Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

ஆனந்த் மகிந்திராவுக்கு 6 கேள்விகள்! சிறு விவசாயிகளைக் கடனாளியாக்கும் டிராக்டர்களுக்கு மாற்று இல்லையா?

ஆனந்த் மகேந்திரா மற்றும் தாய்லாந்தின் Boat Tractor

எஸ்கார்ட்ஸ் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் | தாய்லாந்தின் Boat Tractor தரும் மாற்றுச் சிந்தனை

Thank you for reading this post, don't forget to subscribe!

இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறிய நிலங்களையே வைத்துள்ளனர். ஆனால், விவசாய இயந்திரங்களின் விலை, பராமரிப்புச் செலவு, கடன் தவணை ஆகியவை அவர்களுக்குப் பெரிய சுமையாக மாறுகின்றன. இந்நிலையில், சிறு விவசாயிகளுக்கு ஏற்ற மலிவு விலை இயந்திரங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு விவசாய இயந்திர நிறுவனங்களுக்கு இல்லையா?

எஸ்கார்ட்ஸ் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்!

அண்மையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சண்டாப்புரா – ஆனேக்கல் சாலையில் அமைந்துள்ள ETDC (Escorts Training & Development Centre) பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்தேன்.

👇தொடர்ந்து படியுங்கள்…சுருக்கு

இந்த மையம், எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட் நிறுவனத்தின் EKAFI கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பயிற்சி மையம்...
அந்த பயிற்சி மையம்…

வாசலில் நுழைந்தது முதல் வரவேற்பு அறை வரை எனக்குக் கிடைத்த அனுபவம் ஏமாற்றமளித்தது. பார்வையாளர்களை வரவேற்பதிலும், அவர்களிடம் பேசுவதிலும் போதிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. கடமைக்காகப் பணியாற்றும் சூழலே எனக்குத் தென்பட்டது.

அங்கு பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டதாக அறிவிப்புப் பலகைகளில் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால், இந்த மையத்தின் மூலம் எத்தனை விவசாயிகள் உண்மையில் பயனடைந்துள்ளனர்? அவர்களின் உற்பத்திச் செலவு குறைந்துள்ளதா? வருமானம் உயர்ந்துள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

ஒரு மையத்தில் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மதிப்பிட முடியாது. அதேபோல், ஆதாரமின்றி CSR நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூற முடியாது. இருப்பினும், விவசாயிகளின் பெயரில் நடத்தப்படும் திட்டங்களின் உண்மையான பயன் வெளிப்படையாக மதிப்பிடப்பட வேண்டாமா? மேலும், இந்த மையத்தில் பீரங்கி போல டிராக்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். அதை பார்த்தவுடன் என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

90 சதவீத விவசாயிகளுக்கு ஏற்றதா டிராக்டர் பொருளாதாரம்?

2015–16 வேளாண் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட குறு மற்றும் சிறு விவசாயிகள், மொத்த நில உடைமைகளில் சுமார் 86.2 சதவீதமாக இருந்தனர். இரண்டு ஹெக்டேர் என்பது சுமார் 4.94 ஏக்கர்.

ஆதாரம்: மத்திய அரசின் வேளாண் கணக்கெடுப்பு தகவல்.

இத்தகைய சூழலில், ஒரு விவசாயி டிராக்டர் வாங்குவதற்கு பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. அதற்காக வங்கிக் கடன் அல்லது தனியார் நிதியை நாடுகிறார். டிராக்டர் வாங்கிய பிறகு தவணை, வட்டி, டீசல், பழுதுபார்ப்பு, உதிரிப்பாகங்கள், காப்பீடு எனச் செலவுகள் தொடர்கின்றன.

டிராக்டரைத் தனது நிலத்தில் மட்டும் பயன்படுத்தும் சிறு விவசாயிக்கு, அதன் முழுச் செலவையும் ஈடுகட்டுவது சிரமமாக இருக்கலாம். பிற விவசாயிகளின் நிலங்களில் வாடகைக்குப் பயன்படுத்தினால் வருமானம் கிடைக்கலாம். ஆனால், அதற்கும் வேலை கிடைப்பது, போட்டி, பராமரிப்புச் செலவு போன்ற சவால்கள் உள்ளன.

