ஒரு விவசாயி 25 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் முழுவதையும் இழக்கிறார். அறுவடைக்கு இன்னும் 20 நாள்களே இருந்த நிலையில் ஏற்பட்ட பூச்சித் தாக்குதல் அவரது விவசாய வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. ஆனால், அவர் விவசாயத்தை விட்டுவிடவில்லை. மாறாக, பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடத் தொடங்குகிறார்.
Thank you for reading this post, don't forget to subscribe!அடுத்தடுத்த ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்துப் பயிரிடுகிறார். இன்று 121 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் அந்த விவசாயிக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அவர்தான் தஞ்சாவூரைச் சேர்ந்த கோ. சித்தர்!
👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு
இயற்கை வேளாண்மை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை மருத்துவம் எனப் பல தளங்களில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருபவர். தமிழக அரசின் நம்மாழ்வார் விருதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் தாவர மரபணு பாதுகாப்பு விவசாயி விருதையும் பெற்றுள்ளார்.
25 ஏக்கர் இழப்பு; வாழ்க்கையை மாற்றிய அனுபவம்!
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கோ. சித்தர் (67).
தொடக்கத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வீரிய ரகங்களையே பயிரிட்டு வந்துள்ளார். ஆனால், அறுவடைக்கு 20 நாள்களே இருந்தபோது ஏற்பட்ட பூச்சித் தாக்குதலால் 25 ஏக்கர் பயிரையும் இழந்துள்ளார்.
இந்த இழப்பு அவருக்குப் பெரிய பாடமாக அமைந்தது.
அதற்குப் பிறகு பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிச் சேகரிக்கத் தொடங்கினார். கடந்த 29 ஆண்டுகளில் 121 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுப் பாதுகாத்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் 85 ரகங்களைப் பயிரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
121 நெல் ரகங்கள்; 21 ஏக்கரில் விதைப் பாதுகாப்பு!
கோடைக்குறுவை, செங்குறுவை, கருங்குறுவை, மொட்டைக்குறுவை, அறுபதாங்குறுவை உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார்.
ஆற்காடு கிச்சிலி, பூங்கார், நவரை, மதி முன்னி போன்ற பாரம்பரிய ரகங்களும் இவரது பண்ணையில் இடம்பெற்றுள்ளன.
சுமார் 21 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் ஒரு தனித்துவமான மரபணுப் பண்பு இருக்கிறது. சில ரகங்கள் வெள்ளத்தைத் தாங்கும். சில வறட்சியை எதிர்கொள்ளும். சில குறிப்பிட்ட மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் சிறப்பாக வளரும்.
இத்தகைய மரபணுப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது எதிர்கால வேளாண்மைக்கு மிகவும் அவசியம்.
பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து நாம் ஏற்கெனவே எழுதியுள்ள
இதற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு.பல்கலைக்கழக நெல் ரகங்களுக்கும் விதை ஆதாரம்!
சித்தர் பாதுகாத்து வந்த பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன பயிர் மேம்பாட்டுக்கும் பயன்பட்டுள்ளன.
குறிப்பாக, சீரகச் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரகங்கள் மேம்படுத்தப்பட்ட நெல் ரகங்களை உருவாக்குவதற்கான மரபணு ஆதாரங்களில் இடம்பெற்றுள்ளன.
ஏடிடி 47, ஏடிடி 49, விஜிடி 1 போன்ற ரகங்களை உருவாக்குவதில் சீரகச் சம்பாவின் பங்களிப்பு இருந்துள்ளது. அதேபோல், கருப்புக் கவுனி ரகத்தைப் பெற்றோர் ரகமாகப் பயன்படுத்தி கோ 57 என்ற நெல் ரகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் பழைய காலத்தின் அடையாளங்கள் மட்டுமல்ல; எதிர்காலப் பயிர் மேம்பாட்டுக்கும் பயன்படக்கூடிய மரபணு வளங்கள் என்பது தெளிவாகிறது.
விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள்!
விதைகளைத் தனது பண்ணையில் மட்டும் பாதுகாப்பதோடு சித்தர் நின்றுவிடவில்லை. மற்ற விவசாயிகளிடமும் அவை சென்றடைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வருகிறார். விதைகளைப் பெற்றவர்கள் அறுவடைக்குப் பிறகு அவற்றைப் பெருக்கி, மற்ற இரண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற முறையையும் பின்பற்றி வருகிறார்.
