Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரம்; இந்தியாவின் முதல் சோலார் கிராமம்!

சத்தீஸ்கர் கைரா கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் சூரிய மின்சாரப் பேனல்கள் நிறுவப்பட்டுள்ள காட்சி

ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சோலார் பேனல்கள் இருந்தால் எப்படி இருக்கும்? மின்சாரக் கட்டணத்துக்காக மாதந்தோறும் செலவிடும் பணம் மிச்சமானால், அந்தக் குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியாக இருக்கும்!

Thank you for reading this post, don't forget to subscribe!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கைரா கிராமம் இதற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே பிரதமரின் சூர்ய கர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் மேற்கூரை சூரிய மின்சார அமைப்புகளை நிறுவிய முதல் கிராமம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்தச் செய்தி தமிழ்நாட்டுக்கும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற சூரிய மின்சாரக் கிராமங்களை உருவாக்க முடியாதா?

👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு

141 வீடுகள்; 282 கிலோவாட் மின்சார உற்பத்தி!

சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது கைரா கிராமம். இங்கு 141 வீடுகளில் சுமார் 889 பேர் வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் அனைத்திலும் தலா 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமத்தின் மொத்த சூரிய மின்சார உற்பத்தித் திறன் 282 கிலோவாட்டாக உயர்ந்துள்ளது.

பகல் நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முதலில் வீடுகளின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரம் நெட் மீட்டரிங் முறையில் மின்சாரக் கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது.

இரவு நேரத்திலும், சூரிய ஒளி இல்லாத நேரங்களிலும் வழக்கமான மின்சாரக் கட்டமைப்பு மூலம் மின்சாரம் கிடைக்கிறது.

இதனால், குடும்பங்களின் மின்சாரச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடிகிறது. பயன்பாடு மற்றும் மின்சாரக் கட்டண விதிகளைப் பொறுத்து சில வீடுகளுக்கு மின்கட்டணம் பூஜ்ஜியமாகவும் மாற வாய்ப்புள்ளது.

மக்களின் பணமின்றி சாத்தியமான திட்டம்!

இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் நிதி ஏற்பாடு.

பொதுவாக வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆரம்ப முதலீடு தேவைப்படும். அரசு மானியம் கிடைத்தாலும், மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இது சவாலாக இருக்கலாம்.

கைரா கிராமத்தில் இந்தப் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு கண்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவிகளுடன், நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியையும் (CSR) பயன்படுத்தியுள்ளனர். இதனால் சோலார் அமைப்புகளை நிறுவுவதற்கு கிராம மக்கள் தங்கள் கையிலிருந்து பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

மேலும், பெண்கள் தலைமையிலான சூர்ய சகிகள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். விண்ணப்பங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பணிகளிலும் உதவியுள்ளனர்.

அரசு மானியம், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு என அனைத்தும் இணைந்ததால் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சாத்தியம்தானே?

சூரிய மின்சார உற்பத்திக்கு ஏற்ற இயற்கை வளங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பல மாவட்டங்களில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் நல்ல சூரிய ஒளி கிடைக்கிறது.

மேலும், வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை அமைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

மத்திய அரசின் பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2025 டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் 60,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 48,059 வீடுகளில் சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட்டிருந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை மத்திய அரசின் நாடாளுமன்றப் பதிலில் பார்க்கலாம்.

இருப்பினும், தனித்தனியாக வீடுகளில் சோலார் அமைப்புகளை நிறுவுவதைத் தாண்டி, ஒரு கிராமத்தின் அனைத்து வீடுகளையும் ஒரே திட்டத்தின்கீழ் இணைப்பது அடுத்தகட்ட முயற்சியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சோலார் கிராமம்!

தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு முன்னோடித் திட்டத்தை உருவாக்கலாம்.

முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்சாரப் பயன்பாடு, வீடுகளின் எண்ணிக்கை, மேற்கூரை வசதி, சூரிய ஒளி கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.

எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.

♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க

♥ UPI செயலியில் பணம் செலுத்துங்கள்

Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.

அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚

அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அவற்றின் மின்சாரத் தேவைக்கு ஏற்ப சோலார் பேனல்கள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்புத் திட்ட நிதி, நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் திரட்டலாம்.

குறிப்பாக, பிரதமரின் சூர்ய கர் திட்டத்தில் கிடைக்கும் மானியத்தைப் பயன்படுத்துவதுடன், தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு எஞ்சிய தொகையையும் CSR நிதி மூலம் ஏற்பாடு செய்யலாம்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், முதியவர்கள், விதவைகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும், கிராம மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்குச் சோலார் தொழில்நுட்பம், பராமரிப்பு, விழிப்புணர்வு தொடர்பான பயிற்சிகளை வழங்கலாம்.

மின்சாரம் மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் நன்மை!

நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்த மின் உற்பத்தியைக் குறைக்க சூரிய மின்சாரம் உதவுகிறது. இதனால் மின்சார உற்பத்தியுடன் தொடர்புடைய கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்நாட்டின் கார்பன் குறைப்பு இலக்குகளுடனும் இணைக்கலாம்.

இதற்கு முன்பே, விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி பயோசார் தயாரிப்பது, கார்பன் கிரெடிட் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் உருவாக்குவது போன்ற வாய்ப்புகளை Tamil Nature கட்டுரைகளில் விவரித்துள்ளோம். வயலில் வீணாகும் பயிர்க் கழிவுகளும் பணமாகும் கார்பன் கிரெடிட் முயற்சி மற்றும் தமிழ்நாட்டில் குப்பையைப் பணமாக மாற்றும் Bio-CNG திட்டம் குறித்த கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

சூரிய மின்சாரம், உயிரி எரிவாயு, பயோசார் போன்ற தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தால், கிராமங்களின் எரிசக்தித் தேவைகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பூர்த்தி செய்ய முடியும்.

தமிழக அரசு கவனிக்குமா?

தமிழ்நாட்டில் ஏற்கெனவே சூரிய மின்சாரத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. வீடுகளுக்கான மானிய விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சூரிய மின்சாரத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முழுமையான சோலார் கிராமத்தை உருவாக்க வேண்டும்.

இதற்காகத் தனித்திட்டம் அறிவித்து, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மின்வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைக்கலாம்.

திட்டத்தின் வெற்றியை வெறும் சோலார் பேனல்கள் நிறுவப்பட்ட எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிடக் கூடாது. குடும்பங்களின் மின்சாரச் செலவு எவ்வளவு குறைந்துள்ளது, மின்சார உற்பத்தி எவ்வளவு அதிகரித்துள்ளது, ஏழைக் குடும்பங்கள் எத்தனை பயன்பெற்றுள்ளன என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சத்தீஸ்கரின் கைரா கிராமம் ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஒரு கிராமம் உருவானால், அது வெறும் மின்சாரத் திட்டமாக இருக்காது. கிராம மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் முயற்சியாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயல்திட்டமாகவும் அமையும்.

‘ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சாரம்; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சோலார் கிராமம்’ என்ற இலக்கைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்குமா?

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்
Website | + posts

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/