மிக முக்கியம்: இயந்திரம் விவசாயியின் உழைப்பையும் செலவையும் குறைக்க வேண்டும். புதிய கடன் சுமையை உருவாக்கக் கூடாது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதும் அவசியம். இதுகுறித்து விவசாயிகளின் வருமானம் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் பற்றிய தமிழ்நேச்சர் கட்டுரையையும் வாசிக்கலாம்.

காந்தியின் சிந்தனை: இந்தியாவுக்கு ஏற்ற தொழில்நுட்பம் எது?

மகாத்மா காந்தி, கிராமப்புறப் பொருளாதாரம், சுயசார்பு, கால்நடை வளம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர். பெரிய இயந்திரங்கள் இந்திய கிராமங்களுக்குப் பொருத்தமானவையா என்ற விவாதத்தில் அவரது சிந்தனைகளை நினைவுகூர வேண்டியிருக்கிறது.

டிராக்டர் சாணி போடாது

சிறந்த காந்தியவாதியும், பொருளாதார நிபுணருமான ஜே.சி. குமரப்பா அவர்கள் எந்திரக் கலப்பைக்கும் மாடுகள் பூட்டிய கலப்பைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அவர் தெரிவித்த கருத்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது. வெளிநாட்டு ஆய்வாளர் குமரப்பாவிடம் “நீங்கள் எந்திரங்களுக்கு எதிரியா… டிராக்டர் பயன்படுத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என வினவினார். குமரப்பா சிரித்துக்கொண்டே ‘ஏன் என்றால் டிராக்டர் சாணி போடாது!’ என்றாராம்.

இன்றைய விவாதத்தின் நோக்கம் டிராக்டர்களை முற்றிலும் நிராகரிப்பதல்ல. பெரிய நிலங்கள், அதிக வேலைப்பளு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சூழல்களில் அவை பயனுள்ளதாக இருக்கலாம். அதேநேரத்தில், சிறிய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு எல்லா நேரங்களிலும் பெரிய டிராக்டர்தான் சிறந்த தீர்வா என்பதையும் ஆராய வேண்டும்.

தாய்லாந்தின் Boat Tractor: சிறு விவசாயிகளுக்கு மாற்றாகுமா?

தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் படகு வடிவ உழவு இயந்திரங்கள் கவனிக்கத்தக்கவை. இத்தகைய இயந்திரங்கள் சில நெல் வயல் சூழல்களில் உழவு மற்றும் சேற்று நிலங்களில் இயங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இயந்திரங்களை இந்தியாவின் மண் தன்மை, நீரின் அளவு, வயலின் அளவு, பயிர் முறை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வடிவமைத்தால் சிறு விவசாயிகளுக்கு உதவக்கூடும். ஆனால், அவற்றின் விலை, எரிபொருள் செலவு, பாதுகாப்பு, பராமரிப்பு, செயல்திறன் ஆகியவற்றை இந்திய வயல்களில் சோதித்துப் பார்க்க வேண்டும்.

இந்த மாற்று இயந்திரம் குறித்த வீடியோவை கடந்த ஆண்டே எங்கள் Tamil Farming TV யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளோம். பவர் டில்லர், ரோட்டா வேட்டர்… போன்றவை இந்தியா விவசாயிகளுக்கு ஏற்றதாக இல்லை.

வீடியோவைப் பார்க்க: தாய்லாந்தின் Boat Tractor – Tamil Farming TV

மேலும், ஒவ்வொரு விவசாயியும் தனியாக இயந்திரம் வாங்க வேண்டிய அவசியமில்லை. கிராம அளவிலான இயந்திர வாடகை மையங்கள், கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பலரும் ஒரே இயந்திரத்தைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.

ஆனந்த் மகிந்திராவுக்கு ஆறு கேள்விகள்!

டிராக்டர் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திராவிடம் சிறு விவசாயிகளின் நலன் சார்ந்து சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1. சிறு விவசாயிகளுக்கான மலிவு விலை இயந்திரம் ஏன் கூடாது?

இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காகக் குறைந்த விலையில், எளிதில் இயக்கக்கூடிய சிறிய உழவு இயந்திரங்களை உருவாக்க முடியாதா?

2. தாய்லாந்தின் Boat Tractor மாதிரியை இந்தியாவில் ஆய்வு செய்யலாமே?