இதன் மூலம் விதைகள் ஒரே இடத்தில் முடங்கிவிடாமல் பல விவசாயிகளின் வயல்களுக்குச் சென்றடைகின்றன.
ஒரு விவசாயி பாதுகாக்கும் விதை, பல விவசாயிகளின் கைகளுக்குச் செல்லும்போதுதான் அதன் உண்மையான பயன் சமூகத்தைச் சென்றடைகிறது.
நம்மாழ்வார் விருதைத் தொடர்ந்து மத்திய அரசு விருது!
இயற்கை வேளாண்மையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2023–24ஆம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதை வழங்கியது.
இந்த விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது.
தற்போது மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (PPV&FRA) சார்பில், தாவர மரபணு பாதுகாப்பு விவசாயி விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மைச் செயலர் மிஸ்ரா இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். இதனுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவையும் வழங்கப்பட்டன.
இரண்டு விருதுகளும் அவரது நீண்டகால இயற்கை வேளாண்மை மற்றும் விதைப் பாதுகாப்புப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.
இயற்கை மருத்துவமும் இலவசச் சேவையும்!
கோ. சித்தரின் செயல்பாடுகள் நெல் சாகுபடியுடன் முடிந்துவிடவில்லை.
தமிழ்நேச்சருக்கு ஆதரவு தாருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? விவசாயிகள் நலன், இயற்கைப் பாதுகாப்பு, நல்வாழ்வு என அறம் சார்ந்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்கிறது தமிழ்நேச்சர்.
எங்கள் பயணம் தொடர, உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்குங்கள்.
♥ UPI செயலி மூலம் நன்கொடை வழங்க
Google Pay, PhonePe, BHIM அல்லது உங்கள் வங்கியின் UPI செயலியைத் திறந்து, இந்த UPI ID மூலம் பணம் அனுப்பலாம்.
அன்புடன், தமிழ்நேச்சர் குழு 💚
இயற்கை மருத்துவம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக இயற்கை மருத்துவச் சேவையும் வழங்கி வருகிறார்.
தற்போது இவரது இயற்கை மருத்துவம் தொடர்பான காணொளிகள் யூடியூப்பில் பிரபலமாகி வருகின்றன.
இயற்கை வேளாண்மை, பாரம்பரிய உணவு, மூலிகைகள், இயற்கை மருத்துவம் எனப் பல்வேறு தளங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
இயற்கை வேளாண்மையைப் பரப்புவதில் நம்மாழ்வார் வலியுறுத்திய கருத்துகளைப் பற்றியும்,
குறித்தும் நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம்.23 ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த கோ. சித்தர்!
கோ. சித்தரைப் பற்றி எழுதும்போது எனக்கு ஒரு பழைய நினைவு வருகிறது.
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மழை நாளில் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகிலிருந்த அவரது இயற்கைப் பண்ணைக்குச் சென்றிருந்தேன். அப்போது அவரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேட்டி எடுத்தேன்.
அந்தச் சந்திப்பை இன்றும் மறக்க முடியாது.
அப்போது இயற்கை வேளாண்மையில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும், பாரம்பரிய விவசாயத்தின் மீதான அக்கறையையும் நேரில் பார்க்க முடிந்தது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தளபதிகளில் ஒருவராகவும் திண்டுக்கல் ஆர்.எஸ். நாராயணனை வழிகாட்டியாகக் கொண்டும் இயற்கை வேளாண்மையில் தனது பயணத்தைத் தொடர்ந்தவர். இன்று பல விவசாயிகளுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு மழையில் சந்தித்த அந்த விவசாயி, இன்று 121 பாரம்பரிய நெல் ரகங்களின் பாதுகாவலராகவும், இரண்டு முக்கியமான விருதுகளைப் பெற்றவராகவும் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
விவசாயம் என்பது விளைச்சலைப் பெறுவது மட்டுமல்ல. மண்ணையும், விதையையும், மரபணு வளத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் விவசாயத்தின் முக்கியமான கடமை.
அந்தக் கடமையைத் தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறார் கோ. சித்தர்.
ஒரு தலைமுறை இழந்த விதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு விவசாயியும் உண்மையில் ஒரு மரபணுக் காவலர்தான்!
தஞ்சாவூர் கோ.சித்தரின் காணொளி பேட்டி; இந்த பேட்டி சொல்லும் அவரின் பாரம்பர்ய அறிவு வளத்தை…
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/
















மறுமொழி இடவும்