Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

ஆவின் ‘வெற்றி’ விருது நல்ல தொடக்கம்! ஆனால் நிர்வாகம் விவசாயிகள் கையில் வருமா?

ஆவின் ‘வெற்றி’ விருது வரவேற்கத்தக்கது! அமுல் மாதிரி விவசாயிகள் மையமான நிர்வாகம் வருமா?

பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ‘ஆவின் வெற்றி விருதுகள்’ அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், விருதுகளுடன் நின்றுவிடாமல் ஆவின் நிர்வாகத்தின் அடிப்படையையே மாற்ற வேண்டிய நேரம் இது.

Thank you for reading this post, don't forget to subscribe!

தமிழ்நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தில் ஆவினுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாகும் பால், கூட்டுறவு சங்கங்கள் வழியாக ஆவினை சென்றடைகிறது.

இந்நிலையில், சிறப்பாகச் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள், பெண் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்களை கௌரவிக்கும் வகையில் , சட்டப்பேரவையில் பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி‘ஆவின் வெற்றி விருதுகள்’ வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம்.

மேலும், பால் உற்பத்தியாளர் நலநிதியின் கீழ் விபத்து மரண இழப்பீடு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் புதிய ஆவின் பாலகங்களும் அமைக்கப்பட உள்ளன.

இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டியவைதான். ஆனால் ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.

ஆவின் யாருக்கான நிறுவனம்?

பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு நிறுவனமாக ஆவின் செயல்படுகிறது. அப்படியானால், அதன் நிர்வாகத்தில் விவசாயிகளின் குரல் எவ்வளவு வலுவாக இருக்கிறது?

இதுதான் இன்று பேச வேண்டிய முக்கியமான விஷயம்.

ஆவின் நிர்வாகம் அதிகாரிகளை மையமாகக் கொண்ட அமைப்பாக மட்டும் இருக்கக் கூடாது. விவசாயிகளை மையமாகக் கொண்ட கூட்டுறவு நிர்வாகமாக மாற வேண்டும்.

இதற்கு உலகில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று அமுல்.

ஆவின் வெற்றி விருதுகள் அறிவிப்பு
ஆவின் வெற்றி விருதுகள் அறிவிப்பு

அமுல் சொல்லும் மிகப்பெரிய பாடம்

அமுலின் வெற்றிக்கு பின்னால் ஒரு எளிய கொள்கை இருக்கிறது.

விவசாயி வெறும் பால் விற்பவர் அல்ல; அவர்தான் கூட்டுறவின் உரிமையாளர்.

அமுலின் கூட்டுறவு அமைப்பு கிராம அளவிலான பால் உற்பத்தியாளர் சங்கங்கள், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவிலான கூட்டமைப்பு என மூன்று அடுக்குகளில் செயல்படுகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் அடிப்படை உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.

இதன் பலன் என்ன?

விவசாயி உற்பத்தி செய்யும் பாலுக்கு சந்தை கிடைக்கிறது. பால் போன்ற அழுகக்கூடிய பொருளை விற்பனை செய்வதில் ஏற்படும் அச்சம் குறைகிறது. தினசரி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணப்புழக்கம் கிடைக்கிறது. அதே நேரத்தில், விவசாயிகளுக்கு நிறுவனத்துடன் உரிமை உணர்வும் உருவாகிறது.

அதனால்தான் அமுல் ஒரு பால் நிறுவனமாக மட்டும் இல்லாமல், விவசாயிகளின் கூட்டுறவு சக்தியாக வளர்ந்திருக்கிறது.

நுகர்வோரின் பணம் எங்கே செல்கிறது?

அமுலின் மற்றொரு முக்கியமான பாடம் அதன் வருவாய் பகிர்வு முறையில் உள்ளது.

GCMMF வெளியிட்ட தகவலின்படி, நுகர்வோர் செலுத்தும் ஒரு ரூபாயில் சுமார் 80 முதல் 85 சதவீதம் வரை பால் உற்பத்தியாளர் உறுப்பினர்களிடம் சென்றடையும் வகையில் அதன் கூட்டுறவு அமைப்பு செயல்படுகிறது.

