை இடுபொருட்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பெருக்கி, செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கையான முறையில் கிடைக்கச் செய்கின்றன.

கடந்த மே 6 ஆம் தேதி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு வடக்கு வட்டம், கோலஹள்ளி கிராமத்தில் ICAR-IIHR சார்பில் சமச்சீர் உர பயன்பாடு மற்றும் நிலையான மண் ஆரோக்கியம் குறித்த தீவிர விழிப்புணர்வு முகாம் (Intensive Awareness Campaign on balanced fertilizer use and sustainable soil health )நடைபெற்றது. சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்ட இந்த முகாமில், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தொழு உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் கம்போஸ்ட் ஆகியவற்றின் பயன்களை விஞ்ஞானிகள் நேரில் எடுத்துரைத்தனர். தட்பவெப்பநிலை மாற்றங்களை தாங்கக்கூடிய தோட்டக்கலை ரகங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து கலவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

IIHR சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள்கள் வழங்கல்
IIHR சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள்கள் வழங்கல்

விவசாயிகள் நேரில் கலந்துரையாடி மண் வளம் குறைதல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, பூச்சித் தொல்லை மற்றும் இரசாயன உரங்களின் விலை உயர்வு குறித்த தங்கள் கவலைகளை பகிர்ந்துகொண்டனர். இவற்றுக்கு IIHR விஞ்ஞானிகள் நடைமுறை தீர்வுகளை வழங்கினர். அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் தக்காளி கெட்ச்அப் போன்ற மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கலாம் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு அர்கா விதை தொகுப்புகள், AMC, அர்கா வேப்ப சோப்பு மற்றும் கொய்யா நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்தக் காணொளியை தமிழ் ஃபார்மிங் டிவி யூட்யூப் சேனலில் காணலாம். இயற்கை விவசாயம் மற்றும் மண் ஆரோக்கியம் குறித்து மேலும் விவரங்கள் அறிய முனைவர் இர. செந்தில்குமார் அவர்களை 96637 96473 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube