Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

மண்ணில் சேமிக்கப்படும் கார்பனுக்கும் பணம்! தமிழ்நாடு விவசாயிகள் எப்படி பயன்படுத்தலாம்?

கார்பன் கிரெடிட்: தமிழ்நாடு விவசாயிகள் எப்படி கூடுதல் வருமானம் பெறலாம்?

பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் மூலம் நேரடியாகப் பணம் வழங்கும் புதிய முயற்சி, தமிழ்நாட்டிலும் கவனம் பெற வேண்டிய ஒரு முக்கியமான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

Thank you for reading this post, don't forget to subscribe!

விவசாயம் என்றால் மகசூல் மட்டும்தானா? இனி அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, தண்ணீரைச் சேமிப்பது, பயிர்க்கழிவுகளை எரிக்காமல் இருப்பது போன்ற செயல்களுக்கும் பொருளாதார மதிப்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு ஒரு முக்கிய உதாரணம்தான் பஞ்சாப், ஹரியானாவில் 2,550 சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள கார்பன் கிரெடிட் பணம்.

👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு

விவசாயிகளுக்கு என்ன நடந்தது?

‘Aadi’ என்ற Grow Indigo நிறுவனத்தின் விவசாயிகள் கார்பன் திட்டம், ICAR-ன் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் 2019-ல் தொடங்கப்பட்டது.

இதில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு (DSR), குறைந்த உழவு, பயிர்க்கழிவு மேலாண்மை போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினர்.

இந்த மாற்றங்களால் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்கள் குறைந்ததா? மண்ணில் கார்பன் அதிகரித்ததா? என்பவை அறிவியல் முறையில் அளவிடப்பட்டன. பின்னர் அவை சுயாதீனமாக சரிபார்க்கப்பட்டு கார்பன் கிரெடிட்கள் உருவாக்கப்பட்டன.

முதல் கட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சுமார் ₹3,000 முதல் ₹15,000 வரை கிடைக்கிறது.

அதாவது, விவசாயி வயலில் ஒரு மாற்றத்தைச் செய்கிறார். அந்த மாற்றத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மை அளவிடப்படுகிறது. அதன் அடிப்படையில் உருவாகும் கார்பன் கிரெடிட்டில் விவசாயிக்கும் ஒரு பங்கு கிடைக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் இதை எப்படி பயன்படுத்தலாம்?

இதுதான் தமிழ்நாட்டுக்கு முக்கியமான கேள்வி.

நெல் சாகுபடியில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் முறைகள், குறைந்த உழவு, பயிர்க்கழிவுகளை மண்ணில் சேர்த்தல், இயற்கை வேளாண்மை சார்ந்த மண் மேலாண்மை, பல்வகைப் பயிர் சாகுபடி, மரங்களை வளர்த்தல் போன்ற நடைமுறைகள் ஏற்கெனவே பல இடங்களில் பின்பற்றப்படுகின்றன.

ஆனால் இவை கார்பன் கிரெடிட் வருமானமாக மாற்றப்பட வேண்டுமானால், அறிவியல் அடிப்படையிலான அளவீடும், ஆவணப்படுத்தலும், சுயாதீன சரிபார்ப்பும் அவசியம்.

எனவே, தனி விவசாயி ஒருவராகச் செல்வதைவிட, விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்படுவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம்.

FPO-க்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகள் குழுக்கள் ஆகியவை இதற்கான தளமாக செயல்பட முடியும்.

மிக முக்கியமாக, “கார்பன் கிரெடிட் என்றால் மரம் நட்டால் மட்டும் பணம்” என்ற புரிதலை மாற்ற வேண்டும்.

விவசாய முறையில் ஏற்படும் அளவிடக்கூடிய சுற்றுச்சூழல் மேம்பாடுகளும் கார்பன் திட்டங்களுடன் இணைக்கப்படலாம்.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

இதில் தமிழ்நாடு அரசு முக்கியமான பங்காற்ற முடியும்.

முதலில், தமிழ்நாட்டில் ‘Farmer Carbon Credit Mission’ போன்ற ஒரு மாநில அளவிலான ஒருங்கிணைப்பு திட்டத்தை உருவாக்கலாம்.

வேளாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரே கட்டமைப்பில் இணைக்கலாம்.

அடுத்ததாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து மாதிரி கார்பன் விவசாய கிராமங்களை உருவாக்கலாம்.

அங்கு விவசாயிகள் எந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்? மண்ணில் கார்பன் அளவு எவ்வாறு மாறுகிறது? தண்ணீர் பயன்பாடு எவ்வளவு குறைகிறது? பயிர்க்கழிவு மேலாண்மையால் என்ன மாற்றம் ஏற்படுகிறது? என்பவை தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

இதற்குத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ICAR நிறுவனங்கள் மற்றும் KVK-க்களின் அறிவியல் ஆதரவைப் பயன்படுத்தலாம்.

விவசாயிக்கு இடைத்தரகர் இல்லாமல் பணம் கிடைக்க வேண்டும்!

கார்பன் கிரெடிட் சந்தை சிக்கலானது. அளவீடு, சரிபார்ப்பு, சான்றிதழ், கிரெடிட் விற்பனை என பல கட்டங்கள் உள்ளன.

எனவே, விவசாயிகள் புரிந்துகொள்ள முடியாத ஒப்பந்தங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாநில அளவில் வெளிப்படையான வழிகாட்டுதலும் பாதுகாப்பான ஒப்பந்த மாதிரியும் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், கார்பன் கிரெடிட் மூலம் கிடைக்கும் வருமானத்தில் விவசாயிக்கு எவ்வளவு? திட்டத்தை நடத்தும் நிறுவனத்திற்கு எவ்வளவு? என்பதும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

பஞ்சாப் காட்டிய பாதை; தமிழ்நாடு உருவாக்க வேண்டிய அடுத்த படி

பஞ்சாப், ஹரியானாவில் தொடங்கியுள்ள இந்த முயற்சி, விவசாயத்தின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கும் பொருளாதார மதிப்பு உருவாக்க முடியும் என்பதை காட்டுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே தண்ணீர் சேமிப்பு, மண் வளப் பாதுகாப்பு, பயிர்க்கழிவு மேலாண்மை, இயற்கை வேளாண்மை, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை அறிவியல் ரீதியாக அளவிட்டு, ஆவணப்படுத்தி, சரிபார்த்து, சந்தையுடன் இணைத்தால் விவசாயியின் வருமானத்திற்கு இன்னொரு கதவு திறக்கலாம்.

ஆனால் கார்பன் கிரெடிட் என்பது உடனடி அல்லது உறுதியான பண வருமானத் திட்டம் என்று விவசாயிகள் கருதக்கூடாது. ஒவ்வொரு திட்டத்திலும் தகுதி, அளவீட்டு முறை, சரிபார்ப்பு, கிரெடிட் விலை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் மாறுபடலாம்.

விவசாயிக்கு மகசூலும் வேண்டும்; மண்ணுக்கும் ஆரோக்கியம் வேண்டும்; இயற்கைக்கும் பாதுகாப்பு வேண்டும். இந்த மூன்றையும் இணைக்கும் முயற்சியாக கார்பன் கிரெடிட்டை தமிழ்நாடு அணுக வேண்டிய நேரம் இது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
X (Twitter)20
YouTube20
YouTube