இதுதான் கூட்டுறவின் உண்மையான நோக்கம்.

விவசாயி அதிகமாக உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பில் நியாயமான பங்கு அவருக்குக் கிடைக்க வேண்டும்.

அதற்காகத்தான் கூட்டுறவு.

அமுல் எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்தது?

இன்று அமுலை நிர்வகிக்கும் Gujarat Co-operative Milk Marketing Federation (GCMMF), 2024–25ஆம் ஆண்டில் ரூ.65,911 கோடி வருவாயை பதிவு செய்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 18,600 கிராம பால் கூட்டுறவு சங்கங்கள், 18 உறுப்பினர் ஒன்றியங்கள் மற்றும் 36.4 லட்சம் பால் உற்பத்தியாளர் உறுப்பினர்கள் இந்த அமைப்புடன் இணைந்துள்ளனர். தினசரி சுமார் 3.5 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இது ஒரே நாளில் உருவான வெற்றி அல்ல.

கிராமத்தில் பால் உற்பத்தியாளரிடம் தொடங்கி, மாவட்ட அளவிலான பதப்படுத்துதல், மாநில அளவிலான சந்தைப்படுத்தல் என ஒவ்வொரு நிலையிலும் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்தியதன் விளைவு.

மேலும், அமுல் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், பன்னீர், சாக்லேட், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துகிறது. இன்று இந்தியாவைத் தாண்டியும் அதன் சந்தை விரிவடைந்து வருகிறது.

ஆவினுக்கும் அது சாத்தியம்தானே?

நிச்சயமாக சாத்தியம்.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைவானவர்கள் அல்ல. சந்தையும் இருக்கிறது. நுகர்வோரும் இருக்கிறார்கள். ஆவினுக்கு வலுவான பெயரும் இருக்கிறது.

அப்படியானால் அடுத்த கட்டம் என்ன?

ஆவினை விவசாயிகளின் நிறுவனமாக மாற்ற வேண்டும்.

விவசாயிகளுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். நிர்வாக முடிவுகளில் அவர்களின் குரல் கேட்க வேண்டும். பால் கொள்முதல் விலை, தீவனச் செலவு, கால்நடை மருத்துவம், இனப்பெருக்க சேவைகள், காப்பீடு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், சந்தைப்படுத்தல் என அனைத்து முக்கிய முடிவுகளிலும் உற்பத்தியாளர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

அதேபோல், ஆவின் லாபம் என்பது அரசுக்கு கிடைக்கும் வருவாய் என்ற பார்வையை விட, அதன் உரிமையாளர்களான பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கருவி என்ற பார்வை வலுப்பெற வேண்டும்.

‘வெற்றி’ விருது உண்மையான வெற்றியாகட்டும்!

பால் உற்பத்தியாளர்களை கௌரவிப்பது நல்லது.

ஆனால், அவர்களை விருது பெறுபவர்களாக மட்டும் பார்க்காமல், ஆவின் நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் பார்க்க வேண்டும்.

‘ஆவின் வெற்றி விருது’ உண்மையான வெற்றியாக மாற வேண்டுமெனில், அதன் அடுத்த இலக்கு இதுவாக இருக்க வேண்டும்:

“அதிகாரிகள் மையமான ஆவினில் இருந்து, விவசாயிகள் மையமான ஆவினுக்கு!”

அமுல் நமக்கு ஒரு பாதையை காட்டியுள்ளது.

அந்தப் பாதையை தமிழ்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப ஆவினும் எடுத்துக்கொண்டால், பால் உற்பத்தியாளர்களின் வருமானம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரமும் வலுப்பெறும்.

விருதுகளை வழங்குவோம். பாராட்டுவோம். அதைவிட முக்கியமாக, ஆவின் கூட்டுறவின் அதிகாரத்தை அதன் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளிடம் கொண்டு செல்வோம்.

அதுவே ஆவினின் அடுத்த ‘வெற்றி’!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
X (Twitter)20
YouTube20
YouTube