இந்தியாவின் நெல் வயல்களுக்கு ஏற்றவாறு அந்தத் தொழில்நுட்பத்தை மாற்றியமைத்து, வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து சோதனை செய்ய முடியாதா?

3. விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வணிக மாதிரி ஏன் உருவாக்கக் கூடாது?

இயந்திரத்தை விற்பனை செய்வதுடன் நிற்காமல், குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கும் திட்டங்களை விரிவுபடுத்த முடியாதா?

4. கிராம அளவில் இயந்திர வாடகை மையங்களை உருவாக்க முடியாதா?

விவசாயிகள் குழுக்களுக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் சிறிய இயந்திரங்களை வழங்கி, பலர் பகிர்ந்து பயன்படுத்தும் முறையை ஊக்குவிக்க முடியாதா?

5. CSR திட்டங்களின் உண்மையான பயனை வெளிப்படுத்த முடியாதா?

பயிற்சி பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவர்களில் எத்தனை பேர் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு செலவு மிச்சமாகிறது, வருமானத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் ஆண்டுதோறும் வெளியிட முடியாதா?

6. விவசாயிகளின் தேவைக்கேற்ப இயந்திரங்களை வடிவமைக்க விவசாயிகளையே பங்கேற்கச் செய்ய முடியாதா?

சிறு விவசாயிகள், பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டு, அவர்களுடைய வயல்களில் நேரடியாகச் சோதனை செய்து, குறைந்த விலையில் இயந்திரங்களை உருவாக்க முடியாதா?

CSR திட்டங்கள்: சுவரொட்டிகளைக் கடந்து செல்ல வேண்டும்!

எஸ்கார்ட்ஸ் குபோடா போன்ற நிறுவனங்கள் விவசாயிகளுக்கான பயிற்சிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், பயிற்சி நடத்தப்பட்டதாக அறிவிப்புப் பலகையில் தெரிவிப்பது மட்டுமே வெற்றியின் அளவுகோலாக இருக்க முடியாது.

விவசாயிகளுக்கு எந்தத் தொழில்நுட்பம் தேவை? அவர்களுடைய உற்பத்திச் செலவு குறைந்ததா? கடன் சுமை குறைந்ததா? பயிற்சிக்குப் பிறகும் அவர்களுக்குத் தொடர்ந்து உதவி கிடைக்கிறதா? இவற்றுக்கான பதில்களே திட்டத்தின் உண்மையான பயனை வெளிப்படுத்தும்.

இதுகுறித்து தமிழ்நேச்சரில் வெளியாகியுள்ள விவசாயிகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் சாகுபடி வெற்றிக் கதை போன்ற கட்டுரைகளையும் பார்க்கலாம். ஒரு தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, அதன் நடைமுறை விளைவுகளை ஆராய்வது அவசியம்.

அதேபோல், டிராக்டர் நிறுவனங்களை எதிரிகளாகப் பார்ப்பதும் தீர்வல்ல. விவசாயிகளின் பொருளாதார நிலைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்க நிறுவனங்களின் திறனைப் பயன்படுத்த வேண்டும்.

விவசாயிக்கு இயந்திரம் வேண்டும்; கடன் வலை வேண்டாம்!

இந்திய விவசாயத்திற்கு நவீனத் தொழில்நுட்பம் தேவை. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் சிறு விவசாயிகளின் நில அளவு, வருமானம், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

ஒரு விவசாயி வாங்கும் இயந்திரம் அவருடைய உழைப்பைக் குறைக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்த வேண்டும். மாறாக, தவணை கட்டுவதற்காகவே விவசாயி தொடர்ந்து உழைக்க வேண்டிய நிலையை உருவாக்கக் கூடாது.

ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட தொழில்துறையினர், மலிவு விலைச் சிறிய இயந்திரங்கள், பகிர்ந்து பயன்படுத்தும் வாடகை முறை, இந்திய வயல்களுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயியின் வெற்றி என்பது எத்தனை டிராக்டர்கள் விற்பனையாகின்றன என்பதில் இல்லை. அந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் விவசாயியின் வாழ்க்கை எவ்வளவு மேம்படுகிறது என்பதில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email3
Facebook20
X (Twitter)20
YouTube20
YouTube